வேலூர்: வேலூர் சிறையில், "பெல்ட்' தயாரிக்கும் பிரிவு, ஏப்., 1 முதல் துவங்கப்படுகிறது.
தமிழகத்தில், சென்னை புழல், வேலூர், சேலம், பாளையங்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஒன்பது இடங்களில், மத்திய சிறைகள் உள்ளன. இங்கு, ஒரே நேரத்தில், 25 ஆயிரம் கைதிகளை அடைத்து வைக்கலாம். தற்போது, 14 ஆயிரம் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், வெளியே வந்த பின், குற்றங்கள் செய்யாமல் இருக்க, அவர்களுக்கு, சிறையில் பலவிதமான தொழில் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. கைதிகள் வெளியே வரும்போது, வங்கிக் கடன் வாங்கி, பயிற்சி பெற்ற தொழில்களை செய்து, சிறு தொழில் அதிபர் ஆக, வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
வேலூர் மாவட்டத்தில், தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், வேலூர் சிறையில் காலணி தயாரிக்கும் தொழிற் கூடம், நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இங்கு சிறை காவலர்கள், தீயணைப்பு துறையினருக்கு தேவையான காலணிகள் தயாரிக்கப்படுகின்றன. ஆயுள் தண்டனை, 10 ஆண்டு தண்டனை பெற்ற, 60 கைதிகளுக்கு, ஆறு மாதம் பயிற்சி கொடுத்து, தயாரித்து வருகின்றனர். நடப்பாண்டில், தமிழக சீருடை பணியாளர்களுக்கு, 1 லட்சத்து 5,500 ஜோடி காலணிகள், வினியோகம் செய்துள்ளனர். இதுவரை, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள காலணிகள் தயாரித்துள்ளனர். இதன் மூலம், ஒவ்வொரு கைதிக்கும் மாதம், 5,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. இங்கு வேலை செய்யும் கைதிகள், திறன் மிக்கவர்கள், குறைந்த திறன் மிக்கவர்கள், திறன் அற்றவர்கள் என, தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். திறன் மிக்க கைதிகளுக்கு தினம், 100 ரூபாயும்; குறைந்த திறன் கொண்ட கைதிகளுக்கு, தினம், 80; திறன் அற்ற கைதிகளுக்கு, 60 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்கள் வேலை செய்த நாளை, மாதா மாதம் கணக்கிட்டு, அவர்களுக்கு உண்டான மொத்த தொகையில், 50 சதவீதம், தொழிற் கூடம் பராமரிப்புக்கும், கைதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 20 சதவீதமும்; மீதமுள்ள, 30 சதவீதத்தில் பாதி, கைதிகளின் குடும்பத்திற்கும், மீதத் தொகை, கைதிகளின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படுகிறது. தற்போது, அதிக எண்ணிக்கையில் காலணி தயாரிக்க, "ஆர்டர்' பெறப்பட்டுள்ளதால், 10 லட்சம் ரூபாய் செலவில், காலணி தொழிற் கூடம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
பொது மக்கள், போலீசார், சிறைத் துறையினர், ரயில்வே துறையினர் அணியும், "பெல்ட்'டுகள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 2.50 லட்சம் ரூபாயில், இயந்திரம் வாங்கப்பட்டு உள்ளது. இதனால் மேலும், 100 கைதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சோதனை ரீதியாக, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், "பெல்ட்'டுகள் தயாரிக்கப்பட்டன. இது நன்றாக இருப்பதால், ஏப்., 1ம் தேதி முதல், முழு வீச்சில், "பெல்ட்' தயாரிக்கும் பணி துவங்கப்படும். "தொடர்ந்து போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கி குண்டுகள் வைக்கும், "பவுச்'களும் தயாரிக்கப்படும்' என, சிறைத் துறை அதிகாரிகள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.