தமிழக ஊர்க்காவல் படையில் பணியாற்றுபவர்களை, போலீசில் பற்றாக்குறையாக உள்ள டிரைவர் பணியிடம், வாரன்ட் வினியோகம், தனிநபர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும், எஸ்.பி.,க்களுக்கு, ஊர்க்காவல் படை, ஏ.டி.ஜி.பி., முத்துக்கருப்பன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக போலீசாருக்கு உதவுவதற்காக, மாநகர், மாவட்டத்தின் முக்கிய நகரங்களில், ஊர்க்காவல் படை செயல்படுகிறது. தமிழகம் முழுவதும், ஊர்க்காவல் படை வீரர்களின் எண்ணிக்கை, 14, 250 ஆக, இருந்தது, தற்போது,16,145 ஆக, உயர்த்தப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு:
கடந்த ஆண்டு வரை, ஊர்க்காவல் படை வீரர்களுக்கான, ஒருநாள் சம்பளம், 65 ரூபாய்; சலவை அலவன்ஸ், இரண்டு ரூபாய் சேர்த்து, 67 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இது,152 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படையில் உள்ளவர்களுக்கு, ஆண்டுக்கு, 200 நாள் மட்டும் பணி வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும், போக்குவரத்தை சரி செய்தல், திருவிழா, பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல், தலைவர்கள் வருகையின் போதும், அரசியல் கட்சிகள், சங்கங்களின் பொதுக்கூட்டம், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் நேரங்களில், பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், தமிழக போலீசில், 19,866 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணி மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையில், நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். இந்தக் குறையை சரி செய்யும் வகையில், தற்போது, 12,208 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பயிற்சியை முடித்து பணிக்கு வர, இன்னும் எட்டு மாதம் உள்ளது.ஆனால், இந்த கால கட்டத்துக்குள், பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, இயற்கை எய்துபவர் என, காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், போலீசில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, 25 ஆயிரத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறை அதிகரிப்பு:
அதே நேரத்தில் போலீசாருக்கு, உதவுவதற்காக, அறிவிக்கப்பட்டுள்ள இளைஞர் படைக்கான ஆள் தேர்வு இன்னும் துவங்கவில்லை. இதன் காரணமாக, பல மாநகர, மாவட்ட போலீசில் பற்றாக்குறை அதிகரிப்பதால், போலீசாரின் பணி அதிகரித்து வருகிறது. இதில், சில நேரங்களில் மாநகர ஆயுதப்படை, அதிகாரிகளின் வாகனங்களை இயக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் வாரன்டுகளை வழங்க முடியாமல் போலீசார் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த குறைகளையும், அதற்கான தற்காலிகமாக தீர்வு காணும் வகையில், போலீசார் மேற்கொள்ளும் பணிகளை, ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி போலீசில் டிரைவர் பற்றாக்குறை நிலவும் பட்சத்தில், உடனடியாக, ஊர்க்காவல் படையின் ஏரியா கமாண்டர், எஸ்.ஐ., அந்தஸ்திலான அதிகாரிகளின் ஒப்புதலுடன், ஊர்காவல் படையில் டிரைவிங் லைசன்ஸ் உள்ளவர்களை, டிரைவராக பயன் படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமின்றி, போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து வாரன்ட் வழங்குதல், தனிநபர் பாதுகாப்புக்கும் ஊர்க்காவல் படையினரை, பயன் படுத்திக் கொள்ள, ஊர்க்காவல் படை, ஏ.டி.ஜி.பி., முத்துக்கருப்பன் அனுமதி அளித்துள்ளார்.
இது பற்றிய சுற்றறிக்கை, அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர கமிஷனர், துணை கமிஷனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, ஊர்க்காவல் படையில் பணியில் உள்ள வீரர்களில், டிரைவிங் லைசன்ஸ் பெற்றுள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள, 16,145 பேரில், 20 சதவீதத்தினர், அதாவது, 3,335 பேர் டிரைவர் லைசன்ஸ் வைத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இனி, இவர்கள் போலீசின் வாகனங்களை இயக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அரசின் இந்த அறிவிப்பு, ஊர்க்காவல் படை வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த ஊர் காவல் படையின் உபயோகத்தை இன்றுவரை நாம் சரியாக உபயோகிக்க வில்லை. மற்ற நாடுகளில் இந்த ஊர் காவல்படை மிகவும் நன்றாக போலிசுக்கு இணையாக உபயோகப்படுத்துகிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகட்டும், போலிஸ் ஸ்டேஷன் பணியாகட்டும், ரோந்து பணியாகட்டும் இவர்கள் நன்றாக செயல் படுகிறார்கள். எத்தனையோ நாடுகள் நம்மை விட பல ஆண்டுகள் முன்னேறி சென்றுகொண்டிருக்கும் வேளையில் நாம் எப்பதுமே பின் தங்கி உள்ளது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதை நான் பிறந்தது முதல் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் அதே சமயம் கெட்ட விஷயத்தில், ஊழல் போன்ற விஷயத்தில், கெடுதலை வழி காட்டும் தலைவர்களை ஆதரிக்கும் விஷயத்தில், பொது வாழ்வில் தூய்மை இல்லாதவர்களை ஆட்சியில் அமரவைக்கும் விஷயத்தில் முன்னே செல்கிறோம். இதுவே நமது இன்றைய முன்னேற்றமடையாமல் வறுமையில் உழளுவதற்கு காரணம். நன்றாக சிந்தித்து செயல்படுவோம் நயவஞ்சக காரர்களை, சுயநல புலிகளை பொது வாழ்வில் இருந்து அப்புறப்படுத்துவோம்.
மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் தான் அரசு காலிப்பணிஇடங்களை மானிலங்கள் அதிகரித்து காட்ட வேண்டும் என்று வற்புறுத்தியதின் விளைவு தான், இப்போது எல்லா துறைகளிலும் காலிபணியிடங்கள் அதிகமாக இருக்கின்றன. தமிழக அரசு இந்த இரண்டு வருடங்களில் இரண்டு லட்சம் பணி இடங்களை நிரப்பியுள்ளன. இன்னும் இதுபோல் நான்கு மடங்கு பணியிடங்கள் நிரப்பப் படவேண்ட்ம். நிரப்புவதற்குள் ஓய்வு காரணமாக காலி இடங்கள் அதிகரிக்கத்தான் செய்யும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.