நிலத்தடி நீர்மட்டம் குறைவு :பறவைகள் வரத்து குறைந்தது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீர்மட்டம் குறைவு :பறவைகள் வரத்து குறைந்தது

Added : மார் 04, 2013

திருவாரூர் மாவட்டம், வடுவூர் ஏரிக்கு பறவைகள் வருகையை அதிகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிஅருகே, வடுவூர் மற்றும் உதயமார்த்தாண்டபுரம் பகுதியில், பறவைகள் சரணாலயம் உள்ளது. இப்பகுதிக்கு வரும் பறவைகள் குறித்து, ஜனவரி மாதத்தில் வனத் துறை, ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தி, பறவைகள் வருகை மற்றும் அதன் வகைகளை பதிவு செய்கின்றனர். இந்தாண்டு, வறட்சி மிகுதியால், இரு சரணாலயமும் நீர் இல்லாமல் காய்ந்துள்ளன. இதனால், பறவைகள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இப்பகுதிகளில் ஜனவரி மாதம் கணக்கெடுப்பு நடத்தவில்லை. பிப்ரவரி 21, 22ம் தேதிகளில், வனத் துறையினருடன் இணைந்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை பேராசிரியரும், பறவைகள் ஆராய்ச்சியாளருமான, சிவசுப்ரமணியன் மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள், மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், கணக்கெடுப்பில் ஈடுபட்டதில், கடந்த ஆண்டை விட, 13 ஆயிரம் பறவைகள் வருகை குறைந்துள்ளது.

ஆராய்ச்சியாளர் சிவசுப்ரமணியன் கூறியதாவது: வடுவூர் மற்றும் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில், நான்கு வகை கொக்குகள், செங்கால் நாரை, நத்தை கொத்தி நாரை, புள்ளி மூக்கு வாத்து, பாம்பு தாரா, சிறிய நீர்காகம், உள்ளான் வகைகள், வக்கா என்கிற ராக்கொக்கு, பொட்டடையான், உன்னி கொக்கு, முக்குளிப்பான் என, 41 வகையான பறவைகளுடன் நீலவால் நாரை, சிறவி வகைகள், ஊசிவால் வாத்து, தாமரை இலை கோழி, மகிழங்கால் கோழி, நாமக்கோழி உள்ளிட்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. சைபீரியா, ரஷ்யா, திபெத் உள்ளிட்ட நாடுகளின் பறவைகளும், இந்த சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன. கடந்த ஆண்டு, 15 ஆயிரம் பறவைகள் வந்தது. இந்த ஆண்டு, 2,000 பறவைகள் மட்டுமே வந்துள்ளன. உதயமார்த்தாண்டபுரத்தில், இந்தாண்டு, 10 ஆயிரம் பறவைகள் வருகை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வடுவூர் ஏரி, 1997ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவித்து, இரு பார்வை மாடங்கள் அமைக்கப்பட்டன. அதன் பின், பறவைகள் வந்து செல்லும் வகையில், எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வழி வகையும் மேற்கொள்ளாததால், தற்போது காய்ந்து வருகிறது. ஏரியை ஆழப்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பறவைகள் வருகையை அதிகரித்து சுற்றுலா பயணிகளை கவரவும், சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X