சென்னை: கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு, மகளிர் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கைக்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ராமலிங்கம்-தங்கம்மாள் தம்பதியினர். சகோதரர் வீட்டுக்கு, தங்கம்மாள் காலையில் புறப்பட்டுச் சென்றார். பில்லான்குளம்-கைகளத்தூர் சாலையில், ஒரு வேப்ப மரத்தில், தங்கம்மாள், தூக்கில் தொங்கினார். அவர் அணிந்து இருந்த கம்மல், மூக்குத்தி, தாலி செயின், கொள்ளை போயிருந்தது. இந்தச் சம்பவம், 2008, ஏப்ரல், 15ம் தேதி நடந்தது. இவ்வழக்கில், பாலு என்கிற பாலமுருகன் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த, பெரம்பலூரில் உள்ள மகளிர் கோர்ட், பாலுவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த ஆண்டு, மே மாதம், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், அப்பீல் மனுவை, பாலு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதிகள் பாஷா, தேவதாஸ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஏ.பத்மநாபன் ஆஜரானார். "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், போலீஸ் அதிகாரிகளிடம் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை, அவருக்கு எதிராக பயன்படுத்துவதற்கு, சட்டத்தில் தடை உள்ளது. உண்மை நிலவரத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், அந்த வாக்குமூலத்தில் உள்ள தகவல்களை பயன்படுத்திக் கொள்ளலாம். சாட்சியங்கள் சட்டப்பிரிவை, மகளிர் கோர்ட் தவறாகப் புரிந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை, முக்கிய அம்சமாகக் கருதி, அவருக்கு எதிராகவே மகளிர் கோர்ட் பயன்படுத்தி உள்ளது. கூடுதலாக முக்கிய ஆதாரங்கள் இல்லாமல், பாலுவின் வாக்குமூலத்தின்படி, தங்க நகைகள் கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படுவதன் அடிப்படையில், அவருக்கு எதிராக தீர்ப்பு அளித்தது சரியல்ல. ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், பாலுவின் வீட்டில் இருந்து, நகைகள் கைப்பற்றப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுவது, உண்மைக்குப் புறம்பானது. அவரிடம் இருந்து நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது நிரூபிக்கப்படவில்லை. கொலையிலோ, கொள்ளையிலோ, திருடு போன பொருட்கள் கைப்பற்றப்பட்டதிலோ, பாலுவைத் தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை. எனவே, பாலுவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.