மாறுமா மாநகராட்சி? முதல் பெண் கமிஷனரிடம் மக்கள் எதிர்பார்ப்பு... சுதந்திரமாக செயல்பட சூழ்நிலை உருவாகுமா?| Dinamalar

தமிழ்நாடு

மாறுமா மாநகராட்சி? முதல் பெண் கமிஷனரிடம் மக்கள் எதிர்பார்ப்பு... சுதந்திரமாக செயல்பட சூழ்நிலை உருவாகுமா?

Added : மார் 05, 2013 | கருத்துகள் (5)
Advertisement
மாறுமா மாநகராட்சி? முதல் பெண் கமிஷனரிடம் மக்கள் எதிர்பார்ப்பு... சுதந்திரமாக செயல்பட சூழ்நிலை உருவாகுமா?

கோவை:மாநகராட்சிக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள பெண் கமிஷனர், ஆளும்கட்சியினரின் தலையீட்டை மீறி, சுதந்திரமாக செயல்பட முடியுமா என்ற எதிர்பார்ப்பு, கோவை மக்களிடம் எழுந்துள்ளது.கோவை மாநகராட்சிக்கு முதன் முறையாக பெண் கமிஷனர் பொறுப்பேற்றுள்ளது, மக்களிடம் மகிழ்ச்சியையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி என, எல்லாவற்றிலும் சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாக உருவெடுத்துள்ள கோவை மாநகராட்சியின் தேவைகளும், பிரச்னைகளும் ஏராளம். முதலில், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது முக்கியம்; அதே வேளையில், இந்த நகரின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தாமதப்படுத்தக்கூடாது.புதிய கமிஷனர் லதா முன் காத்திருக்கும் சவால்களில் முக்கியமானது, ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டப் பணிகளை சிறப்பாக முடிப்பதுதான். பாதாள சாக்கடைத் திட்டம், பில்லூர் 2வது குடிநீர்த் திட்டம், மழை நீர் வடிகால் மற்றும் பி.எஸ்.யு.பி., ஆகிய திட்டங்களை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டுமென்பதே மக்களின் முதல் எதிர்பார்ப்பு. ஏனெனில், பாதாள சாக்கடைத் திட்டம் தாமதமாகி வருவதாலும், பணி முடிந்த இடங்களில் ரோடுகள் போடப்படாததாலும் மக்கள் படும் அவதிகளை யாராலும் எளிதில் விளக்கிவிட முடியாது.பில்லூர் 2வது குடிநீர்த் திட்டம் முடிந்து விட்டாலும், இத்திட்டத்தால் விரிவாக்கப்பகுதிகளுக்கு என்ன பலன் கிடைக்குமென்பது மிகப்பெரிய கேள்விக்குறி. குறிப்பாக தெற்கு மண்டலத்தின் பல பகுதிகளில் மாதமிரு முறை அல்லது 3 முறை என்கிற அளவில்தான் குடிநீர் வினியோகம் உள்ளது. ஆனால், பழைய மாநகராட்சிப் பகுதியில் வி.ஐ.பி.,க்கள் மற்றும் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், நகருக்குள் உள்ள ஓட்டல்களிலும் பவானி நீரும், சிறுவாணி நீரும் "தாராளமயமாக' பயன்படுத்தப்படுகின்றன; இந்த பாரபட்சத்தை நீக்குவது, மிகமிக அவசியமாகும்.மழை நீர் வடிகால் பணியை நேரில் ஆய்வு செய்தால் மட்டுமே, அதில் நடக்கும் குளறுபடிகளையும், தரமின்மையையும் புதிய கமிஷனரால் புரிந்து கொள்ள முடியும். சாலைகளில் வழிந்தோடும் மழைநீரை, குளம் போன்ற நீர் நிலைகளுக்குக் கொண்டு செல்வதே இந்த வடிகால் அமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம். ஆனால், இதுவரை இந்த வடிகால் எங்குமே தொடர்ச்சியாக அமைக்கப்படவில்லை. இவற்றை நீர்நிலைகளுக்கான கால்வாய்களுடனும் இணைக்காவிட்டால், இதற்காக செலவிடப்படும் பல கோடி ரூபாய் வீண்தான்.பி.எஸ்.யு.பி., திட்டத்தில் 3,840 அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டும் பணியை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த வீடுகளை, பயனாளிகளிடம் ஒப்படைக்கும் பொறுப்பு, மாநகராட்சியுடையது. எனவே, பலப்படுத்தும் பணி, பிற அடிப்படை வசதிகளையும் விரைவாக முடித்து, பயனாளிகளிடம் ஒப்படைக்க புதிய கமிஷனர் முயற்சிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, நீர் நிலைகளில் உள்ளவர்களை அங்கு குடியமர்த்தி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முடியும்.மாநகராட்சி வசமுள்ள 8 குளங்களை மேம்படுத்தும் திட்டமும் "கானல் நீர்' போல தள்ளிக்கொண்டே செல்கிறது. அழிந்து வரும் இந்த குளங்களைக் காப்பாற்ற வேண்டுமென்பது, நகரிலுள்ள சூழல் ஆர்வலர்களின் ஒருமித்த வேண்டுகோள். இவற்றைத் தவிர்த்து, மக்கள் போக்குவரத்தை உருவாக்கும் பொருட்டு, "மெட்ரோ ரயில்' அமைப்பதற்கான ஆய்வுகளை வேகப்படுத்துவது, நகருக்குள் இருக்கும் போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்கும் பொருட்டு, நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைப்பது, சுரங்க நடைபாதை, மல்டி லெவல் பார்க்கிங் போன்ற திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.தாவரவியல் பூங்கா, புதிய வன உயிரினப் பூங்கா ஆகியவற்றை அமைக்க வேண்டுமென்பதும் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு. இதனையும் அரசிடம் முறையாக எடுத்துச் செல்லும் முயற்சிகளை புதிய கமிஷனர் மேற்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் முன்பாக, பிறப்பு, இறப்புச் சான்று, கட்டட அனுமதி, சொத்து வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு என மக்கள் தொடர்புடைய எல்லாப் பணிகளிலும் இரண்டறக் கலந்திருக்கும் லஞ்சத்தை ஒழிப்பதற்கு அல்லது குறைந்தபட்சமாகக் குறைப்பதற்கு கமிஷனர் லதா முயற்சி எடுத்தால், மக்கள் மகிழ்ச்சியுறுவார்கள்.மாமன்றத்தின் அதிகாரம், ஆளும்கட்சியினரின் தலையீடு, ஆணாதிக்கம் இவற்றையெல்லாம் தாண்டி, புதிய பெண் கமிஷனரால் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பது விடை தெரியாத கேள்வி. கடந்த நிதியாண்டில், "சிறந்த மாநகராட்சி'க்கான விருதை கோவை மாநகராட்சி "வாங்கியதில்' இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்; மக்களுக்கு அதில் முழு திருப்தியில்லை என்பதுதான் உண்மை. வரும் ஆண்டில், அதே விருதை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெறும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தை புதிய கமிஷனர் மாற்றியமைக்க வேண்டுமென்பதுதான் கோவை மக்களின் கோரிக்கை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manaaji - Coimbatore,இந்தியா
06-மார்-201323:27:12 IST Report Abuse
manaaji "Coimbatore Corruption Office" என்று அறியப்படும் கோவை மாநகராட்சி Coimbatore Corporation Office என்று கூறப்படும் அளவிற்கு மாற்றம் கொண்டு வருவாரா ? ஆளும் கட்சியினரின், கவுன்சிலர்களின் கொட்டத்தையும் அடக்குவாரா என்று பொறுத்திருந்து பாப்போம்.
Rate this:
Share this comment
Cancel
rahul kumar - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
06-மார்-201314:37:22 IST Report Abuse
rahul kumar wish you all a sucesses madam...may god bless you
Rate this:
Share this comment
Cancel
sumathi - Tamilnadu,இந்தியா
05-மார்-201313:45:53 IST Report Abuse
sumathi       மாநகர ஆட்சியர் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துக்கள் ஆல் தி பெஸ்ட்
Rate this:
Share this comment
Cancel
B.Nithya - கோயம்புத்தூர்,இந்தியா
05-மார்-201313:18:28 IST Report Abuse
B.Nithya Good Afternoon Madam, Congratulations Madam, Wish U all Success in Ur Life. Thank You Madam
Rate this:
Share this comment
Cancel
Jayabalan Mavanna - Tiruvannamalai,இந்தியா
05-மார்-201308:13:27 IST Report Abuse
Jayabalan Mavanna மாநகர ஆட்சியர் சிறப்பாகச் செயல்பட உதவும் வகையில் எழுதப்பட்ட நல்ல தகவல் தொகுப்புக் கட்டுரை. பாராட்டுகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை