மதுரை: மதுரை அருப்புக்கோட்டை ரோடு மண்டேலா நகர் சந்திப்பில் அனுமதியின்றி ஆக்கிரமித்துத்துள்ள கடைகள், ஆட்டோ ஸ்டாண்ட் போன்றவையால், ரோட்டை முழுமையாக பார்க்க முடியாமல், மரண பீதியில் வாகனங்கள் கடந்து செல்லும் ஆபத்து உள்ளது.இச்சந்திப்பில் நிலவும் விபரீதத்தை தெரிந்தும், நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்வருவதில்லை என, பொதுமக்கள், பயணிகள் புலம்பித் தவிக்கின்றனர்.தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள், அவனியாபுரம், வில்லாபுரம், சிம்மக்கல், கீழவாசல், கோரிப்பாளையம் போன்ற நகரின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல, மாட்டுத்தாவணி சென்று செல்வதை விட, மண்டேலாநகர் சந்திப்பில் இருந்து, பெருங்குடி, வில்லாபுரம் வழியாக செல்வதால் தூரமும், பயண நேரமும் குறையும். மேலும், மதுரை விமான நிலையம் செல்வதற்கும் இதுதான் மெயின் பாதை.இதேபோல், அருப்புக்கோட்டை, திருச்சுழி, கோவில்பட்டி, சிவகாசி, சாத்தூர் ஆகிய தென் மாவட்ட பகுதிகளுக்கு, வேலை நிமித்தமாக செல்வதற்கு, இப்பகுதி மக்கள் மண்டேலா நகர் சந்திப்பில் இருந்தே பஸ் ஏறவேண்டும். எனவே, இப்பகுதிக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் எவ்வித திட்டமிடலுமின்றி ரோடு அமைந்துள்ளது. சந்திப்பில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் ரோட்டில், இடது புறத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் பெட்டி கடைகள், டீ கடைகள் இளநீர் கடை, ஆட்டோ ஸ்டாண்ட் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. பஸ்கள், கார்கள் நின்று செல்லமுடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புக்கள் உள்ளதால், பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிடுவதற்காக ஒரு பஸ் நின்றிருக்கும்போது, அதேநேரத்தில் மற்றொரு பஸ் அல்லது கார் போன்ற வாகனங்கள் வந்தால், ஏற்கனவே நின்றுகொண்டிருக்கும் பஸ்øŒ கடந்து செல்ல முயற்சிக்கும்போது, வாகனங்கள் தாறுமாறாக ஓடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. வலதுபுற ரோட்டோரத்திலும் கரும்பு சாறு கடை மற்றும் இளநீர் கடைகள் ஆக்கிரமித்துள்ளன.பயணிகள் வசதிக்காக புதிதாக கட்டப்பட்ட நிழற்குடை, "குப்பை தொட்டி'யாகவே மாறிவிட்டது. இதை பயணிகள் பயன்படுத்துவதில்லை. பஸ் ஏறுவதற்கு ஆக்கிரமிப்பு கடைகளுக்கு முன் தான் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. "பஸ் நிறுத்தத்தில் தான் பஸ்கள் நின்று, பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும்' என்று, போக்குவரத்து ஊழியர்களும், போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்கள், அப்பகுதி கடைகளில் ஓசியாக இளநீர் மற்றும் காபி குடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். உரிய போக்குவரத்து "சிக்னல்'களும் அங்கு இல்லை. இதனால், இச்சந்திப்பு எப்போதுமே "வாகனங்கள் நெருக்கடி'யாகவும், குழப்பமான போக்குவரத்து பகுதியாகவுமே காட்சிளிக்கின்றது. விபத்துக்களும், உயிர்ப் பலிகளும் அடிக்கடி ஏற்பட்டு, பயணிகளை பீதிக்குள்ளாக்குகின்றது.என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்: ராக்கப்பன் (நகரமைப்பு அலுவலர், மதுரை மாநகராட்சி): மதுரை மாநகராட்சி பகுதியின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்ட போது, மண்டேலாநகர் சந்திப்பும் மாநகராட்சிக்குள் இணைக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் கடைகள் வைக்க மாநகராட்சி சார்பில் யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. இது குறித்து பல புகார்கள் வந்துள்ளன. ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமிப்புக்களை அகற்றி வருகிறோம். மண்டேலா நகர் சந்திப்பில் உள்ள கடைகளும் ஆக்கிரமிப்பு "லிஸ்ட்'டில் உள்ளது. அந்த கடைகளும் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். ஆனால், எப்போது அகற்றுவார்கள் என்றுதான் தெரியவில்லை.ஜவஹர் முத்துராஜ் (உதவி கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலை துறை): மதுரையில் நெடுஞ்சாலையோரங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து கடைகளுக்கு ஏற்கனவே "நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளன. கோச்சடை பகுதியில், நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யாமல் இருந்த கடைகளை இரு நாட்களுக்கு முன் அகற்றினோம். அடுத்து, இன்னும் ஒருசில நாட்களில், மண்டேலா நகர் சந்திப்பிலும் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற ஏற்கனவே திட்டமிட்டுஉள்ளோம். விரைவில் அகற்றப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.