மதுரை: கேபிள் "டிவி' கட்டணத்தை, ஆன்-லைன் மூலம் செலுத்தலாம் என்ற அரசு கேபிள் "டிவி' கழக அறிவிப்பிற்கு எதிரான மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
"கேபிள் ஆப்பரேட்டர்ஸ் கில்டு ஆப் மதுரை' தலைவர் பாண்டி தாக்கல் செய்த மனு: அனைத்து கேபிள் ஆப்பரேட்டர்களும், வாடிக்கையாளர்களிடம் மாதம் 70 ரூபாய் கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என, அரசு கேபிள் "டிவி' கழக மேலாண்மை இயக்குனர், 2011 செப்., 28ல், அறிவித்தார். இதன்படி, கேபிள் இணைப்பிற்கு தலா 20 ரூபாயை, அரசு கேபிள் "டிவி' கணக்கில் செலுத்துகிறோம். அரசு கேபிள் "டிவி' கழக மேலாண்மை இயக்குனர் பிப்., 20ல் வெளியிட்ட அறிவிப்பில், "வாடிக்கையாளர்கள் அரசு கேபிள் "டிவி' ஆன்-லைன் அல்லது அங்கீகாரம் பெற்ற ஏஜன்ட்கள் அல்லது ஆப்பரேட்டர்கள் மூலம், 70 ரூபாய் கட்டணம் செலுத்தலாம். இந்நடைமுறை, மார்ச் 1லிருந்து அமல்படுத்தப்படும்' என, குறிப்பிட்டுள்ளார். இதனால், நாங்கள் தொழில் நடத்துவதில் சிரமம் ஏற்படும். அரசு கேபிள் "டிவி' கழக மேலாண்மை இயக்குனரின் தற்போதைய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், கூடுதல் வழக்கறிஞர் சதீஷ்குமார் ஆஜராகினர். அரசு கேபிள் "டிவி' கழக பொதுமேலாளர் முருகேஷ், தாக்கல் செய்த பதில் மனு: அரசு கேபிள் "டிவி' கழகத்தில், 35 ஆயிரத்து 248 உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள், 2,641 எம்.எஸ்.ஓ.,க்கள் இணைந்துள்ளனர். தற்போது 90 முதல் 100 சேனல்களை ஒளிபரப்புகிறோம். வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்துவதில் தாமதம் மற்றும் விடுபடுவதை தவிர்க்கவே, ஆன்-லைன் முறையை அறிமுகப்படுத்தினோம். கேபிள் ஆப்பரேட்டர்கள், ஒரு இணைப்பிற்கு 70 ரூபாய்தான் வசூலிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம். ஆனால், சிலர் 100, 150 ரூபாய் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. இது, அரசின் தரமான சேவையை குறைந்த விலையில் வழங்கும் நோக்கத்தை சிதைக்கும் நடவடிக்கை. கட்டணம் செலுத்துவதை முறைப்படுத்தவே, ஆன்-லைன் அல்லது வங்கிகளில் செலுத்துதல் உட்பட மூன்று விதமான வாய்ப்புகளை அறிமுகப்படுத்தினோம். ஒவ்வொரு இணைப்பிற்கும் வசூலிக்கும், 70 ரூபாய் கட்டணத்தில், அரசு கேபிள் "டிவி'க்கு 20 ரூபாய், ஆப்பரேட்டர்களுக்கு 50 ரூபாய் என்பதில் மாற்றமில்லை. ஆனால் ஆப்பரேட்டர்கள், கூடுதலாக வசூலிப்பதை மறைத்து விட்டனர். அரசின் அறிவிப்பை எதிர்ப்பதன் நோக்கமே, கூடுதல் கட்டணம் வசூலிக்கத்தான். இவ்வாறு குறிப்பிட்டார். அரசு தரப்பு விளக்கங்களை ஏற்று, கேபிள் ஆப்பரேட்டர்கள் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.