தமிழக மீனவர்கள், 53 பேர், இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்ட விவகாரம், லோக்சபாவில் எதிரொலித்தது. அப்போது, "சொந்த மக்களை பாதுகாப்பதில், மத்திய அரசு பலவீனமாக உள்ளது' என, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள, முக்கிய கூட்டணி கட்சியான, தி.மு.க., விமர்சித்தது. அதேநேரத்தில், "இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்தால் மட்டுமே, தமிழக மீனவர்களுக்கு, கடலோர காவல் படையினர் பாதுகாப்பு வழங்க முடியும்' என, மத்திய அரசு பதிலளித்தது.
அடிக்கடி:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. தமிழக மீனவர்கள், 19 பேர், இலங்கையின் மன்னார் வளைகுடா பகுதியில், நேற்று முன் தினம் இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை, 34 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து, அவர்கள் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டனர். இந்த பிரச்னை லோக்சபாவில், நேற்று எழுப்பப்பட்டது. கேள்வி நேரம் துவங்கியதும், காஷ்மீரில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பிரச்னையை, பா.ஜ., - எம்.பி.,க்கள் எழுப்பினர். அப்போது, தமிழக எம்.பி.,க்கள் அனைவரும், மீனவர்கள் கைது பிரச்னை எழுப்பி, அதற்காக, குரல் கொடுத்தபடி நின்றனர். இதனால், சபையில், கூச்சல், குழப்பம் நிலவி, கேள்வி நேரம் ரத்தானது. பின்னர், பூஜ்ஜிய நேரம் துவங்கியதும், மீனவர்கள் கைது சம்பவம் குறித்து பேச, சபாநாயகர் மீரா குமார் அனுமதி வழங்கினார்.
இதையடுத்து, தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் பேசியதாவது:
மவுனம்:
தமிழக மீனவர்களை, இலங்கை ராணுவம் தாக்குவது, தொடர்கதையாகி வருகிறது. தமிழக மீனவர்கள், அடிக்கடி கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்படும் கொடுமையும் நீடிக்கிறது. இந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசோ, மவுனமாக உள்ளது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மீனவர்கள் தங்கள் தொழிலை செய்வற்காகவே, கடலுக்கு செல்கின்றனர். வேறு எந்த நாட்டையும் பிடிப்பதற்கோ அல்லது எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்தோ செல்லவில்லை. ஆனாலும், இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய, இந்திய கடலோர காவல்படை, என்ன செய்கிறது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை, தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும், கடலோர காவல்படைக்கு இல்லையா? இவ்விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நேரம், நெருங்கிவிட்டது. சொந்த மக்களை பாதுகாப்பதில், மத்திய அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. மீனவர்கள் கைது சம்பவம் குறித்து, மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
இதையடுத்து, அ.தி.மு.க., - எம்.பி., தம்பித்துரை பேசியதாவது: இதுவரை, தமிழக மீனவர்கள், 800 பேர், இலங்கை கடற்படையினரால், கொல்லப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன் பிடிப்பதற்காக சென்ற இவர்களை, கொன்றொழித்தது இலங்கை ராணுவம். தமிழக மீனவர்கள், இத்தனை பேர் கொல்லப்பட்டும் கூட, இலங்கையை நட்பு நாடு என, மத்திய அரசு கூறுகிறது.
எத்தனை படை:
சொந்த நாட்டு மக்களை கொன்றாலும் கூட, இன்னொரு நாட்டுடன், நட்பு பாராட்டி ஆக வேண்டுமென ஆசைப்படுகிறதா மத்திய அரசு. இந்திய கடற்படை, கடலேரா காவல்படை, ரோந்துபடை என, நிறைய படைகள் உள்ளன. ஆனால், எந்தப் படையினரும், தமிழக மீனவர்களுக்கு, பாதுகாப்பு கொடுக்காமல் விட்டு விடுவது ஏன் என்பது தெரியவில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை, இந்த படை வீரர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த நிலை, மாற வேண்டும்; இனிமேலும், பொறுக்க முடியாது. இவ்வாறு தம்பித்துரை பேசினார். இதன்பின், வேறு பிரச்னையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள, சபாநாயகர் மீராகுமார் முயன்றபோது, டி.ஆர்.பாலு எழுந்தார். அவர், "" சபையில், வெளியுறவு அமைச்சர் உள்ளார். இதுகுறித்து பதில் அளிக்க, அவர் முன்வருவாரா?,'' என, கேள்வி எழுப்பினார். இதனால், சபையில், சலசலப்பு உருவானது. உடன், நிதியமைச்சர் சிதம்பரம் எழுந்து,""மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, இன்று மாலைக்குள்,வெளியுறவு அமைச்சர் அறிக்கை தருவார்,'' என்றார். இதையடுத்து, சபை அலுவல்கள் தொடர்ந்தன. சபையை விட்டு, வெளியில் வந்த, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம்," பல மாதங்களாக, தமிழக மீனவர்கள் மீது, தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஆனால், இந்திய கடற்படையோ, கடலோர காவல்படையோ, ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை' என, கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ""இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்தால் மட்டுமே, மீனவர்களுக்கு, மத்திய கடலோர காவல்படை வீரர்கள் பாதுகாப்பு வழங்க முடியும்,'' என்றார்.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆ. ராஜாவை தொடர்ந்து கனிமொழி அவர்களையும் சி.பி.ஐ. குடையத்துவங்கியதுதான்.......மஞ்சள் துண்டுக்கு வந்துள்ள இந்த திடீர் பகுத்தறிவோ ......என்னமோ.....பொறுத்து பார்த்தால்தான் புரியும் நாடகத்தின் கிளைமாக்ஸ். .........உண்மையான அக்கறை இருந்தால் ஒரே வார்த்தையில் மத்திய அரசை விட்டு விலகுகிறேன் என்று சொல்ல வேண்டியது தானே...
" என்னவொரு அருமையான பதில் வருகிறது வெளியுறவு துறை அமைச்சர் அவர்களிடம் இருந்து. இந்த பதிலை ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர் கூட சொல்வார்கள், மீனவர்கள் அனைவரும் எல்லை மீறி செல்கிறார்கள் என்றால் அனைத்து படைகளும் என்ன செய்து கொண்டு உள்ளது??? , மீனவ மக்களை ஆபத்தில் இருந்து உயிரை காப்பது அரசின் கடமை ,( குறிப்பாக அறிவுறுத்தலாம் ,அபராதம் விதிக்கலாம் ,கைது செய்யலாம் மற்றும் தடை விதிக்கலாம் ,அவர்கள் இந்திய எல்லை கோட்டுக்குள் வந்தால் இலங்கை கடற்படை மீது தாக்குதல் நடத்தலாம் )ஆனால் உயிரை விட சொல்வது என்ன வகையில் நியாயம் ??? வருங்காலங்களில் இது போன்று துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது ???
""நான் உனக்கு எதிரி-ஆனா நண்பன். நான் உனக்கு நண்பன்-ஆனா எதிரி. உன் ஆட்சி சரியில்ல. உன் ஆட்சி சரியில்ல. நான் இப்படித்தான் சொல்லுவேன். ஆனா இதையே வேற யாராவது தீர்மானமா கொண்டுவந்தா கண்டிப்பா நான் உனக்கெதிரா ஒட்டு போடமாட்டேன். இப்போ சொல்லு. நீ எனக்கு யாரு? எதிரியா? நண்பனா? """ நல்லா இருக்குதுடா உங்க நாடகம்.மெகா சீரியலா எடுங்க. 5 வருஷம் தாண்டி ஓடும்
தி மு க இளங்கோவனுக்கு இப்போதுதான் தமிழக மீனவர்களின் பிரச்னை தெரிகிறதா ? இவ்வளவு நாள் நடந்த படுகொலையை ...ஸ்பெக்ட்ரம் மறைத்து விட்டதா ? ...தி மு க வின் திடீர் கரிசனத்தை நங்கள் நம்பிட்டோம் .... வோட்டு கேட்டு எங்களிடம் கையேந்தி வரத்தானே போகிறீர்கள் ..அப்போ இருக்கு இந்த அல்லக்கை இளங்கோவனுக்கும் ..மற்ற தி மு க எம் பிக்களையும் அடிக்கிற ஆப்பில் தெறித்து ஓடவைபோம் ...
என்ன ஆயிற்று இந்த திமுகவினருக்கு தற்போது இலங்கை தமிழர்கள்,,, தமிழக தமிழர்கள் விஷயத்தில் தடாலடியாக இவ்வளவு அக்கறை? மத்திய அரசாங்கத்தை இந்த விஷயத்தில் இவ்வளவு எதிர்கிறார்கள். கேள்வி எல்லாம் கேட்கிறார்கள். சில நாட்கள் முன் திருச்சி சிவா கொந்தளித்தார். தற்போது இந்த இளங்கோவன் வெகுண்டேழுதிருக்கிறார். இவர்கள் கேட்பது நியாயமாக இருந்தாலும் இவ்வளவு வருடங்கள் மத்திய அரசின் எல்லா பதவிகளையும் அனுபவித்து விட்டு அப்போதெல்லாம் தமிழர்களை பற்றி எல்லாம் நினைத்து கூட பார்க்காமல் இப்போது மட்டும் எப்படி இவ்வளவு அக்கறை வந்து விட்டது? இவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போது கூட தான் தமிழக மீனவர்கள் கைது செய்ய பட்டார்கள். அப்போது ""அந்த மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடித்ததால் தான் கைது செய்ய பட்டார்கள்"" என்று காரணம் கூறினார் கருணா. தற்போது மட்டும் மீனவர்கள் எல்லை தாண்டவில்லையா? நம் நாட்டு எல்லைக்குள்ளே தான் இலங்கை கடற்படையினர் வந்து மீனவர்களை கைது செய்தார்களா? இது என்ன வகை பிழைப்போ தெரியவில்லை...பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கூட தெரியாது. கருணாவுக்கே வெளிச்சம். அவர் தன் கனவில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் விளக்கி விடுவார் என்று எதிர்ப்பார்ப்போம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.