கோவை: கோவை மாநகராட்சி பட்ஜெட் சிறப்பு கூட்டத்தில், தி.மு.க., பெண் கவுன்சிலர் மீனாவை, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தகாத வார்த்தைகளில் திட்டி, தாக்கினர்; காயமடைந்த மீனா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவை மாநகராட்சியின் 2013- 2014ம் ஆண்டுக்கான "பட்ஜெட்' சிறப்பு கூட்டம் மேயர், தலைமையில் நடந்தது. பட்ஜெட் உரைக்குப் பின், "பட்ஜெட்' மீதான விவாதம் பிற்பகல் 3:30 மணிக்கு நடக்கும் என,மேயர் அறிவித்தார்.
உடனே தி.மு.க., குழுத்தலைவர் நந்தகுமார், "கவுன்சில் மரபுப்படி "பட்ஜெட்' விவாதத்தை அடுத்த நாள்தான் நடத்த வேண்டும்,'' என்றார். அதற்கு மேயர், "இன்று மாலை விவாதம் நடத்த பெரும்பான்மை கவுன்சிலர்களின் ஆதரவு உள்ளது. பிற்பகல் 3:30 மணிக்கு விவாத கூட்டம் நடக்கும். கவுன்சிலர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, சாப்பிட்டு விட்டு வாருங்கள்,'' என்றார்.
"நாங்கள் விருந்து சாப்பிட வரவில்லை; மக்கள் பிரச்னையை பேச வந்துள்ளோம்; கவுன்சிலர்களின் உரிமையை பறிப்பதை கண்டிக்கிறோம்,'' என்று பேசிய நந்தகுமார், ""மக்கள் விரோத அ.தி.மு.க., அரசு ஒழிக,'' என கோஷமிட்டபடி வெளியேற முயன்றார்.
பெண் கவுன்சிலர் ஆவேசம்:
குறுக்கிட்ட தி.மு.க., பெண் கவுன்சிலர் மீனா, "வெளிநடப்பு வேண்டாம், உள்ளிருந்து போராடுவோம்,'' என்று கூறி மேயர் இருக்கையை நோக்கி ஆவேசமாக நடந்தார். தி.மு.க., கவுன்சிலர்களும் அவரை பின்தொடர்ந்து, அ.தி.மு.க.,வை கண்டித்து கோஷமெழுப்பி சென்றனர்.
கோபமடைந்த மேயர், "அவங்க சத்தம் போடுறாங்க, உங்களுக்கு சத்தம் போட தெரியாதா?'' என்று தனது கட்சியினரை பார்த்துக்கூறினார். ஆவேசமடைந்த அ.தி.மு.க.,வினர், "மைனாரிட்டி தி.மு.க.,; ஊழல்வாதி கருணாநிதி' என கோஷமிட்டனர். மாமன்றம் சந்தைக்கடைபோல் மாறியது.
நிலைமை கைமீறி போவதைக் கண்ட மேயர், "பத்திரிகை போட்டோகிராபர்கள் தயவு செய்து வெளியேறுங்கள்; வெளியேறாவிட்டால், இனி மாமன்றத்திற்குள் அனுமதிக்க மாட்டேன்,'' என்றார். மாமன்றத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்களுக்குள் தள்ளுமுள்ளு அதிகரித்ததால், மேயர் தனது அறைக்கு சென்று விட்டார்.
சுற்றி வளைத்து தாக்குதல்:
அதன்பின், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெண்தாமரை பாலு, அம்மன் அர்ஜூனன், அர்ஜூனன் என்கிற கோபாலகிருஷ்ணன், அன்னம்மாள், செந்தில்குமார், சொக்கம்புதூர் செந்தில்குமார், கவுன்சிலர் கோமதியின் கணவர் காட்டுத்துரை ( கவுன்சிலர் அல்ல) உள்ளிட்டோர், தி.மு.க., கவுன்சிலர் மீனாவை சுற்றி வளைத்து தகாத வார்த்தையில் திட்டி, தாக்கினர்.
தி.மு.க., கவுன்சிலர்கள், காங்., கவுன்சிலர் காயத்திரி ஆகியோர், மீனாவை மீட்டு வெளியேற்றினர். அதன் பிறகும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் விரட்டி சென்று, மீனாவை தாக்கினர். நிலைகுலைந்த மீனா, "மாமன்றத்துக்குள் பெண் கவுன்சிலர்களை சித்ரவதை செய்கிறார்கள். இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் செய்கிறேன்,'' என்றபடி மாமன்றத்தினுள் நுழைந்தார்.
போலீசார் மீனாவை வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றினர். தி.மு.க., கவுன்சிலர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். மாமன்றத்தினுள் கவுன்சிலர்கள் மட்டுமின்றி, பெண் கவுன்சிலர்களின் கணவர்களும் "குஸ்தி' போட்டதால், களேபரம் ஏற்பட்டது. ரோட்டில் சென்ற பொதுமக்கள் இச்சம்பவத்தை அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் ராமநாதன், மாநகர் மாவட்ட செயலாளர் வீரகோபால் ஆகியோர், கவுன்சிலர்களுடன் பேச்சு நடத்தினர். இதற்கிடையில், தாக்குதலில் காயமடைந்த கவுன்சிலர் மீனா, கோவை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தை கண்டித்து தி.மு.க., சார்பில் வரும் 16ம் தேதி, காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தி.மு.க.,குழுத்தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அன்னம்மாள், கவுரி ஆகியோர், தி.மு.க.,வினர் தாக்கியதாக கூறி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பெண் கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பில்லை:
கோவை மாநகராட்சி "பட்ஜெட்' தாக்கல் கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்களால் தாக்கப்பட்ட மீனா, நிருபர்களிடம் கூறியதாவது: "பட்ஜெட்' மீதான விவாதத்திற்கு ஒரு நாள் அவகாசம் கேட்டோம். அ.தி.மு.க., கவுன்சிலர்கள், கவுன்சிலர்களின் கணவர்கள், பெண் என்றும் பாராமல், என்னை தள்ளினார்கள். மாமன்றத்தை விட்டு வெளியேறுமாறு, தகாத வார்த்தையில் திட்டி, தாக்கினார்கள்.
தகாத இடங்களில், கிள்ளி வைத்தனர். கழுத்தை இருக்கி, கையை முறுக்கி, நெஞ்சு, முதுகு பகுதியில் குத்தி, போலீசார் மூலம் என்னை வெளியேற்றினர். தீவிரவாதியை போன்று போலீசார் நடத்தினர்.
கோவை மாநகராட்சி மாமன்றத்தில், பெண் கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பில்லை; தவறான முன்னுதாரண சம்பவம் அரங்கேறியுள்ளது. இதை தடுக்காமல், மேயர் வேடிக்கை பார்த்தார்.
அ.தி.மு.க.,வினரின் தாக்குதலால், கை, கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. இரண்டு முறை வாந்தி ஏற்பட்டது. இரு கைகளிலும் நகக்கீறல்கள் ஏற்பட்டுள்ளது. மாமன்றத்தினுள் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெண்தாமரை பாலு, அம்மன் அர்ஜூனன், அர்ஜூனன் என்கிற கோபாலகிருஷ்ணன், அன்னம்மாள், நகரமைப்பு பிரிவு தலைவர் செந்தில்குமார், சொக்கம்புதூர் செந்தில்குமார், கவுன்சிலர் கோமதியின் கணவர் காட்டுத்துரை உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் தாக்கினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கவுள்ளேன். இவ்வாறு, மீனா கூறினார்.
காங்., கவுன்சிலர் காயத்திரி கூறுகையில், "மாமன்றத்தினுள் பெண் கவுன்சிலர் தாக்கப்பட்டது மோசமான சம்பவம். தமிழகத்தை ஆட்சி செய்பவர் ஒரு பெண்தான்; மாநகராட்சி பட்ஜெட்டில், மாணவிகளை தற்காத்துக்கொள்வது பற்றிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்றத்தினுள் பெண் கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை எங்கு முறையிடுவது?'' என்றார்.
தி.மு.க., குழுத்தலைவர் நந்தகுமார், "மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டு நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதுவரை "பட்ஜெட்' தாக்கலுக்கு அடுத்த நாள் விவாதம் நடந்தது; இதுதான் கவுன்சில் மரபு. பட்ஜெட் புத்தகம் 102 பக்கமுள்ளது. இதை படித்து தெரிந்து கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க ஒரு நாள் அவகாசம் வேண்டும்,'' என்றார்.
"எதிர்பார்க்காமல் நடந்து விட்டது':
அதன்பின், என்னை நோக்கி கோஷமிட்டு வந்தனர். முதல்வரை தவறாக விமர்சித்ததால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கோபமடைந்தனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிரச்னை செய்ய நான் யாரையும் தூண்டி விடவில்லை.
பிரச்னை செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் திட்டமிட்டு வந்திருந்தனர். தி.மு.க.,வில் உள்ள கோஷ்டி பூசலில், கவுன்சிலர் மீனா தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிரச்னையை மிகைப்படுத்துகிறார். பிரச்னையை தீர்க்க முயற்சித்தேன்; தி.மு.க.,வினர் ஒத்துழைக்கவில்லை. மாமன்றத்தில் நடந்த அசம்பாவிதம் வருந்தத்தக்கது; எதிர்பார்க்காமல் நடந்தது,'' என்றார்.
தாக்கியவர்கள் மீது போலீசில் புகார்:
கோவை மாநகராட்சி 2013- 14ம் ஆண்டுக்கான "பட்ஜெட்' சிறப்பு கூட்டம் மேயர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., குழுத்தலைவர் நந்தகுமார் பேசுகையில், "கவுன்சில் மரபுப்படி "பட்ஜெட்' விவாதம் அடுத்த நாள் நடத்த வேண்டும்' என்றதும், மேயர் ""இன்று மாலை விவாதம் நடத்த பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஆதரவு இருக்கிறது. அறிவித்தபடி, மாலை 3:30 மணிக்கு விவாத கூட்டம் நடக்கும். கவுன்சிலர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, சாப்பிட்டு விட்டு வாருங்கள்'' என்றார்.
தள்ளு முள்ளு ஏற்பட்டு, மோதல் உருவானது. இதில், தி.மு.க., பெண் கவுன்சிலர் மீனா தாக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தி.மு.க., பெண் கவுன்சிலரை தாக்கிய அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் ராமநாதன், மாநகர் மாவட்ட செயலாளர் வீரகோபால் ஆகியோர் தலைமையிலான தி.மு.க., வினர் நேற்று மாலை கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
புகார் மனுவில் கூறியுள்ளதாவது : கோவை மாநகராட்சி 2013-14ம் ஆண்டுக்கான "பட்ஜெட்' சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பதினைந்து ஆண்டு கால நடைமுறையை மாற்றி கவுன்சிலரை பேசவிடாத மேயரை கேள்வி கேட்ட தி.மு.க., கவுன்சிலர்கள் மீது அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதில், 49வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மீனாவை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெண்தாமரை பாலு, அம்மன் அர்ஜூனன், அர்ஜூனன் என்கிற கோபாலகிருஷ்ணன், அன்னம்மாள், செந்தில்குமார், சொக்கம்புதூர் செந்தில்குமார், மற்றும் மாமன்ற உறுப்பினராக இல்லாத கவுன்சிலர் கோமதியின் கணவர் காட்டுத்துரை உள்ளிட்டோர், சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.
இதில், பலத்த காயமடைந்த மீனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தி.மு.க., கவுன்சிலர் மீனாவை தாக்கியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கண்டித்து தி.மு.க., சார்பில், வரும் 16ம் தேதி, காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பாக நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சஸ்பெண்ட்'தீர்மானம் நிறைவேற்றம்: தி.மு.க., கவுன்சிலர் மீனா, மூன்று மாமன்ற கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக "பட்ஜெட்' விவாத கூட்டத்தில், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாநகராட்சிக்கான "பட்ஜெட்' தாக்கல் நேற்று காலை நடந்தது. "பட்ஜெட்' குறித்த விவாதம் மாலை 3.30 மணிக்கு மாநகராட்சி விக்டோரியா ஹாலில், மேயர் தலைமையில் நடந்தது.
விவாதத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் மணிமேகலை, "பட்ஜெட்' தாக்கலின் போது, தி.மு.க., கவுன்சிலர் மீனா, அத்துமீறி நடந்து கொண்டதாகவும், தி.மு.க.,வினர் இரண்டாவது முறையாக மாமன்ற கூட்டத்தில் இதுபோன்று நடப்பதால், மீனாவை மூன்று மாமன்ற கூட்டங்களுக்கு "சஸ்பெண்ட்' செய்ய வேண்டும் எனும், தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்த மேயர், "பெரும்பான்மையான கவுன்சிலர்கள் ஆதரவு இருந்ததை அடுத்து "பட்ஜெட்' மீதான விவாதத்தை மாலை நடத்துவது என, நேற்று காலை அறிவிப்பு வெளியிடப்பட்டது. தி.மு.க., குழுத்தலைவர் நந்தகுமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளியேற முயன்றார். கவுன்சிலர் மீனா, அவரை தடுத்து, மேயர் இருக்கை நோக்கி வந்தது உள்நோக்கமுடைய செயல். அவரது இந்த செயலை கண்டித்து, தி.மு.க., கவுன்சிலர் மீனாவை மூன்று மாமன்ற கூட்டங்களுக்கு "சஸ்பெண்ட்' செய்ய வேண்டும் என, உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுகிறது'' என்றார்.
அ.தி.மு.க., கவுன்சிலர் பாலன் எழுந்து, "பெண் என்றால் எதுவும் செய்யலாம் என, நினைக்கிறார்கள். ஆண்களுக்கு தான் பாதுகாப்பில்லை. ஆண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.
இதன் பின்னர், "பட்ஜெட்' குறித்த விவாதம் நடந்தது. முதலாவதாக பேசிய கவுன்சிலர் தாமரை செல்வி, " தி.மு.க.,வினர் தங்களது எதிர்ப்பை நியாமான முறையில் தெரிவித்திருக்கலாம். அதை விடுத்து, அநாகரிகமாக, மன்றத்தில் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. கடந்த முறை இதுபோன்று நடந்த போதே யாரும் இருக்கையை விட்டு எழுந்து மேயர் இருக்கை அருகே வந்து பேசக்கூடாது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதையும் மீறி தி.மு.க.,வினர் நடந்தது அநாகரீகமான செயல்'' என்றார்.
தாமரை செல்வி பேசும்போது இடைமறித்த மேயர், " மற்ற கட்சி கவுன்சிலர்களால், எந்த பிரச்னையும் இல்லை. மீனா பத்திரிக்கைகளில் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்து கொள்கிறார்'' என்றார்.
தொடர்ந்து நடந்த விவாதத்தில், கவுன்சிலர்கள் தி.மு.க., னரை கண்டித்தும், "பட்ஜெட்டில்' அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், வார்டுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்தும் பேசினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நிலைமை கைமீறி போவதைக் கண்ட மேயர், "பத்திரிகை போட்டோகிராபர்கள் தயவு செய்து வெளியேறுங்கள் வெளியேறாவிட்டால், இனி மாமன்றத்திற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கூறி அவர்களையும் வெளியேற்றி விட்டு பெண் கவுன்சிலரை அடித்து அவமானப் படுத்த காரணமான, கலவரத்திற்கு வித்திட்ட மேயர் அந்த பதவிக்கு எந்த வகையிலும் தகுதி அற்றவர்.இவரைப் போன்றவர்கள் இந்திய ஜனநாயக அமைப்பின் சாபக் கேடு.ஊடகங்கள் ஏன் இன்னும் தீவிரமாக கண்டிப்பதில்லை.
என்னதான் மழுப்பல் காரணங்கள் கூறப்பட்டாலும், ஒரு பெண்ணை அதுவும் ஒரு பெண் கவுன்சிலரை மாநகராட்சி மன்றத்திலேயே தாக்கியது மாபெரும் குற்றமே. இந்த வன்முறையில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள் அனைவரையும் இந்த கூட்டத்தொடர் முழுவதற்கும் சஸ்பெண்ட் செய்வதுடன் போலீசார் அவர்கள் அனைவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கவுன்சிலர் அல்லாத 'கட்டதுரை' காட்டுதுரை போன்ற பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் அத்துமீறி மாநகராட்சி மன்றத்துக்குள் நுழைந்ததற்கும், (பெண் கவுன்சிலர் மீது) தாக்குதல் நடத்தியதற்கும் அவர்களனைவர் மீதும் போலீசார் பாரபட்சமில்லாத நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் கட்சிக்காரர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பெரும்பான்மை கவுன்சிலர் ஆதரவிருப்பதில் ஆச்சர்யமில்லை. இருந்தாலும், கவுன்சில் மரபுப்படி அடுத்தநாள்தான் விவாதம் நடத்தப்படவேண்டுமேன்றால் அது அவ்வாறே நடத்தப்படவேண்டும். மேலும் குறிப்பிட்ட ஒரு கட்சித்தலைவர் செய்வதுபோலவே, மேயர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு தாக்குதலைத் தூண்டிவிட்டு, தொடங்கிவைத்துவிட்டு, எழுந்து சென்ற மேயர் மீது சி.எம். அதிரடி நடவடிக்கை எடுப்பதுடன், இந்த வன்முறையில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்மீதும் கட்சி ரீதியான அதிரடி நடவடிக்கை எடுப்பார் என்றும் எதிர்பார்ப்போம்.
ரகளை ஆரோக்கியத்தின் வெளிப்பாடல்ல.. அது அநாகரீகத்தின், காட்டுமிராண்டித் தனத்தின் வெளிப்பாடு.. அது எந்த ரூபத்தில் எங்கே நடந்தாலும் சரி... நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த காந்தியே அகிம்சையைத் தான் ஆயுதமாக வைத்திருந்தார்கள்.. , ஆனால், இங்கே யாரோ போடுகிற பட்ஜெட்டுக்கு , என்னவோ இவர்கள் தான் அதை நிர்ணயிப்பது போல குடுமிப் பிடி சண்டை போட்டுக் கொள்வதை பார்த்தால், எதில் சிரிப்பதென்பதே தெரியவில்லை..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.