இப்போது தவசியண்ணன்...| Dinamalar

இப்போது தவசியண்ணன்...

Updated : மார் 16, 2013 | Added : மார் 16, 2013 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

பொதுவாக ஒரு படைப்பாளி எழுதும் எழுத்து வாசிக்கும் வாசகரை கொஞ்சமேனும் பாதித்தால்தான் அது எழுத்தாக எடுத்துக்கொள்ளப்படும், ஆனால் இப்போது நான் எழுதியுள்ள இந்த கட்டுரை, படைப்பாளியான என்னையே இன்னும் உலுக்கியெடுத்து உள்ளத்தினுள் குமுறலையும், அழுகையையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலிலைச் சார்ந்த மலர்வதி என்ற எளிய பெண் எழுதிய "தூப்புக்காரி' என்ற நாவலுக்கு, இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கக்கூடிய உயரிய விருதான சாகித்திய அகதமி விருது வழங்கப்பட இருப்பதை பற்றி, நிஜக்கதை பகுதியில் கடந்த வாரம் எழுதியிருந்தேன்.


படித்துவிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மலர்வதியினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களையும், உதவிகளையும் பகிர்ந்து கொண்டனர்.
அந்த கட்டுரைக்கான வாசகர் பின்னூட்டத்தில் ஒரு கடிதம்,


மலர்வதியை எல்லாரையும் போல நானும் பாராட்டுகிறேன், ஆனால் இவரை கொண்டாடும் அதே நேரத்தில், இவருக்கு முன்பாக கடந்த வருடம் "சேவல் கட்டு' என்ற நாவலை எழுதியதன் மூலம், இதே சாகித்திய விருதினைப்பெற்று, கொண்டாட ஆள் இல்லாமல் வறுமையிலும், கடுமையான நோயிலும் வாடும் உயர்ந்த இலக்கியவாதியும், என் ஒப்பற்ற நண்பருமான மா.தவசியைப்பற்றி இணையதளத்தில் எழுதுங்களேன், இதன்மூலம் நிஜக்கதை வாசகர்கள் அன்பால், ஆசியால், உதவியால், வாழ்த்துக்களால் அவர் முன்போல உத்வேகத்துடன் உயிர்த்து வருவார் என்று நம்புகிறேன், என்று சொல்லி தவசியின் தொடர்பு எண்ணை குறிப்பிட்டு இருந்தார்.
மதுரை உத்தங்குடியில் உள்ள அவரது எண்ணுடன் உடனடியாக தொடர்பு கொண்டேன். முதலில் போனை எடுத்த பேசிய பெண் , "அவர்ட்டாதான் பேசணுமா?'' என்றுகேட்டு ஒரு சில வினாடிகள் தாமதித்து, "இப்ப பேசுங்க'' என்று சொன்னார்.


"நா....ன்....த...வ...சி...பேசுறேன்'' என்று பேசிய குரலைக் கேட்டதுமே, அவர் சொல்லமுடியாத சோகத்திலும், வெல்லமுடியாத நோயிலும் இருப்பதை உணர்ந்தேன். ஒரு எழுத்தை உச்சரிப்பதற்கே நிறைய மூச்சு வாங்கியது, மிக, மிக சன்னமான குரலில் இளைக்க, இளைக்க அவர் ஒரு வார்த்தையை உச்சரிக்கவே ஒரு நிமிடம் எடுத்துக்கொண்ட சூழலை உணர்ந்த மாத்திரத்தில், அவரை மேற்கொண்டு சிரமப்படுத்த விரும்பாமல், "தவசி அண்ணே நீங்கள் எதுவும் பேச வேண்டாம், உங்களைப் பத்தி உங்கள் நண்பர் கிருஷ்ணமூர்த்தி எல்லா விவரமும் சொன்னார், நான் அதை சேகரித்து இந்த வாரமே கட்டுரையாக போட்டுவிடுகிறேன், கட்டுரை வந்தபிறகு தமிழிலும், இலக்கியத்திலும் ஆர்வம் கொண்ட உலகாளாவிய எம் வாசக பெருமக்கள் உங்களோடு நிச்சயம் பேசுவார்கள், உதவுவார்கள், ஆகவே எதற்கும் இனி கவலைப்படாதீர்கள், கட்டுரையை பிரசுரித்துவிட்டு பின் உங்களை தொடர்பு கொள்கிறேன், சரிங்காளண்ணே'' என்றதும் பழையபடி நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு அதே களைப்புடனும், இளைப்புடனும் "ந..ன்..றி...ரொ..ம்..ப...ச..ந்..தோ...ஷ...ம்'' என்று சொல்லி முடித்தார்.
எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தவசி தொடர்பான விஷயங்களை சேகரித்தேன், பெரிதும் உதவியவர் அவரது ஒப்பற்ற நண்பர் ஏ.கிருஷ்ணமூர்த்திதான்.


மா.தவசி, முதுகுளத்தூரில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர், தமிழின் மீது நிறைய பற்று கொண்டவர், இதனால் எம்.ஏ., தமிழ் படித்தவர் எம்.பில் எனப்படும் ஆராய்ச்சி படிப்பையும் தமிழிலேயே செய்து முடித்தார்.
சமூக அவலங்களை தனது சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் வழியாக வெளிப்படுத்தியவர், எழுதுவதற்காக ரொம்பவே மெனக்கெடுவார், நிறைய தேடல் இருக்கும். மணைவி, இரண்டு குழந்தைகள் என்றான பிறகு குடும்பத்திற்காக பத்திரிகை அலுவலகத்தில் உதவி ஆசிரியர் வேலையும், தனது ஆத்ம திருப்திக்காக எழுதுவதையும் வாழ்க்கையாகக் கொண்டார்.


புத்தகம் போட்டதன் மூலம் நிறைய கடன்பட்டவர், ஆனாலும் மக்களுக்கு இந்த விஷயங்கள் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக எவ்வளவு கடன் பட்டாலும் பரவாயில்லை என்று மீண்டும், மீண்டும் புத்தகம் போட்டவர்.
அப்படி அவர் எழுதியதுதான் "சேவல் கட்டு'. தென்மாநிலங்களில் நடைபெறும் சேவல் சண்டையை மையமாக வைத்து எழுதப்பட்ட அற்புதமான நாவலது. அந்த நாவலுக்குதான் கடந்த வருடம் சாகித்திய அகதமி விருது அறிவிக்கப்பட்டது. அநேகமாக இந்த விருது தமிழர் ஒருவர் வாங்கிய முதல் விருதாகவும் இருக்கவேண்டும். அப்போது அவருக்கு வயது 35தான்.


சிவ பக்தரான தவசி வத்திராயிருப்பு மலையில் உள்ள சுந்தரமகாலிங்கத்தை செருப்பு போடாமல் நடந்தே போய் தரிசித்து நன்றி தெரிவித்துவிட்டு திரும்பினார்.
இப்படி அவ்வளவு பெரிய மலையின் மீதே சாதாரணமாக ஏறி இறங்கியவர், இரண்டாவது நாள் தனது வீட்டின் வாசல் படிக்கட்டுகளைக்கூட தாண்டமுடியாமல் சிரமப்பட்டார், ஏதோ வயிற்றுக்குள் உருளுவது போல உணர்ந்தார். இன்னும் இரண்டு நாளில் விருது வாங்கப் போகவேண்டும் என்ற நிலையில் என்ன இது இடையூறு என்று ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறார்.


அங்கு வயிற்கு வலிக்கான ஆரம்பகட்ட சிகிச்சையை கொடுத்துவிட்டு, மேற்கொண்டு சிகச்சைக்காக அவரது "திசு'வை சேசகரித்து சோதனை சாலைக்கு அனுப்பிவைத்தனர்.
ஒடிசா போய் விருது வாங்கிவிட்டு மகிழ்ச்சி பொங்க திரும்பியவருக்கு தாங்க முடியாத அதிர்ச்சி "லேப் ரிப்போர்ட்' என்ற பெயரில் காத்திருந்தது... ஆம், அவருக்கு புற்று நோய்., அதுவும் குணப்படுத்தவே முடியாத முற்றிய நிலையில்...தவசி ரொம்பவே அதிர்ந்து போய்விட்டார்.


இந்த தகவலுக்காகவே காத்திருந்தது போல இரண்டொரு நாளில் நோயின் தீவிரம் உடலை குன்றச் செய்துவிட்டது, வேலைக்கு போக முடியாத அளவில் வீட்டில் படுக்கப்போட்டது.
வேலைக்கு போக முடியாததால் சரியான சம்பாதித்தியம் இல்லை, ஒரு பக்கம் குடும்பச் செலவு, இன்னொரு பக்கம் குழந்தைகள் படிப்புச் செலவு, இதை எல்லாவற்றையும் விட புற்று நோய்க்கான அதிகபட்ச சிகிச்சை செலவு.


சிகிச்சைசக்கான செலவு அதிகமானதால் அலோபதி சிகிச்சைசயை விட்டுவிட்டு ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறினார், அந்த சிகிச்சையில் அவருக்கு தந்த மருந்தே நிறைய மாதுளையும், ஆப்பிள் பழமும் சாப்பிடுங்கள் என்பதுதான். அதற்கெல்லாம் வசதியில்லாதால் மாதுளையும், ஆப்பிளும் தன்னைப்பார்க்க வருபவர்கள் கொடுக்கும் போது சாப்பிடும் பொருளாகிவிட்டது.
நாளுக்கு நாள் நலிந்து கொண்டே போகும் தன்னால் அதிக நாட்கள் உயிருடன் இருக்கமுடியாது என்ற கவலையைவிட, தன்னை உறங்காவிடாமல் துரத்திக்கொண்டு இருக்கும் பல விஷயங்களை புத்தகமாக பதிவு செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலைதான் இவருக்கு அதிகமாக இருந்தது.


இவ்வளவு நடந்தும் எழுத்தாளனுக்கு உரிய கம்பீரத்துடன் தனது இல்லாமையை, இயலாமையை வெளிப்படுத்துவதை முற்றிலுமாகவே தவிர்த்து வந்தார். யாரிடமும் கைநீட்டுவதை சுய கவுரவத்திற்கான இழுக்காகவே கருதினார்.
யாருக்கும் கிடைக்காத எழுத்து வரம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது, உங்கள் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் விஷயங்கள் புத்தகங்களாக மாறவேண்டும், இன்னும் பல புதிய படைப்புகள் தருவதற்காகவாவது, நீங்கள் உயிருடன் இருக்கவேண்டும், ஆகவே உங்களுக்கு தேவையான விஷயங்களை தினமலர் வாசகர்கள் பார்த்துக் கொள்வார்கள், உங்களைப்பற்றி எழுதுவதற்கு மட்டும் சம்மதியுங்கள் என்ற சொல்லி அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவரது சம்மதம் பெற்றபிறகு என்னை தொடர்பு கொண்டார்.


பிறகு நான் தவசி அண்ணனிடம் பேசியபோதுதான் அவரது நிலமையின் தீவிரத்தை உணர்ந்தேன்.
உடனடியாக இந்த கட்டுரையை எழுதிவிட்டு வாசகர்கள் தொடர்புக்கு ஒரு போன் எண் போடவேண்டும், தவசியால் பேசமுடியாத நிலையில் யாருடைய போன் போடலாம் என்று கேட்பதற்காக அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.


ஒரு நீண்ட மவுனத்தை எடுத்துக்கொண்டார்,
மவுனத்திற்கு பிறகு விசும்பலும், கேவலும், அழுகையும், தொடர்ந்தது.


பின்னர் உடைந்த குரலுடன் அவர் சொன்னது,
தவசி அண்ணன் இறந்துட்டாரு .


- எல்.முருகராஜ்


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ksv - chennai,இந்தியா
27-மார்-201315:07:33 IST Report Abuse
ksv ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்..
Rate this:
Share this comment
Cancel
tmsaravanai - CHENNAI,இந்தியா
23-மார்-201307:01:12 IST Report Abuse
tmsaravanai மிகவும் கஷ்டமாக இருக்கிறது . பல பெரியவர்கள் இந்த புற்று நோய் காரணமாக இறந்து போனார்கள் . அவர்கள் வரிசையில் தவசி அவர்களும் சேர்ந்து விட்டார் . அன்னார் ஆன்மா சாந்தி அடையட்டும்
Rate this:
Share this comment
Cancel
Anantharaman - Porur, Chennai,இந்தியா
21-மார்-201318:33:30 IST Report Abuse
Anantharaman சற்று நாட்கள் முன்புதான் மலர்வதி அவர்களின் பற்றிய கட்டுரையில் கருத்து பகுதியில் தவசி அண்ணனை பற்றி பார்த்து மனம் வருதினேன். இப்போது மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமாக இருக்கிறது. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.. அவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel
prabakaran - chennai,இந்தியா
19-மார்-201323:20:30 IST Report Abuse
prabakaran தயவு செய்து அவர்களுக்கு என்று தினமலர் சார்பாக ஒரு வங்கி கணக்கை உருவாக்குங்கள்...உதவிக்கரம் நீட்ட நாங்களிருக்கிறோம்...உடனேயே இதற்கான ஏற்பாட்டை செய்யுங்கள்
Rate this:
Share this comment
Cancel
karthikeyan - India,இந்தியா
18-மார்-201322:31:25 IST Report Abuse
karthikeyan இவ்வளவு நடந்தும் எழுத்தாளனுக்கு உரிய கம்பீரத்துடன் தனது இல்லாமையை, இயலாமையை வெளிப்படுத்துவதை முற்றிலுமாகவே தவிர்த்து வந்தார். யாரிடமும் கைநீட்டுவதை சுய கவுரவத்திற்கான இழுக்காகவே கருதினார். சுய கவுரவத்திற்காகவோ என்னவோ கட்டுரை வெளியாகி வாசகர்களிடம் இருந்து உதவி கிடைபதற்க்கு முன்பே உயிர் துறந்து உண்மையான படைப்பாளியின் உயர்ந்த கம்பீரத்தை உலகிற்கு உணர்த்திவிட்டார். அன்னாரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலும், அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Ratchagan - Atlanta,யூ.எஸ்.ஏ
17-மார்-201310:28:56 IST Report Abuse
Ratchagan அவருடைய குடும்பத்து எப்படி உதவுவது? எதாவது போன் நம்பர் இருகிறதா?
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
17-மார்-201305:40:36 IST Report Abuse
naagai jagathratchagan படிக்கும்போதே கண்களின் விளிம்பில் நீர் தேங்குகிறது ....நெஞ்சு திணறுவது போலத்தெரிகிறது ...தவசி அண்ணன் இறந்து விட்டாலும் இன்னும் ..சேவல் கட்டு ..மூலம் இலக்கிய மனிதர்கள் உள்ளே வாழ்ந்து கொண்டிருப்பார் ...மரணம் என்பது தெரிந்த ஒன்று ..அதற்காக காத்திருப்பது மரணத்தை விட கொடியது என்பதை தவசி அண்ணனின் சோகத்தை படிக்கும்போது தெரிந்தாது ..அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
17-மார்-201301:51:33 IST Report Abuse
GOWSALYA இதுபோலப் பல எழுத்தாளர்களின் பெயர்கள் வெளிவருவதில்லை......உதவி இல்லாமையால்,அவைகள் அப்படியே முடங்கப்படுகிறது....தவசி அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.
Rate this:
Share this comment
Cancel
A.Mohamed Ibrahim - Trichy,சவுதி அரேபியா
16-மார்-201318:37:47 IST Report Abuse
A.Mohamed Ibrahim அரசு இதுபோன்ற எழுத்தாளர்களை அடையாளம் கண்டு உதவி செய்திருக்க வேண்டும். அவரது எழுத்துக்களை புத்தகவடிவில் வெளியிடுவதற்கும், அவரது குடும்பத்தினருக்கு தக்க உதவியும் செய்திடவேண்டும். நண்பர் கிருஷ்ணமூர்த்தி இதை சற்று முன்னறே செய்திருப்பின் நன்றாக இருந்திருக்கும், எல்லாம் அவன் செயல். எ. முஹம்மது இப்ராஹீம்.
Rate this:
Share this comment
Cancel
Tamil - Bengalooru ,இந்தியா
16-மார்-201318:26:23 IST Report Abuse
Tamil நன்றி முருகராஜ் ஒரு சக படைப்பாளியின் இன்றைய நிலையை வெளிபடுதியதருக்கு. ஆயினும் ஏன் நீங்கள் கட்டுரையை இப்படி மொட்டையாய் முடித்து விட்டீர்கள். திரு. தவசியண்ணன் அவர்களுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் உதவி செய்ய உலகம் முழுவதும் எண்ணில் அடங்கா தமிழ் நெஞ்சம் நிறைய உள்ளது. அவரின் நண்பர் திரு. கிருஷ்ணமூர்த்தியின் அலை பேசி எண், உங்கள் அலை பேசி எண் வெளியிடுங்கள், பின்பு பாருங்கள் எம் தாய் தமிழ் நெஞ்சங்களின் உறவை..., ஒரு சக எழுத்தாளனாக முருகராஜ் நீங்கள் அந்த தவசியன்னனுக்கு செய்யும் பேர் உதவி அவரின் எஞ்சிய படைப்புகளை வெளி கொண்டுவர முயற்சி செய்யுங்கள், அவரின் குழந்தைகள் படிப்பு கல்வி நம் தமிழ் நேசங்கள் பார்த்துகொள்ளும். இதுவே நாம் அவருக்கு செய்யும் சரியான சேவையாக இருக்கும். அவரின் படைப்புகள் என்றும் வாழும். உலகம் நம் கற்பனைக்குள் அடங்காத பிரம்மம் அது பிரம்மாண்டம்...அன்னாரின் குடும்பத்தார்க்கு எம் ஆழ்ந்த இரங்கலும், அவர் தம் ஆத்மா அமைதியுற எல்லாம் வல்ல எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்த சக்தியை வேண்டி பணிவன்புடன் தமிழ்.
Rate this:
Share this comment
Lakshmanan Murugaraj - Chennai,இந்தியா
20-மார்-201316:02:13 IST Report Abuse
Lakshmanan Murugarajதிரு.தமிழ் அவர்களுக்கு கட்டுரையாளர் முருகராஜ் வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்வது திரு.தவசி அவர்கள் பற்றிய கட்டுரைக்கு தாங்கள் கொடுத்திருந்த கருத்திற்கு நன்றி தங்கள் கருத்தின் அடிப்படையில் நான் திரும்பவும் சேகரித்த தகவலை இங்கு பதிவு செய்கிறேன் திரு.தவசியின் மணைவி அங்காள ஈஸ்வரி( 9171077759 ), மகள் சங்கமித்ரை( 5 வயது )மகன் விநோத்( 3 வயது )ஆகியோருடன் கணவரின் சொந்த ஊரான முதுகுளத்துõர் பக்கம் உள்ள முருகநேந்தல் என்ற கிராமத்திற்கு குடிபெயர்ந்து உள்ளார். இவர்களின் பொறுப்பாளராக நெருங்கிய உறவினர் திரு.நாகராஜன் உள்ளார்( அவரது தொடர்பு எண்:9894877717 ) திரு.தவசி அவர்கள் கடைசியாக வேலை பார்த்த அலுவலக நண்பர்கள் அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில் நிதி திரட்டி வருகின்றனர்,தற்போது 80 ஆயிரம் ரூபாய் சேர்ந்துள்ளது,ஒரு லட்சமானதும் திருமதி.அங்காளஈஸ்வரியின் கையில் கொடுத்துவிட முடிவு செய்துள்ளனர்.இது இன்னும் இரண்டு நாளில் நடந்தேறிவிடும். இது தவசியின் இலக்கியத்திற்கு,எழுத்திற்கு,தமிழுக்கு ஈடாகாதுதான் இருந்தாலும் இப்போதைக்கு இதுதான் முடிந்துள்ளது.அரசு சார்பிலான உதவிகளுக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அவரது சாதனை படைப்பான சேவல் கட்டு நாவல் கிடைக்குமிடம்:சந்தியா பதிப்பகம்,சென்னை-போன்-044-24896979. என்னைப் பொறுத்தவரை அவரது படைப்புகளிலேயே சிறந்த படைப்பாக அவரது குழந்தைகள் சங்கமித்திரை,மற்றும் விநோத் ஆகியோரைத்தான் சொல்ல வேண்டும், அவர்கள் வளர்ப்பதன் மூலம் நன்றாக படிக்க வைப்பதன் மூலம், சிறப்பாக வாழவைப்பதன் மூலம் திரு.தவசியை காணலாம்.,அவருக்கான அஞ்சலியாக அது நிச்சயம் இருக்கும். ஆகவே இந்த இரு குழந்தைகளின் படிப்பு செலவு உள்ளீட்ட வாழ்வாதார செலவை பார்த்துக்கொள்ளவும்,பகிர்ந்து கொள்ளவும் நினைப்பவர்கள் குழந்தைகளின் பொறுப்பாளராக உள்ள திரு.நாகராஜனை தொடர்பு கொள்ளவும். இந்த பதிவிற்கு வாய்ப்பு ஏற்படுத்திய வாசகர் திரு.தமிழுக்கு மீண்டும் நன்றி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை