தடை செய்யப்பட்ட, வெளி மாநில லாட்டரி சீட்டுக்களின் விற்பனை, தமிழகத்தில் அமோகமாக நடக்கிறது. தமிழகம் முழுவதும் ஏழைத் தொழிலாளர்களை குறி வைத்து, விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுக்கள், சேலத்தில் இருந்தே, தமிழகம் முழுமைக்கும் சப்ளை செய்யப்படுகிறது.
தமிழகத்தில், 2003ல் வெளி மாநில லாட்டரி சீட்டுக்களின் விற்பனை அமோகமாக நடந்தது. இதனால், ஏழை, எளிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது அரசின் பார்வைக்கு வந்ததை அடுத்து, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். அதை அடுத்து, போலீசார் தமிழகம் முழுவதும், தீவிர "ரெய்டு' மேற்கொண்டதை அடுத்து, லாட்டரி சீட்டுக்களின் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பின்னர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், லாட்டரி வியாபாரிகள் ஆட்சியாளர்களை தொடர்பு கொண்டு, லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்ய அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், தி.மு.க., - அ.தி.மு.க., அரசிலும் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனைக்கான தடை தொடர்கிறது. இந்நிலையில், லாட்டரி சீட்டுக்களின் விற்பனை மூலம், ருசி கண்ட வியாபாரிகள், தற்போது போலீசாரை கவனிப்பு செய்து விட்டு, லாட்டரி சீட்டு விற்பனையை கனஜோராக நடத்தி வருகின்றனர். இதில் கேரளா, கர்நாடகா, சிக்கிம், அசாம், மேற்கு வங்காளத்தில் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள், சேலம் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்தே தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. லாட்டரி வியாபாரிகள், சேலம் மாநகர், புறநகர் பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து, அவற்றை லாட்டரி சீட்டுக்களை சேமித்து வைக்கும் குடோன்களாக பயன் படுத்தி வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள், பஸ்களில் சேலம் கொண்டு வரப்படும் லாட்டரி சீட்டுக்கள், இங்கிருந்து மொத்தமாக வெளி ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரியில் இருந்தே அதிக அளவு, லாட்டரி சீட்டுக்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, லாட்டரி வியாபாரிகள், மாதம், வாரம், தினம் என, போலீசாரை கவனிப்பு செய்து வருகின்றனர்.
வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களிலும் லாட்டரி வியாபாரிகளுடன், போலீசார் சிண்டிகேட் அமைத்துக் செயல்படுவதால், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களின் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. சேலத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு, லாட்டரி சீட்டுக்கள் கடத்தப்படுவது, விற்பனை செய்யப்படுவது குறித்து, உளவுத்துறை போலீசார், உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையை அனுப்பி உள்ள நிலையிலும், நடவடிக்கை என்பது கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.