லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி மலருவதற்கும், தேசிய அளவில் புது அணியை உருவாக்க, ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம், டில்லியில் இன்று நடைபெறவுள்ளது.
பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, முதல்வர் நரேந்திர மோடி, துணை பிரதமர் வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, அக்கூட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் நிறுத்தப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது.
மூத்த தலைவர் அத்வானி தலைமையில் ஒரு அணியும், பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா பா.ஜ., தலைவர் அருண்ஜெட்லி ஆகிய இருவரின் தலைமையில் ஒரு அணியும், பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், மோடி ஆகிய இருவர் தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன. இந்நிலையில், பிரதமர் வேட்பாளராக மோடியும், துணை பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதாவையும் முன்னிலைப்படுத்தி, தேசிய அளவில் புதிய அணியை உருவாக்க, ஜனதா கட்சியின் தலைவர் சு.சாமி திட்டமிட்டு உள்ளார் என, கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், - பா.ஜ., ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என, ஜெயலலிதா அறிவித்துள்ளார். இருப்பினும் பா.ஜ., பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்கும் பட்சத்தில், அ.தி.மு.க., அணியில் பா.ஜ., இடம் பெறவும் வாய்ப்புள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில், அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப, கூட்டணி முடிவை அ.தி.மு.க., மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக, சு.சாமி தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இடம் பெறுவதற்காக, துணை பிரதமர் பதவியை ஜெயலலிதாவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.,விடம் முன்வைக்க சு.சாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால், தேர்தல் முடிவுக்கு பின், பா.ஜ., கட்சியை ஆதரிப்பது குறித்து முடிவு எடுக்கவும் அ.தி.மு.க., தரப்பு திட்டமிட்டுள்ளது.
இச்சூழ்நிலையில், டில்லியில் ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று (17ம் தேதி) நடைபெறவுள்ளது. அதில், தமிழக ஜனதா கட்சியின் தலைவர் சந்திரலேகா உட்பட, 20 பேர் பங்கேற்கின்றனர். அக்கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக மோடியையும், துணை பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதாவையும் முன்னிலைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி மலர வேண்டும் என்ற, கோரிக்கையை வலியுறுத்தவும் ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபா தேர்தல், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், உர ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், ராபர்ட் வதேராவின் ரியல் எஸ்டேட் ஊழல் போன்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் காங்கிரஸ், தி.மு.க.,வுக்கு எதிராக, தேசிய அளவில் மாற்று அணியை உருவாக்க சு.சாமி திட்டமிட்டுள்ளார். கர்நாடகாவில் எடியூரப்பா கட்சியினரை சமரசம் செய்து, மீண்டும் பா.ஜ.,வில் அவர்களை இழுக்கவும், மகாராஷ்டிராவில் எதிரும், புதிருமாக செயல்படும் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே, மருமகன் ராஜ் தாக்கரேவை இணைத்தும், தமிழகத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., உறவை மலரவைக்கும் முயற்சியில் சு.சாமி ஈடுபடுவார். இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு தனி மாகாணம் உருவாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை, சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேஷவை சந்தித்து சு.சாமி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ராஜபக்ஷேவிடம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து, அமெரிக்க வெளியுறவு விவகாரத்துறை அமைச்சரிடம் சு.சாமி தெரிவித்துள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதெல்லாம் தேவை இல்லை. தேர்தல் முடிந்ததும் எந்தக்கட்சி வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கட்டும். அதிமுக எப்படியும் குறைந்தது 36 தொகுதிகள் ஜெயிக்கும். ஆறு கேபினட் மினிஸ்டர்கள், மூன்று இணை அமைச்சர்கள் என்று தமிழகத்துக்கு கிடைத்தால் போதும். அதை விட்டு துணை பிரதமர் என்று உசுப்பேத்திவிட்டு ஒழுங்காக இருக்கும் ஆட்சியை ஒழித்துவிடாதீர்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.