Uratha sinthanai | கறுப்பு ஆடுகளின் காலம்: உரத்த சிந்தனை, வி.கோபாலன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கறுப்பு ஆடுகளின் காலம்: உரத்த சிந்தனை, வி.கோபாலன்

Added : மார் 16, 2013 | கருத்துகள் (4)
Advertisement
கறுப்பு ஆடுகளின் காலம்: உரத்த சிந்தனை, வி.கோபாலன்

இந்திய ஜனநாயக அமைப்பின் முக்கியமான மூன்று தூண்கள், நிர்வாகத் துறை, சட்டசபை, பார்லிமென்ட் மற்றும் நீதித்துறை. நான்காவது தூணாக கருதப்படுவது, ஊடகத்துறை. செய்தி பத்திரிகைகள் தான், நான்காவது தூண்.
நம் அரசியல் சாசன அமைப்பின்படி, நீதித்துறை தான், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் கண்காணிப்பாளராக கருதப்படுகிறது. நிர்வாகம், சட்டசபை, பார்லிமென்ட் ஒப்புதலுடன் சட்டம் இயற்றி, அந்த சட்டத்தை அமல்படுத்த முற்படும் போது, குறிப்பிட்ட சட்டம் இந்திய அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டதானது என்று, நீதித்துறை கருதினால், அந்த சட்டம் செல்லாது என, தீர்ப்பு வழங்கும் உரிமை நீதிமன்றத்திற்கு இருக்கிறது. நீதித்துறைக்கு உள்ள இந்த அதிகாரம், நம் அரசியல் சாசனத்தில் ஒரு முக்கியமான அம்சம். நீதிமன்றங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளை காப்பது போல், மொத்த சமூகம் அல்லது நாட்டின் நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய, அரசுச் செயல்கள் ஏதேனும் இருந்தால், அந்த மாதிரி செயல்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையையும் பெற்றிருக்கின்றன.
மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சமூக நலனை பாதுகாக்க, சமீப காலத்தில், உச்ச நீதிமன்றமும் மற்றும் சில உயர் நீதி மன்றங்களும் ஏற்றுக் கொண்டிருக்கும் அல்லது தீர்ப்பு வழங்கியிருக்கும், சில வழக்குகள்: மத்திய அரசு தொலைத்தொடர்பு இலாகா அலைக்கற்றை ("2ஜி') உரிமம் வழங்கும் முறையில் காணப்பட்ட ஊழல் மற்றும் லஞ்சம். இதில், உச்ச நீதிமன்றம் பொது நல நன்மை கருதி, ஒரு சரியான முடிவெடுத்து, இந்த ஊழலை விசாரிக்க, ஒரு தனி விசாரணை மன்றத்தை அமைத்தது. இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து கொண்டிருக்கிறது. இந்த அலைக்கற்றை ஊழலை பற்றி பொதுமக்கள் நன்றாக அறிவர். ஏனென்றால், இந்த ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஒரு ஆண்டிற்கும் அதிகமாக சிறையில் இருந்து, இப்போது ஜாமினில் வெளிவந்திருப்பவர் ஆ.ராஜா; முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர். இந்த ஊழல் வழக்கில், ராஜாவைத் தவிர பல அதிகாரிகளும், தமிழகத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியும் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன், இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டத்தை பற்றி ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அனைத்து நதிகளையும் இணைப்பது, அனைத்து மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் என, அப்போது உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதற்கு ஒரு காலக்கெடுவும், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் விதித்தது.

மும்பையிலுள்ள, ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஊழல் வழக்கில், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் ஒருவரும், சில ராணுவ அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கின் அடிப்படை பொதுநலம். கர்நாடகாவின், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின், நில ஆர்ஜிதம் சம்பந்தமான பல ஊழல் குற்றச்சாட்டுகளை பற்றி விசாரிக்க, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது; இதுவும் ஒரு சமூக நல வழக்கு. தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., அரசின் பல செயல்பாடுகளை நிறுத்தி வைத்து, அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்; இவை எல்லாமே பொது நலனை அடிப்படையாக கொண்ட வழக்குகள்.


* தற்போதைய மத்திய அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சர், சில ஆண்டுகளுக்கு முன், அரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்த போது நடந்த ஊழலை பற்றி விசாரிக்க, அரியானா நீதிமன்றம் அனுமதித்தது. மத்திய அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.

* மேற்கு வங்கத்தில், சிங்கூர் நிலம் ஆர்ஜிதம் சம்பந்தமாக, அந்த மாநிலம் இயற்றிய சட்டம் செல்லாது என, கோல்கட்டா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... சமூக ரீதியாகவும் மற்றும் நாட்டு மக்களின் மொத்த நலனையும் கருத்தில் கொண்டு, நம் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன. நீதிமன்றங்களின் இந்த செயல்பாடு, அரசியல் சாசனம் மூலம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல், உச்ச நீதிமன்றத்திலும் சரி, உயர் நீதிமன்றத்திலும் சரி, மிகத் திறமையான நீதிபதிகள், உண்மைக்கும், நீதிக்கும், நன்னெறிக்கும் கட்டுப்பட்டு, தனிப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை காத்து, சமூக நீதியாகவும் ஒட்டு மொத்த நாட்டு நலனுக்காகவும் பணியாற்றி, மக்களிடையே நீதிமன்றங்களின் மேல் ஓர் அசைக்க முடியாத நம்பிக்கையையும், மதிப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றனர். ஆனால், சமீப காலங்களில் நீதி துறையை பற்றி வெளிவந்த, சில செய்திகள் கவலை தருவதாக, இந்த நம்பிக்கையை குலைப்பதாகவும் இருக்கின்றன. பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, ஒரு சில நீதிபதிகள், சுரங்க வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் இருந்த கர்நாடக அரசில் முன்னாள் அமைச்சராக இருந்த சிலரை ஜாமினில் விடுவித்தது, அவைகளில் ஒன்று. இதில், நீதிபதிகளுக்கும், குற்றவாளிக்கும் இடையே பாலமாக செயல்பட்ட சில வழக்கறிஞர்களும் இருக்கின்றனர். இதில் ஆறுதல் தரும் விஷயம்: இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர், தொழில் நிறுவனம் ஒன்றிலிருந்து, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதித் தொகையை (அதுவரை நிறுவனத்தால் செலுத்த படாமலிருந்த தொகை), கோர்ட்டில் கட்டச் சொல்லி, பின், அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்.

இந்த உண்மை தெரிந்து, அதை பற்றிய வழக்கு வந்த போது, அந்த நீதிபதி எடுத்த பணத்தை திரும்ப செலுத்தினாலும், அவர் அந்த பணத்தை, தன் சொந்த உபயோகத்திற்கு கையாண்டது, ஒரு அதிர்ச்சியான சம்பவம். ஒரு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியா இப்படி என்ற அதிர்ச்சி. விளைவு, அந்த நீதிபதி தன் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. கேரளாவை சேர்ந்த ஒருவர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த காலகட்டத்தில், அவரும், அவருடைய நெருங்கிய உறவினர்களும், தங்களுடைய வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு. தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ஒருவர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். ஆனால், அவர் அந்த பதவியை ஏற்கும் முன், அவர் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு. சென்னைக்கு அருகே பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தனியார் நிலங்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு. அதனால், அவருக்கு அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி, விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மாதிரி இன்னும் சில நிகழ்ச்சிகள், நம் நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், மதிப்பையும் குறைக்க காரணமாகின்றன. நீதிமன்றங்களை அணுகினால் நியாயம் கிடைக்கும் என்று, மக்கள் உறுதியாக நம்புகின்றனர். சில நீதிபதிகளின் செயல்கள், அந்த நம்பிக்கையை ஓரளவிற்கு பாதிக்கிறது. வேலியே பயிரை மேயலாமா? இந்த மாதிரியான நிகழ்ச்சிகள், அங்கொன்று இங்கொன்று என்று இருந்தாலும், இதுவே தொடர்ந்து பெரிய அளவில் நடந்தால், ஜனநாயகத்தின் எதிர்காலம் பற்றி கவலை ஏற்படும். நீதிமன்றங்களின் மீது மக்களின் நம்பிக்கை குறையாமல் இருக்க வேண்டுமானால், அப்பழுக்கற்றவர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும். குற்றம் செய்த நீதிபதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். வேலியே பயிரை மேய எந்த நாளும் அனுமதிக்க கூடாது. தொலைபேசி: 2441-3896

வி.கோபாலன், வங்கி அதிகாரி (பணி நிறைவு)

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thangamagan - ????????,இந்தியா
17-மார்-201313:15:26 IST Report Abuse
Thangamagan இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டத்தை எப்போ நடத்த போறாங்களோ அன்றைக்குதான் தென்மாநிலங்களின் தண்ணீர் பிரச்னையும், குழாயடி குடுமி சண்டையும் தீரும். நம்முடைய சுப்ரீம் கோர்ட்டுக்கு இருக்குற அக்கறை அரசை ஆள்பவர்களுக்கு இல்லையே என்பது தான் என்போன்றவர்களுக்கு உள்ள ஆதங்கம்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-மார்-201313:04:01 IST Report Abuse
g.s,rajan மொத்தத்தில் நீதித் துறைக்கு கரும் (கறுப்புப்)புள்ளி ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
17-மார்-201311:14:36 IST Report Abuse
KMP நாட்டில் நீதியை நிதியை வைத்து விலைக்கு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் ... இந்த நாட்டில் நான் யாரிடம் நீதி கேட்டு செல்வது ????
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
17-மார்-201310:10:56 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் சில தவறான நீதிபதிகளாலும் அவர்களின் தீ ஒழுக்கத்தாலும் மக்கள் நீதித்துறை மீதே அவநம்பிக்கை கொள்ள நேரிடும்..எனவே நீதிபதிகள் சான்றாண்மை குன்றாது இருப்பது மிகவும் அவசியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை