மேட்டூர்: வாச்சாத்தி வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என, அறிவித்த நிலையில், தொடர்ந்து பணியில் நீடிப்பதால், அதற்கான விளக்கம் கேட்டு சம்பந்தபட்ட ஊழியர்களுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால், வாச்சாத்தி வழக்கு சம்பந்தபட்ட வனத்துறை ஊழியர்கள், "டிஸ்மிஸ்' பீதியில் உள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தாலுகா, சேர்வராயன்மலை தொடரில் உள்ளது வாச்சாத்தி கிராமம். இந்த கிராமத்திலுள்ள வயல்வெளிகளில் சந்தன கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறைக்கு புகார் வந்தது. 1992 ஜூன், 20ம் தேதி, 155 வன ஊழியர்கள், 108 போலீஸார், ஆறு வருவாய்துறை அதிகாரிகள் உள்பட, 269 பேர் கூட்டாக வாச்சாத்தி கிராமத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, வயல்வெளி, ஏரி உள்பட பல்வேறு இடங்களில் பதுக்கிய, 60 டன் சந்தன கட்டைகளை வனத்துறை பறிமுதல் செய்யப்பட்டது. பதுக்கல் தொடர்பாக, 80 பெண்கள் உள்பட வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த, 133 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இதில், 18 பெண்களை சோதனைக்கு சென்ற குழுவினர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
குற்றச்சாட்டு தொடர்பாக சோதனைக்கு சென்ற வனத்துறை, வருவாய்துறை, போலீஸ் துறையை சேர்ந்த, 269 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த காலக்கட்டத்தில், 269 பேரில் வனத்துறையை சேர்ந்த, 29 பேர், போலீஸ்துறையில், 24 பேர், வருவாய்துறையில் ஒருவர் இறந்து விட்டனர். மீதமுள்ள, 215 பேரும் குற்றவாளிகள் என, கூறி, 2011 செப்டம்பர், 29ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தண்டனையும் விதித்தது. எனினும், அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக வாச்சாத்தி வழக்கில் தண்டனை பெற்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட வனசரகர், வனவர் உள்பட, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து வனத்துறையில் பணிபுரிகின்றனர். இது வனத்துறைக்கு பல்வேறு சிக்கல் ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, "தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை நடவடிக்கை சட்டத்தின் கீழ், உங்களை மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது. அதற்கான விளக்கத்தை, 15 நாட்களுக்குள் தர வேண்டும்' என, வாச்சாத்தி வழக்கு சம்பந்தபட்ட, வன ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. நோட்டீஸிற்கான விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில், சம்பந்தபட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது என, வனத்துறையினர் அச்சமடைந்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை வாச்சாத்தி வழக்கில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள், ஊழியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.