திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை நீடிப்பதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாகி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அணைகளை பொறுத்தவரை பாபநாசத்தில் 78.20 அடியாக இருந்த நீர் மட்டம் நேற்று 78.60 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 302 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சேர்வலாறு அணையில் 91.01 அடியாக இருந்த நீர்மட்டம் 91.57 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையில் 91.05 அடியாக இருந்த நீர்மட்டம் 91.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 137 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் மழை:
அணை பகுதிகளில் பாபநாசம் கீழணையில் 10, சேர்வலாறு அணையில் 10, மணிமுத்தாறில் 9.8. கடனா நதியில் 2, ராமநதியில் 4, கருப்பாநதியில் 24, குண்டாறில் 11.2, அடவிநயினார் அணையில் 15 மி.மீ அளவுகளில் மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பிற பகுதிகளான நெல்லை, பாளை, அம்பை, தென்காசி, ஆலங்குளம், சேரன்மகாதேவி உட்பட பல இடங்களிலும் மழை பெய்தது. நேற்று காலை வரை நிலவரப்படி அம்பையில் 5.3, ஆய்குடியில் 15.2, சேரன்மகாதேவியில் 6.4, நான்குநேரியில் 7, பாளையில் 29, செங்கோட்டையில் 30, சிவகிரியில் 1, தென்காசியில் 40, நெல்லையில் 2.4, ஆலங்குளத்தில் 26, வீ.கேபுதூரில் 15 மி.மீ அளவுகளில் மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் நேற்றும் காலை முதலே வானம் மப்பும், மந்தாரமுமாக கரு மேக கூட்டங்களுடன் காணப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நெல்லை ஜங்ஷன், பாளை, டவுன், சமாதானபுரம், பாளை மார்க்கெட் உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. ஆனால் மதியத்திற்கு பிறகு மழை பெய்யவில்லை. எனினும், மாலையிலும், இரவிலும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் ஒரு சில நாட்கள் மழை நீடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையில் மாவட்டத்தில் கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சி நிவாரண பணிகளை விரைவில் குழுவினர் பார்வையிடுகின்றனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்தும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.