புதுடில்லி: "இத்தாலி தூதர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என, கூறப்படுவது தவறு; அவருக்கு அத்தகைய அதிகாரம் வழங்கப்படவில்லை. அடுத்த உத்தரவு வரும் வரை, அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
கேரள கடல் எல்லையில், இந்திய மீனவர் இருவரை, கடற்கொள்ளையர் என நினைத்து, சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர், கடந்த மாதம், சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி பெற்று, தங்கள் நாட்டுக்குச் சென்றனர். "அவர்களை திருப்பி அனுப்ப முடியாது' என, அந்நாட்டு புதிய அரசு தெரிவித்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளது. "கடந்த டிசம்பரில், அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு, சிறப்பு அனுமதி பெற்று சென்று, திரும்பி வந்தனர். அதுபோல, இப்போதும் திரும்பி வந்து விடுவர்' என, இந்தியாவுக்கான இத்தாலி தூதர், டேனியல் மன்சினியும், சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இத்தாலியின் செயலால், வருத்தமடைந்த, அந்நாட்டு வீரர்களுக்காக ஆஜரான, மூத்த வழக்கறிஞர், ஹரிஷ் சால்வே, வழக்கிலிருந்து தானாக விலகினார்.
முதல் உத்தரவு: இம்மாதம், 14ம் தேதி, இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, "இத்தாலி தூதர், மன்சினி, சுப்ரீம் கோர்ட் அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது' என, தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் தலைமையிலான, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது. இத்தாலி வீரர்களை திருப்பி அனுப்புவது குறித்து, 18ம் தேதி பதிலளிக்கும்படி, இத்தாலி தூதருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தூதர் மன்சினி மற்றும் இத்தாலி அரசின் சார்பாக, மற்றொரு மூத்த வழக்கறிஞரான, முகுல் ரோஹத்கி ஆஜரானார்.
"இம்யூனிட்டி': தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர், நீதிபதிகள், ஏ.ஆர்.தவே மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' முன், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ""இத்தாலி தூதரின் சுதந்திரமான செயல்பாட்டை தடுத்து நிறுத்த, இந்திய அரசுக்கோ, சுப்ரீம் கோர்ட்டிற்கோ அதிகாரம் கிடையாது. அவருக்கு, "இம்யூனிட்டி' (தூதரக ரீதியான சட்ட பாதுகாப்பு) உள்ளது,'' என்றார். அதற்கு ஆதாரமாக, 1961ம் ஆண்டு, ஜெனிவா மாநாட்டு தீர்மான நகலையும், இந்திய வெளியுறவுத் துறைக்கு, இத்தாலி அரசு அனுப்பிய கடிதத்தையும் தாக்கல் செய்தார். மீண்டும் மீண்டும் அவர், இத்தாலி தூதரை கைது செய்யும் அதிகாரம், இந்திய அரசுக்கு கிடையாது என, வலியுறுத்தினார்.
இதனால், கோபம் அடைந்த, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்திய சட்டங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இத்தாலி தூதருக்கு, தூதரக ரீதியான சட்ட பாதுகாப்பு எதுவும் கிடையாது. அவர் இந்த கோர்ட்டுக்கு வந்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்த போது, அவருக்கு, தூதரக ரீதியான சட்ட பாதுகாப்பு இருக்கிறதா என்பதை நாங்கள் யோசிக்கவில்லை. எங்களிடம் உறுதியளித்து விட்டு, அந்நாட்டு வீரர்களை இத்தாலிக்கு அனுப்பி வைப்பார்; பிறகு அந்த உறுதியை அவரே மீறுவார்; அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சொல்வீர்களா? இத்தாலி அரசு எதையும் சொல்லிவிட்டுப் போகட்டும். அந்த அரசு சார்பில், எங்களுக்கு உறுதியளித்த தூதர், மன்சினி என்ன சொல்கிறார்? தப்பிச் சென்ற வீரர்களை ஒப்படைக்கப் போகிறாரா, இல்லையா? இது போல அவர் நடந்து கொள்வார் என, நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.
அனைவருக்கும்...: தனக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு உள்ளது என சொல்லும், அவர் பேச்சை நம்ப, நாங்கள் தயாராக இல்லை; நம்பிக்கையை அவர் இழந்து விட்டார். எனவே, ஏற்கனவே உத்தரவிட்டது போல், இத்தாலி தூதர், எங்கள் உத்தரவு இல்லாமல், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது; அவர் வெளிநாடு செல்லாமல் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் எடுக்க வேண்டும். இந்த வழக்கை, அடுத்த மாதம், 2ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். ஏனெனில், நான்கு வார அவகாசம் கேட்டு, இத்தாலி சென்ற வீரர்கள் திரும்பி வருவதற்கு இன்னமும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் இன்னமும், "திரும்பி வர மாட்டோம்' என, தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அவகாசம், 22ம் தேதி வரை உள்ளது; அது வரை பொறுத்திருப்போம்.
மீறவில்லை: ஏனெனில், இத்தாலி வீரர்கள் இன்னும் நம் உத்தரவை மீறவில்லை. அரசுகளுக்கு இடையே தான், இதுகுறித்த தகவல் தொடர்பு இருந்துள்ளது. இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த கோர்ட்டுக்கு வந்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்த போது, அவருக்கு, தூதரக ரீதியான சட்ட பாதுகாப்பு இருக்கிறதா என்பதை நாங்கள் யோசிக்கவில்லை.
என்ன செய்வது. இப்படி இருக்கிறது நம் நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் லட்சணம். ஒரு வெளிநாட்டு தூதுவருடைய வரம்பு இல்லை அவர் மீதான நடவடிக்கைகளுக்கு என்ன வரம்பு என தெரியாமல் அந்த இரண்டு பேரையும் ஊருக்கு அனுப்பிவைத்து விட்டு இப்போது தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.நம் சட்டங்களை நாமே மதிப்பதில்லை அப்படி இருக்கும் பொது எப்படி மற்ற நாட்டுக்காரர்களை எதிர்பார்ப்பது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.