சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், டில்லியிலிருந்து நேற்று சென்னை வந்த, புத்த சாமியார்கள் இருவர், மர்ம நபர்களால் தாக்கப் பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே போலீசார் அங்கு வருவதற்குள், மர்ம நபர்கள் மூவரும் தப்பியோடினர்.
இலங்கை கண்டியை சேர்ந்த, புத்த சாமியார் பண்டாரா, 40, தலைமையில், 19 பேர், இந்தியாவில் உள்ள புத்தகயாவிற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, டில்லியிலிருந்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் "எஸ் 6' பெட்டியில் ஒன்றாக பயணம் செய்தனர். இந்த ரயில் நேற்று காலை, 7:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது.
அலறல்: திடீரென, மூன்று மர்ம நபர்கள், "எஸ் 6' பெட்டிக்குள் புகுந்தனர். அங்கு காவி உடையிலிருந்த புத்த சாமியார் பண்டாராவையும், அவருக்கு அருகில் சாதாரண உடையிலிருந்த புத்தசாமியார் வங்கீசாவையும் பிடித்து இழுத்து அடித்தனர். அவர் பயத்தில் அலறியதால், அவருடன் பயணம் செய்ய மற்றவர்கள், அவரருகில் ஓடிவந்து, மர்ம நபர்களை தடுத்தனர்; எதிர்த்து அடிக்கவும் முயன்றனர். பெட்டிக்குள் புகுந்த மர்ம நபர்களின் தாக்குதலை, பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயில்வே போர்ட்டர்கள் பார்த்துவிட்டு, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர். இதற்குள்ளாக தகராறில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். புத்த சாமியார்கள் இருவர் மற்றும் இவர்களுடன் வந்திருந்த இலங்கையை சேர்ந்த, 17 பேரையும், ரயில்வே போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களில், 17 பேரை, எழும் பூரில் உள்ள புத்தமடாலயத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன், வேனில் அனுப்பி வைத்தனர். புத்த சாமியார்கள் இருவரையும், பாதுகாப்பாக நிலையத்திற்கு அழைத்து சென்றனர். "ரயில் பெட்டியில் நடந்தது என்ன? தகராறில் ஈடுபட்டவர்கள் குறித்து அடையாளம் ஏதும் தெரிவிக்க முடியுமா?' எனவும் கேட்டனர்.
காயம்: இதற்கு புத்த சாமியார் பண்டாரா, ""மூன்று பேர் வந்தனர். இருவர் பேன்ட் சர்ட் அணிந்துஇருந்தனர். ஒருவர் பேன்ட், டி சர்ட் அணிந்திருந்தார். மூன்று பேரும், நாங்கள் பயணம் செய்த பெட்டியில் ஏறியதும், "நீங்கள் இந்தியாவிற்கு ஏன் வந்தீர்கள், சிங்களர்களே திரும்பி போங்கள்' என, திட்டினர். அப்போது, எங்களை அவர்கள் தாக்கினர்' எனவும் கூறினார். தன் முகத்திலும், நெஞ்சிலும், காலிலும் மர்ம நபர்கள் தாக்கியதாக கூறியவர், இடது காலில் இருந்த காயத்தையும், போலீசாரிடம் காட்டினார். காவி உடை அணிந்திருந்த புத்த சாமியாரை, வேறு யாரும் திடீரென தாக்கி விடாமலிருக்க, முன்னெச்சரிக்கையாக, அவரது காவி உடை மீது, சாதாரண உடை அணியுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். விசாரணைக்கு பிறகு, புத்த சாமியார் இருவரும், மற்றொரு வேனில் எழும்பூரில் உள்ள புத்தமடாலயத்திற்கு, போலீஸ் காவலுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் வந்து, ஆறாவது பிளாட்பாரத்தில் நின்றததும், பயணிகள் இறங்கியபோது, திடீரென மர்ம நபர்கள் மூன்று பேர், பெட்டியின் உள்ளே நுழைந்து புத்த சாமியார்களையும், அவர்களுடன் வந்திருந்தவர்களையும் தாக்கிவிட்டு, இரண்டே நிமிடத்தில் அங்கிருந்த தப்பி ஓடியுள்ளனர்.
விசாரணை: இதை, தனியார் "டிவி' நிறுவனத்தின்,கேமராமேன் வீடியோவில் பதிவு செய்து உள்ளார். செய்தி நிருபரும் அவருடன் இருந்துள்ளார். இதனால், மர்ம நபர்கள் பற்றி இவர்களுக்கு ஏதும் விவரம் தெரியுமா என, விசாரிப்பதற்காக, ரயில்வே போலீசார், இவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். புத்த சாமியார்கள் தாக்கப்பட்டபோது, அவர்கள் வீடியோவில், பதிவு செய்து வைத்திருந்த காட்சிகளையும் போலீசார் பார்த்தனர். இதன்பிறகு, "புத்த சாமியார்களும், இலங்கை நாட்டினரும் ரயிலில் வருவது உங்களுக்கு எப்படி தெரியும்?' என, கேட்டதற்கு, "எங்கள் அலுவலக தொலைபேசியில் பேசிய நபர் கூறினார். அதனால் தான், நாங்கள் வந்தோம். மர்ம நபர்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது' என, தெரிவித்தனர். இதன் பிறகு, இருவரையும்போலீசார் அனுப்பிவிட்டனர்.
டில்லி பயணம்: எழும்பூரில் உள்ள புத்தமடாலயத்தில் தங்கியிருந்த புத்த துறவிகள் அனைவரும், நேற்று இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றனர். ராஜபக்ஷே மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழகத்தில், பல்வேறு அமைப்பினர்கள் போராட்டங்களை நடத்தி வந்த சூழலில், ஆன்மிக சுற்றுலா சென்று வந்த இலங்கையைச் சேர்ந்த, 19 புத்த துறவிகள், நேற்று காலை, சென்னை, சென்ட்ரலுக்கு வந்தனர். இந்நிலையில், தமிழர்களால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதையடுத்து, அந்த 19 பேரும் எழும்பூர் புத்தமடாலயத்தில் தங்க வைத்தனர். மேலும், தமிழர்களால் தங்களுக்கு பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், நேற்று வந்தவர்கள், ஏற்கனவே அங்கு தங்கியிருந்தவர்கள் என, 63 பேரும், நேற்று இரவு, சென்ட்ரலில் இருந்து டில்லி புறப்பட்டுச் சென்றனர்.எழும்பூர் போலீசாரும், உடன் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
புத்தமதம் உள்ள நாட்டில் இவ்வளவு அட்டூழியம் நடக்கலாமா? நாம் வரலாற்றறை ஆரம்பத்திலிருந்து கவனிக்க வேண்டும். இடைப்பட்ட விசயங்களை மட்டும் கருத்தில் கொண்டு நாம் இந்த பிரச்னையை பார்க்க கூடாது. தொடங்கி வைத்தது யார். உரிமைகள் பறிக்கப்பட்டதால் தான் தமிழர்கள் போராட்டம் செய்தார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாது. இலங்கையில் புத்தமத கொள்கைகள் எங்கு சென்றது?
இலங்கையில் தமிழர்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது என்றால், இதுவும் கண்டிக்க தக்கதே. அவ்வளவு வீரம் உள்ளவர்கள் இலங்கைக்கே சென்று தங்கள் போராட்டத்தை காட்ட வேண்டும். இங்கு சுற்றுலா வரும் இலங்கை மக்களை தாக்குவது பேடித்தனம். விருந்தாளியாக வந்தவர்கள் விரோதிகளாக இருந்தும் அவர்களை வரவேற்று உபசரிப்பது தான் பண்பாடு, நாகரீகம். தமிழர் நாகரீகம், பண்பாடு என்றெல்லாம் பேசும் தமிழ் காவலர்கள் சுய கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொண்டது கடைந்தெடுத்த காட்டுமிராண்டித்தனம். இங்கு இவர்கள் வீரத்தை காட்டியதற்கு, அங்கு நம் ரத்த சொந்தங்கள் தான் விளைவுகளை அனுபவிக்க வேண்டி வரும். இதை கூட புரிந்து கொள்ளாத மேதாவிகள் இனியாவது தங்கள் வீரத்தை அடக்கி கொள்ளவேண்டும். இதுவே ஈழ தமிழர்களுக்கு இவர்கள் செய்யும் பெரிய உதவி.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.