சென்னை:"தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, தொல்பொருள் ஆராய்ச்சிக்காக வரும் சுற்றுலா பயணிகளையும், புத்த பிட்சுகளையும் தொடர்ந்து தாக்குவது, கடும் கண்டனத்துக்குரியது' என, இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர், ஜவஹர் அலி கூறியதாவது: இலங்கை தமிழர்கள் நலனுக்காக, தமிழகமே ஜனநாயக ரீதியாகவும், அகிம்சை வழியிலும் போராட்டம் நடத்தி வருகிறது. அதை சீர்குலைக்கும் வகையில், இலங்கையிலிருந்து சுற்றுலா பயணமாக தமிழகத்திற்கு வரும் சிங்களர்களையும், புத்த பிட்சுகளையும் தொடர்ந்து சிலர் தாக்கி வருவது, பெரும் வேதனை அளிக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்றும், விருந்தாளிகளை கவுரப்படுத்துவதில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள் தமிழர்கள் என, பெயர் எடுத்துள்ள போது, இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவதால், நமக்கும், அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடாதா? புத்த பிட்சுகள் எல்லாரும் கெட்டவர்கள் அல்ல என்பதை, தமிழ் ஆர்வலர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் மனிதாபிமான சிங்களர்கள் தமிழர்களுக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கின்றனர். நாம் தொப்புள் கொடி உறவுகளை இழந்து, காயப்பட்டிருக்கிறோம் என்ற வேதனையில், இது போன்று தமிழகத்திற்கு வரும் புத்த பிட்சுகளை திட்டமிட்டு, கொடூரமாகத் தாக்குவது முறைதானா, நியாயம் தானா என, சிந்திக்க வேண்டும்.
இலங்கை, தாய்லாந்து, பர்மா, சிங்கப்பூர் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் அதிகமான புத்த துறவிகளும், தமிழர்களும் ஒற்றுமையாக, சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் புத்த துறவிகள் மீது தாக்குதல் நடத்தினால், அந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், தொல் பொருள் ஆராய்ச்சிக்காக வரும் சுற்றுலா பயணிகளையும், புத்த பிட்சுகளையும் தொடர்ந்து தாக்குவது கடும் கண்டனத்துக்குரியது. அறவழிப் போராட்டம் நடத்தி, உலக நாடுகளை நாம் திரும்பிக் பார்க்க வைத்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, இங்குள்ள கட்சியினர் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.