பச்சிளம் குழந்தைகளுடன் பெண்கள் காத்திருப்பு அரசு மருத்துவமனையில் "ஜனனி சுரக்ஷா' உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு| Dinamalar

தமிழ்நாடு

பச்சிளம் குழந்தைகளுடன் பெண்கள் காத்திருப்பு அரசு மருத்துவமனையில் "ஜனனி சுரக்ஷா' உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு

Added : மார் 19, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சேலம்: சேலம், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்காக, "ஜனனி சுரக்ஷா' எனும் திட்டத்தின் கீழ், பெற்றோருக்கு, 700 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த உதவித்தொகையை வழங்காமல், நிர்வாகம் இழுத்தடிப்பு செய்வதால், பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பெண்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். பல மணி நேரம் காத்திருப்பதால், குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது.சேலம், அரசு மருத்துவமனைக்கு, பல்வேறு கட்ட சிகிச்சைக்காக, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட பகுதியில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். 50க்கும் மேற்பட்ட ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களின் வளர்ச்சிக்காக, கிராமப்புற பெண்களுக்கு, 700 ரூபாயும், நகர்ப்புற பெண்களுக்கு, 600 ரூபாயும், "ஜனனி சுரக்ஷா' என்ற திட்டத்தின் கீழ், அரசு உதவித்தொகையாக வழங்குகிறது. ஒரு பெண்ணுக்கு, இரண்டு குழந்தைகள் வரை, இந்த உதவித்தொகை வழங்கப்படும்.அரசு மருத்துவமனையின் புதிய மருத்துவ கட்டிட பிரிவில், இதற்கான அலுவலகம் காலை, 10 மணி முதல், மதியம், 12 மணி வரை இயங்குகிறது. இந்த நாட்களில், உதவித்தொகை, வங்கி காசோலை மூலமாக பெற்றோர் வசம் ஒப்படைக்கப்படும். சில நாட்களாக, உதவித்தொகையை பெற பச்சிளம் குழந்தையுடன் வரும் பெண்களை, நாளை வாருங்கள் என கூறி, அங்கு பணியாற்றும் ஊழியர் அனுப்பி வைக்கிறார்.இதனால், இடைப்பாடி, மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பெண்களுக்கு, பெறும் உதவித்தொகையை விட வந்து செல்வது கூடுதல் செலவாகிறது. மருத்துவமனை நிர்வாகமும், இவற்றை கண்டுகொள்வதில்லை.அதுமட்டுமின்றி, 700 ரூபாய்க்காக செல்ல வேண்டுமா என, அலட்சியம் காட்டும் பெற்றோரின் பெயர்களில் கையெழுத்து போட்டு, அந்த பணத்தை சுருட்டும் மோசடி சம்பவங்களும் நடந்து வருகிறது. நேற்று, உதவித்தொகை பெற வந்த பெண்கள், தங்களுடைய குழந்தைகளுடன் நீண்ட நேரம், துர்நாற்றத்தின் இடையே காத்திருந்தனர். வங்கி காசோலை கொண்டு வருவதாக கூறிச்சென்ற ஊழியர், இரண்டு மணி நேரமாகியும் வரவில்லை. இதனால், பெண்கள் பலர் அவதிக்குள்ளாகினர்.தாரமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறியதாவது:கடந்த, 21 நாட்களாக, 700 ரூபாய் உதவித்தொகையை வாங்க குழந்தையுடன் வந்து கொண்டிருக்கிறேன். நாளை தான் கிடைக்கும் என, திருப்பி அனுப்புகின்றனர். பஸ் செலவுக்கே, 500 ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது. இன்று (நேற்று) காலை, 10 மணிக்கு வந்தேன், இதுவரை அதற்கான அறிகுறி இல்லை. பல பெண்கள், தங்களுடைய குழந்தைகளுடன் வந்து காத்திருகின்றனர். இதனால், நோய் தொற்று ஏற்படுகிறது. குழந்தைகளை பாதுகாப்பதற்கான உதவித்தொகை, மருத்துவ செலவுக்கு பயன்படும் நிலை உள்ளது. முறையாக பணம் வழங்கப்படுவதில்லை. மருத்துவமனை நிர்வாகமும் கண்டுகொள்ள மறுக்கிறது.மருத்துவமனை டீன் வள்ளிநாயகம் கூறுகையில், ""ஆடிட்டிங் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் காலதாமதமாகலாம். மருத்துவமனையில் குழந்தை பெறும் அனைத்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை