புதுடில்லி: இலங்கை விவகாரத்தில் பார்லிமென்ட்டில் தீர்மானத்தை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. சென்னையில் நேற்று தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன்னைச் சந்தித்த காங்கிரஸ் அமைச்சர்களிடம், இலங்கையில் நடந்த படுகொலையை இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும். போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை தேவை என்ற இரு கோரிக்கைகளை பார்லிமென்ட்டில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து காங்கிரஸ் மேலிடத்திடம் விவாதிப்பதாக கூறிய நிலையில், திடீரென அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாநிதி அறிவித்தார். எனினும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தனது முடிவை மறுபரிசீலனை செய்யப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கருணாநிதியை சமாதானப்படுத்தும் விதமாக பார்லி.,யில் தீர்மானம் ஒன்றை கொண்டுவர முயற்சித்து வருகிறது. எனினும் இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்காத வகையில் இந்த தீர்மானம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானம் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றவும் காங்கிரஸ் முயன்று வருகிறது.