புதுடில்லி: ""இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, சுயேச்சையான, நம்பகத்தன்மை மிகுந்த, ஒரு விசாரணையை நடத்த வேண்டும்,'' என, கருத்து தெரிவித்துள்ள, காங்., தலைவர் சோனியா, ""ஐ.மு., கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை, தி.மு.க., விலக்கிக் கொண்டது குறித்து, எந்த கருத்தும் கூற விரும்பவில்லை,'' என்றும் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில், தி.மு.க., கொடுத்த நெருக்கடி, ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு, இத்தாலி கடற்படை வீரர்கள் விவகாரம், மத்திய அமைச்சர், பெனி பிரசாத் வர்மாவின் சர்மாவின் சர்ச்சை பேச்சு, உள்ளிட்ட பல விவகாரங்களால், காங்கிரசுக்கும், காங்., தலைமையிலான, மத்திய அரசுக்கும், கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, காங்., கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது. காங்., துணை தலைவராக, ராகுல் பதவியேற்ற பின் நடக்கும், முதல் எம்.பி.,க்கள் கூட்டம் என்பதாலும், இந்த கூட்டம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தில், காங்., தலைவர், சோனியா, விரிவான உரை நிகழ்த்தினார். அவரது பேச்சில், பல்வேறு விஷயங்களை பற்றிய கருத்துக்கள் இடம் பெற்றிருந்தாலும், இலங்கை தமிழர் விவகாரத்துக்கு, முக்கியத்துவம் அளித்து, அவர் பேசினார்.
அவர் பேசியதாவது: இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு, நியாயமான அரசியல் உரிமைகள், தொடர்ந்து மறுக்கப்படுவது, எனக்கு, வேதனையையும், அதிக கவலையையும் அளிக்கிறது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு, சம உரிமை மற்றும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே, காங்கிரசின் நிலைப்பாடு. முன்னாள் பிரதமர்கள், இந்திரா, ராஜிவ் ஆகியோரின் காலத்திலிருந்தே, இதை வலியுறுத்தி வருகிறோம். இந்த விஷயத்தில், காங்கிரசுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குறிப்பாக, இலங்கையில், 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகள், மிகவும் கவலையை அளிக்கின்றன.
மீனவர் விவகாரம்: இதன்காரணமாகவே, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, சுயேச்சையான, நம்பகத்தன்மை மிகுந்த, ஒரு விசாரணையை நடத்த வேண்டும் என, காங்கிரஸ் வலியுறுத்துகிறது. ஐ.மு., கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றதாக அறிவித்திருப்பது குறித்து, எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்திய மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், மிகவும் கவலைக்குரிய விஷயம். தினம் தோறும் நடக்கும், இந்த அவலத்துக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்.
தேர்தலை சந்திக்க: நம்மை, தரக் குறைவான வார்த்தைகளால், விமர்சனம் செய்வதோடு, பொய் குற்றச்சாட்டுகளையும் கூறி வரும், பா.ஜ., போன்ற எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் வகையில், தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஊழலை ஒழிப்பதற்காக, காங்., தொடர்ந்து போராடும். லோக்பால் மசோதாவை, விரைவில் நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யப்படும். காஷ்மீர் மற்றும் ஐதராபாத்தில், சமீபத்தில் நடந்த பயங்கரவாத சம்பவங்கள், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளன. இவ்வாறு, சோனியா பேசினார்.
இத்தாலிக்கு பதிலடி: காங்கிரஸ் தலைவர் சோனியா பேசுகையில், ""இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற, இத்தாலி கடற்படை வீரர்களை, விசாரணைக்காக இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என, இத்தாலி அரசு கூறியிருப்பதை ஏற்க முடியாது. இது, முறையற்ற செயல். எந்த ஒரு நாடும், இந்தியாவை குறைத்து மதிப்பிடுவதை அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில், இந்தியாவுக்கு, இத்தாலி அரசு துரோகம் செய்து விட்டது,'' என்றார்.
பெனி பிரசாத் "ஆப்சென்ட்': காங்., - எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான, பெனி பிரசாத் வர்மா, "சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளது' என, கூறியிருந்தார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெனி பிரசாத்தின் கருத்துக்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அதனால், நேற்று நடந்த, காங்., - எம்.பி.,க்கள் கூட்டத்தில், பெனி பிரசாத் வர்மா, பங்கேற்கவில்லை. இதுகுறித்து, பெனி பிரசாத் கூறியதாவது: என்னைப் பற்றி, சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர். என் வாழ் நாள் முழுவதும், காங்கிரஸ் கட்சியில் தான் தொடருவேன். அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய மாட்டேன். காங்., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பேன். இவ்வாறு, பெனி பிரசாத் வர்மா கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
என்ன கருத்து கூற முடியும். ராஜபக்ஷேவை போர் குற்றவாளி என கூறினால் அவரும் தயங்காமல் கையை காட்டுவார் இவரும் தான் என. இவர் உதவியால் தான் தன்னால் இதை சாதிக்க முடிந்ததது என. அடுத்து தி.மு.க ராஜா அவர்கள் 2g ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு பங்கு உள்ளது என கூற தயாராக உள்ளார். தி,மு.க. கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஒருவர் காலில் மற்றொருவர் கையிற்றை கட்டிக்கொண்டு காலை வாரிக்கொள்ள பார்கிறார்கள். தமிழ் ஈழ மக்களின் துயரக் குரல் இவர்களை சும்மா விடாது. பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
அம்மையாரே, கருத்து கூறவே வேண்டாம் 2014க்கு பிறகு, யாரும் தங்களிடம் கருத்தும் கேட்கப் போவதில்லை. விசாரணைதான் செய்யப்போகிறார்கள்
மற்றபடி, காங்கிரஸ் தி மு க இரு கட்சிகளுக்குமே சொல்ல வேண்டியதும் உண்டு. ஸ்ரீ லங்கா தமிழர் பிரச்சனை மட்டும்தானா? தென் தமிழ் நாட்டு மக்கள் மீனவ துயரத்தையும், பெரியாறு துயரத்தையும், தஞ்சை, திருச்சி, நாகை பகுதி மக்கள் காவிரி துயரத்தையும், முழு தமிழ் நாடும் மின்சார துயரத்தையும் (அதன் விளைவாக, கோவை மாவட்ட மக்கள் தொழில் இழப்பு சோகத்தையும்) நினைவில் கொள்ளத்தான் செய்வார்கள். 18/40 வைத்துக்கொண்டு, தி மு க என்ன செய்தது? கடந்த இரண்டு வருடங்களாக, டெல்லி, அரசு தமிழ அரசுக்கு செய்ய வேண்டிய நேர்மையான உதவியையும் செய்து விடக்கூடாது என்பதில் உறுதி காட்டியது. இருவருக்குமே காலம் இடத்தைக்காட்டும் - அது திஹார் என்றே தோன்றுகிறது அடுத்த 'அணி' அங்கேதான் நண்பர்களே

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.