இலங்கை பிரச்னைக்காக கோஷம் : தமிழக எம்.பி.,க்கள் ரகளையால் லோக்சபா ஒத்திவைப்பு| Dinamalar

இலங்கை பிரச்னைக்காக கோஷம் : தமிழக எம்.பி.,க்கள் ரகளையால் லோக்சபா ஒத்திவைப்பு

Added : மார் 21, 2013
Advertisement

இலங்கை பிரச்னையை நேற்று, லோக்சபாவில் எழுப்பி, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அடுத்தடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டு, அலுவல்கள் பாதிக்கப்பட்டன.
லோக்சபா நேற்று காலை கூடியதும், மறைந்த உறுப் பினர்கள் சிலருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, கேள்வி நேரம் துவங்கியது.

கடும் அமளி : அப்போது, எழுந்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், இலங்கை பிரச்னையை எழுப்பி, கடும் அமளியில் ஈடுபட்டனர். பின், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.
அவர்களுடன், தென்காசி லோக்சபா தொகுதி, இந்திய கம்யூ., - எம்.பி., லிங்கம், ஈரோடு லோக்சபா தொகுதி, ம.தி.மு.க., - எம்.பி., கணேசமூர்த்தி ஆகியோரும் சேர்ந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்தின் மீது, மத்திய அரசு என்ன முடிவெடுத்துள்ளது எனக்கேட்டு, கோஷமிட்டனர். "இலங்கை விவகாரத்தில், தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது' என்றும் குற்றம் சாட்டினர். இலங்கை பிரச்னைக்காக, தமிழக எம்.பி.,க்கள் இப்படி குரல் கொடுத்த நேரத்தில், மற்றொரு புறம், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்களும் அமளியில் ஈடுபட்டனர். "மேற்கு வங்க மாநிலம் புறக்கணிக்கப்படுகிறது; நிதி அமைச்சர் சிதம்பரம், மிகுந்த தலைக்கனத்துடன் செயல்படுகிறார்' என, அவர்கள் கோஷமிட்டனர்.
சிதம்பரத்தை கண்டித்து, திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் எழுப்பிய அமளியால், சபையில், பெரிய கூச்சல், குழப்பம் உருவானது. இதனால், கேள்வி நேரம் ரத்தாகி, ஒரு மணி நேரத்திற்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.

நோட்டீஸ் : நண்பகல், 12:00 மணிக்கு, மீண்டும் சபை கூடிய போது, அ.தி.மு.க., - எம்.பி., தம்பித் துரை, ""நான் ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு, நோட்டீஸ் அளித்துள்ளேன். கேள்வி நேரத்தை ரத்து செய்யக்கோரி, நோட்டீஸ் வழங்கியுள்ளேன். அதற்கு, எனக்கு பதில் சொல்லப் படவில்லை,'' என்றார்.
அப்போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த சாக்கோ, ""நீங்கள், இப்போது பேசுங்கள்,'' என்றார். தம்பித்துரையோ, ""நான் பேசமாட்டேன். அமைச்சர் சல்மான் குர்ஷித், எங்கிருக்கிறார்; சபைக்கு அவர் வராமல் பேசுவதில் பலனில்லை. தமிழர்கள் பிரச்னையை, அவர் துச்சமாக மதிக்கிறார்,'' என்றார். சல்மான் குர்ஷித் இல்லாததை, தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலுவும் குறிப்பிட்டு, குரல் கொடுத்தார்.
தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இப்படி ஒருங்கிணைந்து குரல் கொடுத்ததால், சபையில் பரபரப்பு காணப்பட்டது. "தமிழர்களை ஏமாற்றி விட்டது மத்திய அரசு; இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகிறது; தமிழர்களுக்கு துரோகம் செய் கிறது' என, இரு கட்சியினரும், தொடர்ந்து, 15 நிமிடங்களுக்கு மேலாக கோஷமிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உட்பட, தி.மு.க., - எம்.பி.,க்கள் பலர், திடீரென சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.

"மாஜி'க்களும், "வாய்ஸ்' : அதேநேரத்தில், மத்திய அமைச்சரவையில் இருந்து, ராஜினாமா செய்த அமைச்சர்களான பழனிமாணிக்கம், காந்தி செல்வன் ஆகியோர், தங்கள் இருக்கையில் இருந்தபடியே குரல் கொடுத்தனர். இந்த அமளியின் போது, நேற்று முன் தினம் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய, மு.க.அழகிரி மற்றும் நெப்போலியன் சபையில் இல்லை. அமளி நீடிக்கவே சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. மதியம், 2:00 மணிக்கு, மீண்டும் சபை கூடிய போதும், ரகளை தொடர்ந்ததால்,
நாள் முழுவதற்கும், சபை ஒத்திவைக்கப்பட்டது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை