புதுச்சேரி : புதுச்சேரி அருகே, மூதாட்டி கொலை வழக்கில், ஜாமினில் வெளிவந்த வளர்ப்பு மகன், பட்டப் பகலில், ஓட ஓட விரட்டிகொலை செய்யப்பட்டார். புதுச்சேரியை அடுத்த, திருவள்ளுவர் நகர் கங்கையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த, ஆடன் செபஸ்டியன் மகன் செந்தில்; 32. பெயிண்டர் வேலை செய்து வந்தார்.நேற்று காலை, 9:00 மணிக்கு, கிருஷ்ணா நகர் வழியாக மடுவுபேட்டைக்கு, பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கத்தி, இரும்பு பைப்புகளுடன், பின் தொடர்ந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரது பைக்கை வழிமறித்தது. நிலை தடுமாறி விழுந்த செந்தில், சுதாரித்து ஓட முயன்றார்.
சுற்றி வளைத்த அக்கும்பல், அவரை வெட்டிச் சாய்ந்தது. ரத்த வெள்ளத்தில், உயிருக்குப் போராடிய செந்தில் மீது, கருங்கற்களைத் தூக்கிப் போட்டது. செந்தில் இறந்ததை உறுதி செய்து கொண்ட அக்கும்பல் சாவகாசமாக, அங்கிருந்த ஆட்டோவில் தப்பிச் சென்றது.
பட்டப் பகலில் நடந்த, இச்சம்பவத்தால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அவ்வழியாக வந்தவர்கள், தங்கள் வாகனங்களைப் போட்டு விட்டு, நாலாப்புறமும் சிதறி ஓடினர். அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
தகவறிந்த, வடக்கு போலீஸ் எஸ்.பி., ராமராஜு, இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. 5-வது குறுக்கு தெரு வரை ஓடிய, மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
சம்பவ இடத்தில் சிதறி கிடந்த இரும்பு பைப் மற்றும் சாக்கடையில் கிடந்த வீச்சறிவாளை,போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
படுகொலை செய்யப்பட்ட செந்தில், கடந்தாண்டு, பிப். 8ம்தேதி, அவரது நண்பர்களான ரங்கராஜன், விண்ணரசி ஆகியோருடன் சேர்ந்து, வெங்கட்டா நகரில் உள்ள, அவரது வளர்ப்புத் தாயான அமுதாவை; 68, கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்தார்.இவ்வழக்கில், மூன்று பேருக்கும், ஜாமின் கிடைத்தது. சமீபகாலமாக, ரங்கராஜன்- செந்தில் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, செந்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக உள்ள ரங்கராஜன், விண்ணரசியைப் பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.