புதுடில்லி: மும்பையில், 20 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட, தொடர் வெடிகுண்டு தாக்குதலில், மரண தண்டனை விதிக்கப்பட்ட, யாகூப் மேமனின் தண்டனையை நேற்று உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், "தடா' கோர்ட்டால், மரண தண்டனை விதிக்கப்பட்ட, மேலும், 10 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. அது போல், ஆயுதம் வைத்திருந்த வழக்கில், நடிகர், சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்டிருந்த, ஆறு ஆண்டு சிறை தண்டனையை, ஓராண்டு குறைத்த கோர்ட், இன்னும், மூன்றாண்டுகளுக்கு மேல் அவர், சிறை தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் எனவும், நான்கு வாரங்களுக்குள் சிறையில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
257 பேர் பலி: நாட்டின் வர்த்தக தலைநகர், மும்பையில், 1993 மார்ச், 12ம் தேதி, 13 இடங்களில், பயங்கர வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 257 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்; 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, அவர்களில் பெரும்பாலானோர், இன்னமும் நடைபிணமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட, தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது குடும்பத்தினர், பாகிஸ்தானுக்கு அப்போதே தப்பிச் சென்று, அந்நாட்டு அரசின் பாதுகாப்பில், சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த, "தடா' கோர்ட், 2006ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், பலருக்கு மரண தண்டனையும், சிலருக்கு ஆயுள் தண்டனையும், சிலர் விடுவிக்கவும் செய்யப்பட்டனர். குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடைய, "ஏகே-56' ரக துப்பாக்கி வைத்திருந்த, நடிகர், சஞ்சய் தத்திற்கு, ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. "தடா' கோர்ட்டில், தண்டனை பெற்றவர்கள், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான விசாரணை, 2011, நவம்பரில் துவங்கியது. 10 மாதங்கள் தொடர்ந்து நடந்த விசாரணை, 2012 ஆகஸ்ட்டில் நிறைவடைந்தது; தீர்ப்பை, நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. நீதிபதிகள், பி.சதாசிவம் மற்றும் பி.எஸ்.சவுகான் ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது, பாகிஸ்தானில் இருக்கும், தாவூத் இப்ராகிம் மற்றும் அவனின் கூட்டாளிகள். மும்பை தாக்குதலுக்கு முன், அவனும், அவனின் கூட்டாளிகளும், பாகிஸ்தான் சென்று, வெடிகுண்டுகள் தயாரிப்பது எப்படி, பயங்கர ஆயுதங்களை கையாளுவது எப்படி என, பயிற்சி பெற்றனர். குண்டு வெடிப்புகளுக்கு முக்கிய காரணம், பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தான். அவற்றை தடுக்க, மும்பை போலீஸ், கடலோர காவல் படை, சுங்கத்துறை தவறிவிட்டன.
"வில், அம்பு': யாகூப் மேமனும், தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராகிமும் தான், வெடிகுண்டு தாக்குதலில், வில் போல செயல்பட்டனர்; அம்புகளாக விளங்கியவர்கள் பிறர். குண்டு வெடிப்புகளுக்கு முக்கிய காரணமான, யாகூப் மேமனுக்கு, தடா கோர்ட் விதித்திருந்த மரண தண்டனையை, நாங்கள் உறுதி செய்கிறோம். மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, பிற, 10 பேரின் தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. ஏனெனில், அவர்கள், 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; அவர்களின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருப்பதால், கருணையுடன் தண்டனை குறைக்கப்படுகிறது. எனினும், அவர்கள், தங்களின் எஞ்சிய வாழ்நாளை, சிறையிலேயே தான் கழிக்க வேண்டும். அஷராபுர் ரகுமான் அஜிமுல்லா என்ற குற்றவாளிக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை, 10 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்படுகிறது. இம்தியாஸ் யுனஸ்மியா காவ்டே என்பவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அவன் நிறைவு செய்து விட்டான்.
சஞ்சய் தத்: இந்த வழக்குடன் தொடர்புடைய, ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில், ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனை, ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. அவர் செய்த குற்றம் மற்றும் அதற்கான சூழ்நிலை, மிகவும் மோசமானது என்பதால், அவரை வெளியில் விட முடியாது. சஞ்சய் தத் உட்பட, ஜாமினில் வெளியே உள்ள அனைவரும், நான்கு வாரங்களுக்குள், கோர்ட்டில் சரணடைய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
"குத்தா' சலீமுக்கும் தண்டனை குறைப்பு: மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலில், நேற்று, ஆயுள் தண்டனை பெற்ற, முகமது சலீம் மீரா ஷேக், தன் பெயருடன் இணைந்த, "குத்தா' என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என, "தடா' கோர்ட்டில் முறையிட்டவன். இந்தி மொழியில், "குத்தா' என்றால், "நாய்' என அர்த்தம். வெடிகுண்டுகளை கொண்டு சென்றதாக, குற்றங்கள் உறுதிபடுத்தப்பட்டதன் அடிப்படையில், "தடா' கோர்ட்டில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவன், "குத்தா சலீம்'. எதிரிகளை, நாய் போல் கடித்து குதறுபவன் என்பதற்காக, அவன் பெயருடன், "குத்தா' என்ற வார்த்தையை சேர்த்து, சக ரவுடிகள் அழைத்து வந்தனர். இந்த வழக்கின் விசாரணை முன்னர், தடா கோர்ட்டில் நடைபெற்ற போது, "தன் பெயருடன் இணைந்துள்ள, "குத்தா' என்ற வார்த்தையை நீக்குமாறு, முறையிட்டான். அப்போது, "நான் நாய் போலவா காட்சியளிக்கிறேன்...' என, நீதிபதி, பி.டி.கோடேயிடம் கேட்டான். அதையடுத்து, அரசு தரப்பிலும், ஆதாரங்களிலும், அவன் பெயருடன் இருந்த, "குத்தா' நீக்கப்பட்டு, சலீம் என மாற்றப்பட்டது. அவனுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நேற்று, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
வழக்கறிஞர் நிகாம் மகிழ்ச்சி: "தடா' கோர்ட் வழங்கிய மரண தண்டனையை நேற்று சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ள, யாகூப் மேமன், மும்பையில், சார்ட்டர்டு அக்கவுன்டன்டாக பணியாற்றியவர். குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்ட, தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான, டைகர் மேமனின் சகோதரர். டைகர் மேமன், இன்னும் தலைமறைவாகவே உள்ளான். யாகூப் மேமன் குறித்து நீதிபதிகள் நேற்று கூறும் போது, "மும்பை குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவன் யாகூப் என்பதால், அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்படவில்லை. அவனுக்கு கட்டாயம், மரண தண்டனை கிடைத்தே தீர வேண்டும்' என்றனர். இவனுக்கு நேற்று உறுதி செய்யப்பட்ட, மரண தண்டனை குறித்து, அரசு வழக்கறிஞர், உஜ்வல் நிகாம் கூறியுள்ளதாவது: யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. அவனுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது, பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும். பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும், டைகர் மேமன், தாவூத் இப்ராகிமை வெளியேற்ற வேண்டும் என்ற நெருக்கடி பாகிஸ்தானுக்கு கிடைக்கும். இதை அமெரிக்காவும் செய்ய வேண்டும். இவ்வாறு உஜ்வல் நிகாம் கூறினார்.
சஞ்சய் தத் தப்பிக்க முடியாது: ""சிறை தண்டனையிலிருந்து, சஞ்சய் தத் தப்பிக்க வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது,'' என, பிரபல கிரிமினல் வழக்கறிஞர், மஜித் மேமன் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இதை விட பெரிய, "பெஞ்ச்'சை அவர் நாடலாம். அல்லது, சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். அதைத் தவிர வேறு வழியில்லை; எப்படியும், இன்னும் சில நாட்களில் அவர் உள்ளே செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள அனைவரும், 20 - 30 வயதினர். மறைந்திருந்த சக்திகளின் கைப்பாவையாக செயல்பட்ட அவர்கள், ஆயுள் முழுக்க சிறையிலேயே கழிக்க வேண்டும் என எண்ணும் போது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பாலிவுட் நட்சத்திரங்கள் கவலை: சஞ்சய் தத்திற்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து, பாலிவுட் நட்சத்திரங்கள் நேற்று தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.
இயக்குனர் கரண் ஜோகர்: என் இதயம் நொறுங்கிவிட்டது.
எனக்கு தெரிந்து, சஞ்சய் தத் மிகவும் மென்மையானவர்; அவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை தேவையில்லை.
இயக்குனர் சுபாஷ் கபூர்: எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. சஞ்சய் தத்தை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்யும் என எதிர்பார்த்தேன். என் அதிர்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை.
நடிகர், ஹிருத்திக் ரோஷன்: சட்டம் உயர்ந்தது தான். எனினும், சஞ்சய் தத்திற்கு இந்த தண்டனை தேவையில்லை. அவர் மிகவும் அன்பானவர்.
நடிகை பிபாஷா பாசு: அதிர்ச்சி அடைந்து விட்டேன். அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் மனபலம் கிடைக்க வேண்டுகிறேன்.
1993 முதல் 2013 வரை...
1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில், 20 ஆண்டுக்குப் பின், நேற்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. நாட்டில் மும்பையை போல, எந்நகரமும்,பயங்கவாதிகளின் தாக்குதலுக்கு இந்தளவுக்கு இலக்கானதில்லை.
1993 மார்ச், 12 மதியம், 1:30 மணிக்கு மும்பையில் குண்டு வெடித்தது. ஓட்டல்கள், அலுவலகங்கள், வங்கிகள் என, நகரின், 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இத்தாக்குதலில், 257 பேர் பலியாயினர்; 713 பேர் காயமடைந்தனர்.
ஏப்.,19: இந்த வழக்கில், ஏ.கே., ரக துப்பாக்கி வைத்திருந்ததாக, பாலிவுட் நடிகர்
சஞ்சய் தத் (குற்றவாளி எண்: 117) கைது செய்யப்பட்டார்.
நவ., 4: மொத்தம், 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல். சஞ்சய் தத் உட்பட, 189 பேர் குற்றவாளிகளாக சேர்ப்பு.
நவ., 19: வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம்.
1995 ஏப்.,10: குற்றவாளிகள், 26 பேர், தடா கோர்ட்டால் விடுவிப்பு. மீதி உள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஏற்பு.
அக்.,14: சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின்.
2000 அக்.,: சாட்சிகள், 2,000 பேரின் விசாரணை முடிவு.
2001 மார்ச் 9 - ஜூலை 18: குற்றவாளிகள் ஆஜராகி விளக்கம்.
ஆக., 9: வழக்கு விவாதம் தொடக்கம்.
அக்., 18: விவாதம் நிறைவு.
2003 பிப்., 20: தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளில் ஒருவரான இஜாஜ் பதான் கோர்ட்டில் ஆஜர்.
2003 செப்., : விசாரணை முடிந்தது. தீர்ப்பு ஒத்திவைப்பு.
2006 ஜூன் 13: குற்றவாளி அபு சலீமிடம் தனியாக விசாரணை.
ஆக., 10: செப்., 12ல் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி பி.டி.கோட் அறிவிப்பு.
செப்.,12: மேமன் குடும்பத்தை சேர்ந்த, 4 பேர், சதிகாரர்களாக அறிவிப்பு. யாகூப் மேமன் உள்ளிட்ட, 12 பேருக்கு மரண தண்டனை. 20 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு. சஞ்சய் தத்துக்கு, ஆறு ஆண்டு சிறை.
2011 நவ., 1: தண்டனை பெற்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு.
2013 மார்ச், 21: மரண தண்டனை விதிக்கப்பட்ட, 12 பேரில், யாகூப் மேமன், அவரது சகோதரர் டைகர் மேமன் ஆகியோரின் மரண தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. மீதி, 10 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைப்பு. ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட, 20 பேரில், 16 பேரின் தண்டனையை சுப்ரீம் உறுதி செய்தது. சஞ்சய் தத்தின் தண்டனை ஆறில் இருந்து, ஐந்தாண்டுகளாக குறைப்பு.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
முதலில் ராஜீவ் கொலையாளிகள் மற்றும் வீரப்பன் கூட்டாளிகள் ஆகியவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுங்கள். பின்பு இவனுக்கும் தூக்கு தண்டனை கொடுங்கள். இல்லாவிட்டால் மீண்டும் தீவிரவாதிகள் கோவம் கொண்டு ஹைதராபாத்தில் பாம்ப வைத்தது போல மீண்டும் வைக்க கூடும். அப்போது தான எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் அமைதி ஆவார்கள்.
எல்லா கொடும் செயல்களையும் செய்துவிட்டு பாகிஸ்தானில் தஞ்சம் புகரலாம். நமது இந்தியாவில் மகா பாதகம் செய்துவிட்டு,பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து, துபாயில் சம்பாதித்து, மீண்டும் இந்தியாவுக்கு துரோகம் செய்யும் மகாபாதகர்கள் துபாயிலும், பாகிஸ்தானிலும் இருந்து சேய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து,எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கின்றது. உதாரணமாக, இலங்கை தீர்மானத்தில் முதல் எதிர்ப்பை வெளிப்படுத்தியது பாகிஸ்தான் தான். இந்தியா செய்ய வேண்டியது என்னவென்றால்,பாகிஸ்தான் உடன் ஆன,எல்லா உறவுகளையும் முதலில் நிறுத்த வேண்டும். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் விசா உரிமம் இல்லாமல் இருக்கும் பாகிஸ்தானியர்கள் தான் எல்லா நாச வேலைகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.இவர்களை எல்லாம் முதலில் வெளியேற்ற மத்திய,மாநில அரசுகள் முன் வரவேண்டும். இந்த வேலையை முதலில் செய்தால்,எல்லா நாச காரியங்களை
ஓரளவு கட்டுபடுத்தலாம்.செய்தால் இந்தியாவுக்கு நல்லது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.