ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு, 50 சதவீத மானியம் வழங்கும் அரசின் திட்டத்தை மீனவர்கள் வரவேற்றுள்ளனர். அரசின் இந்த முயற்சியால், கடல் உயிரிகள் உற்பத்தி குறையாது என்பதோடு, எல்லை பிரச்னை ஏற்படும் தாக்குதல் சம்பவங்களும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும், 14 ஆயிரத்துக்கும் மேலான விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன. இவற்றில், 70 சதவீத படகுகள், ஆழம் குறைவான கடலோரப் பகுதிகளில், வலை வீசி, இழுவை முறையில் மீன்களைப் பிடித்து வருகின்றன. 15 சதவீத படகுகள், ஆழ்கடலில் வலை வீசி மீன்பிடிக்கும் பணியில் உள்ளன. மீதமுள்ள, 15 சதவீத படகுகள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று, டியூனா முறையில் (நீண்ட கயிறில், தூண்டிகள் கட்டி) மீன்பிடித்து வருகின்றன. இழுவை முறையில் மீன்பிடிக்கும்போது, ஆழம் குறைவான பகுதியில் தரை பகுதி வாழும் மீன் குஞ்சுகளும் பிடிக்கப்படுகின்றன. இதனால், மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் உற்பத்தி குறைந்து வருகிறது. இது தவிர, வலைகள் தாறுமாறாக இழுக்கப்படுவதால், மீன் உறைவிடங்கள், பவளப்பாறைகளும் சேதமடைகின்றன. இதைக் கருத்தில் கொண்டே, தமிழக அரசு, ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்துகிறது.
ஆழ்கடல் மீன்பிடித்தல்: கரையோரப்பகுதியில்
மீன்பிடிக்காமல், தண்ணீர் மட்டத்திற்கும், கடலின் தரைக்கும் இடைப்பட்ட பகுதியில், நீண்ட தூரம் நைலான் கயிறு கட்டி, தூண்டில்கள் மூலம் பிடிக்கும் நடைமுறை ஆழ்கடல் மீன்பிடி தொழில் எனப்படுகிறது. இதில், வலைகள் இல்லை, சிறிய மீன்கள் பிடிபடாது என்பதால், இன விருத்தி பாதிக்காது என்பதோடு, பவழப்பாறைகளுக்கும் சேதம் ஏற்படாது. ஆழ்கடல் மீன்பிடிப்பில், ஐந்து கிலோ முதல் 25 கிலோ வரையிலான, கேரை,
வரிச்சூறை, மயில் கோலா, சுறா போன்ற மீன்கள் கிடைக்கின்றன. இவைதான்,
வெளிநாடுக்கு அதிக விலையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதை கருத்தில்
கொண்டே, ஆழ்கடல் மீன்பிடி தொழிலை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதன்
அடிப்படையில் தான், டியூனா மீன்பிடி படகுககள் வாங்க, 25 சதவீதமாக இருந்த
மானியத்தை, 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதை மீனவர்கள் வரவேற்றுள்ளனர்.
வருவாய் அதிகம்: இது குறித்து, மீனவர்கள் மற்றும் ஏற்றுமதி வர்த்தகர்கள் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரியில் முற்றிலும், ஆழ்கடல் மீன்பிடி தொழில் (டியூனா படகுகள்) செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் பெரிய அளவில் இல்லை. இழுவை மீன்பிடி தொழிலின்போது, விசைப்படகு இன்ஜின், 24 மணி நேரமும் இயங்க வேண்டும்.
ஆழ்கடல் மீன்பிடி தொழிலில், தூண்டில் கயிறைக் கட்டிவிட்டு, இன்ஜினை நிறுத்திவிடலாம். மீண்டும் கரைக்கு திரும்பும்போது இயக்கினால் போதும்
Advertisement
என்பதால், டீசல் செலவு குறையும். ஏற்றுமதி தரம் வாய்ந்ததாக மீன்கள் கிடைப்பதால் வருவாயும் அதிகரிக்கும். கரையோரப் பகுதிகளில் மீன்பிடிக்காமல் ஆழ்கடலுக்கு படகுகள் செல்லும் என்பதால், எல்லை பிரச்னையே
வராது. இலங்கை ராணுவத்தின் பிடியில் சிக்கித் திணற வேண்டிய நிலையும் வராது.
அரசின் இந்த மானிய அறிவிப்பு, மீன்பிடி தொழிலில் உள்ள பெரும்பாலானோரை, ஆழ்கடல் மீன்பிடி முறைக்கு மாற வைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மானிய தேவை ஏன்? சாதாரண விசைப்படகு, 35 முதல் 50 அடி நீளம் கொண்டது. தயாரிக்க, 40 லட்சம் ரூபாய்
வரை செலவாகும். 15 முதல் 20 டன் மீன்களை பாதுகாக்கும் வசதி கொண்டது. ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில், தேவைக்கேற்ப, 70 அடி நீளம் வரை அமையும். இந்த வகை படகு தயாரிக்க, 65 லட்ச ரூபாய் வரை செலவாகும் என, தெரிகிறது.
மீன் பதப்படுத்தும் பூங்கா
* கடலூர் மாவட்டம், முடசலோடையில், 7.78 கோடி ரூபாயில், மீன் இறக்கு தளம் அமைக்கப்படும்
* ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுத்துறை, தனியார் பங்களிப்புடன், இரண்டு மீன் பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும்
* நாகூரிலும், பரங்கிப்பேட்டையிலும் தலா, 10 கோடி ரூபாய் செலவில், ஆழமற்ற முகத்துவாரங்களில், பாதுகாப்பாக படகுகள் சென்று வர, அவை நிலைப்படுத்தப்படும்.
- நமது நிருபர் -