ப.வேலூர்: கோழிப்பண்ணையின் இரும்பு கேட்டை கடத்த முற்பட்ட இரு வாலிபர்களை, பரமத்தி போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு வாலிபரை, தேடி வருகின்றனர். பரமத்தி அருகே கோனூரைச் சேர்ந்தவர் கைலாசம். அவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை, குட்டலாம்பாறையில் உள்ளது. தற்போது, அந்த பண்ணையில், "செட்' மட்டுமே உள்ளது. நேற்று நண்பகல், 12 மணியளவில், மினிடோர் ஆட்டோவில் வந்த மூவர், பண்ணையின் முன்புறம் இருந்த, ஆளுயர இரும்பு கேட்டை கழற்றி, ஆட்டோவில் ஏற்றினர்.
அதைக் கண்ட பண்ணை ஊழியர் ஒருவர், கேட் கழற்றிச் செல்வதற்கான காரணம் குறித்து கேட்டார். முறையான பதில் அளிக்காத மூவரும், ஆட்டோவை எடுத்துக்கொண்டு, அங்கிருந்த தப்ப முயன்றனர். மூவரையும், அங்கிருந்த சிலர் சுற்றிவளைத்து பிடிக்க முயற்சித்தனர். அதில், ஒருவர் தப்பி தலைமறைவானார். பிடிபட்ட இருவரும், பரமத்தி போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோனூரைச் சேர்ந்த செல்வக்குமார், 25, ராஜசேகர், 22, எனத் தெரியவந்தது. மூவரும் கேட்டை கழற்றி விற்க முயற்சித்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார், தலைமறைவான ராசிகுமார் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிடோர் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.