மதுரையில் "தினமலர்' வழிகாட்டி துவங்கியது : முதல் நாளில் குவிந்த மாணவர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் "தினமலர்' வழிகாட்டி துவங்கியது : முதல் நாளில் குவிந்த மாணவர்கள்

Added : மார் 25, 2013 | கருத்துகள் (2)
Advertisement

மதுரை: மாணவர்கள் பிளஸ் 2க்கு பின், என்ன படிப்புக்களை தேர்வு செய்யலாம் என்பது குறித்து, "தினமலர்' மற்றும், சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி, ஆராய்ச்சி நிறுவன பல்கலை இணைந்து, மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நடத்தும், "வழிகாட்டி' நிகழ்ச்சி, நேற்று துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியை, பல்கலை தலைவர், ஏ.சி.எஸ்.அருண்குமார், குத்து விளக்கேற்றி துவக்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் கண்காட்சி அரங்கை, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திறந்து வைத்தார். முதல் நாளிலேயே, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதியது.

நிகழ்ச்சியில் கருத்தரங்கை துவக்கி வைத்து, பல்கலை திட்ட இயக்குனர் வாசுதேவன் பேசியதாவது: பள்ளி படிப்பை முடித்த நீங்கள், எதிர்காலம் கருதி வேலை வாய்ப்புக்களை தரும் படிப்புக்களை தேர்வு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு, உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். ஒரு திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுவதற்கான செயலாக்கத்தை நோக்கி பயணிக்க வேண்டும். தடைகளை தகர்க்கலாம் அவ்வாறு செல்லும்போது வரும் தடைகள், தகர்த்து வெற்றி பெறுவது குறித்தும், ஆய்வு செய்ய வேண்டும். பிளஸ் 2வில் நீங்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்வது வேலைக்கு தகுந்த படிப்பாக இருக்க வேண்டும். பட்டப்படிப்புகள் படித்து வெளியேறும், 35 சதவீத மாணவர்களே, சிறப்பான வேலைக்கு செல்கின்றனர். படிக்கும்போதே, வேலைக்கான தகுதியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

"சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி' என, தமிழக கடலோர காவற்படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு பேசியது: ஒவ்வொரு மாணவருக்கும், பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள், திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. நல்ல மதிப்பெண் பெற்றால், நல்ல கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்து, அதிக சம்பளத்தில், உடனடியாக வேலை கிடைக்கும். சாதிக்க ஆசைப்படுங்கள். அந்த ஆசை மனதில் இருந்தால் தான் விரைவில் அடைய முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பதவிகள், சமுதாயத்தில் நல்ல மரியாதை உள்ளவை. திட்டமிட்டு, ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் படித்தால், நிச்சயம், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, உயர் பதவிகளை அடைய முடியும். இதனால், சிறு வயதில் உயர்ந்த பதவி, சமுதாயத்தில் அங்கீகாரம், தலைமைப் பண்பு, பொறுப்புக்கள் கிடைக்கும். இன்றைக்கு பொறியியல் படித்தவர்கள் அதிகம் பேர், இப்பதவிகளை வெல்கின்றனர்.

விடா முயற்சி செய்யுங்கள் : படித்தால் மகிழ்ச்சி தரக் கூடிய பாடங்களை தேர்வு செய்யுங்கள். மெயின் தேர்வு வரை, மொழிப் பாடங்களில் தேர்வு எழுதலாம். வினாக்கள் அமைப்பை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நேர்காணல் உட்பட, மொத்தம், 2,300க்கு, 1,300 மதிப்பெண் பெற்றால், நிச்சயம், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று விடலாம். எடுக்கும் மதிப்பெண்ணிற்கு ஏற்ப, 22 உயர் பதவிகளை, அடுத்தடுத்து தேர்வு செய்யலாம். மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச்சு மற்றும் எழுத்து திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு விடாமுயற்சி மற்றும் பயிற்சியும் அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.

உடனடி வேலைக்கு கடல்சார் படிப்பு : வழிகாட்டி கருத்தரங்கில் தகவல்

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கடல்சார் அறிவியல் மற்றும் கடல் ஆய்வு கல்வி குறித்து, கடல்சார் துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுனர் நரசய்யா பேசியது: பொருளாதார சீர்குலைவு சீரடைந்த பின், தற்போது கடல் மற்றும் கடல் ஆய்வு படிப்புக்களுக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது. வணிகத்தில் 95 சதவீதம் கடல் வழிதான் நடக்கிறது. கடல்சார் மற்றும் நாட்டிக்கல் சயின்ஸூக்கான அரசு பயிற்சி மையங்கள் மும்பை, கோல்கத்தா, சென்னையிலும், பிற பகுதிகளில் தனியார் கல்லூரிகளிலும் இப்படிப்புகள் உள்ளன. பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்த மாணவர்கள் இத்துறையை தேர்வு செய்யலாம். கப்பல் பொறியாளர், மாலுமி, பணியாளர்கள், உலக அளவில் அதிக எண்ணிக்கையில் தேவையாக உள்ளனர். அதற்கான சம்பளமும் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் கப்பல் போக்குவரத்து வளர்ச்சி 7 முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இந்திய மாலுமிகளை உலகில் எந்த நாடுகளும் பணியில் சேர்த்துக்கொள்ளும் நிலை உள்ளது. 52 ஆயிரம் இந்தியர்கள், வெளிநாட்டு கப்பல்களில் வேலை செய்கின்றனர். வருங்காலத்தில் மாலுமிகளின் தேவை அதிகரிக்கும். உலகில் கப்பல்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள முதல் 20 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது கப்பல் பயிற்சி தளம் சிறப்பாக உள்ளது. அரசு பயிற்சி மையங்களில் இப்பிரிவு பாடங்களில் சேரும் பெண்களுக்கு, கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை உள்ளது. கப்பலில் பணியாற்றியவர்கள் ஓய்வு பெற்று திரும்பும்போது, தரைசார்ந்த வேலைகளும் அவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றன. ஒரு நாட்டின் வணிகம் ஒரு சதவீதம் அதிகரிக்க கப்பல் போக்குவரத்தில் 7 சதவீதம் அதிகரிக்க வேண்டும். கடல்சார் துறையில் தற்போதுள்ள வேலை வாய்ப்புக்கள், 2015ம் ஆண்டில் மூன்று மடங்கு உயரும் என, கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.

வாழ்வில் வெற்றியாளராக இருப்பது எப்படி என்ற தலைப்பில் தன்னம்பிக்கை பேச்சாளரும், நடிகருமான அஜய் ரத்னம் பேசியதாவது:
வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் முயற்சி அவசியம். உங்கள் கையெழுத்து எப்போது ஆட்டோகிராபாக மாறுகிறதோ அப்போதுதான் நீங்கள் ஒரு வெற்றியாளர். நம்பிக்கை என்பதும் அவசியம். நம்பிக்கை இருந்தால் தான் வெற்றி கிட்டும். படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்வர முடியும். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள துறையை தேர்வு செய்ய வேண்டும். ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். முயற்சி எப்போதும் தோற்பதில்லை. சாதிக்க வேண்டும் என்ற வெறியை ஒவ்வொரு மாணவரும் வளர்த்துக்கொண்டால், எளிதில் வெற்றியாளனாக முடியும். நாம் என்னவாக வேண்டுமோ அதை அடைய, நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேரம் பயிற்சி செய்யவேண்டும், என்றார்.

அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் படிப்புகள் எதிர்காலம் குறித்து சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி அனிமேஷன் துறை தலைவர் தினேஷ்குமார்:
கற்பனை திறன் உள்ள மாணவர்கள் இத்துறையை தேர்வு செய்தால் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. 2டி அனிமேஷன் துறையில் ஓவியம் வரைய தெரிந்தால் கலக்கலாம். தற்போது குழந்தைகளை அதிகம் கவர்ந்துள்ள "சோட்டா பீம்' 40 நிமிடங்களில் டிசைன் செய்யப்பட்டது. அந்த நபர் ரூ.3 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார். எம்.என்.சி., கம்பெனிகளில் கிராபிக் டிசைனிங் பிரிவில் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 5095 வெப் டிசைன் கம்பெனிகள் உள்ளன. அதேபோல், சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பிலும் சவுன்ட், எடிட்டிங், விஷ்வல் எபக்ட் போன்றவற்றில், அனிமேஷன் துறையின் பங்கு தவிர்க்க முடியாததாகி உள்ளது. கடந்தாண்டில் பொறியியல் துறையை விட அனிமேஷன் துறையில்தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் படிக்க விரும்புவோர் பல்கலை அங்கீகரிக்கப்பட்ட முழுநேர கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள், என்றார்.
இந்நிகழ்ச்சியை, ராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி, கற்பகம் கல்வி நிறுவனங்கள், நேரு குழும கல்வி நிறுவனங்கள், சி.ஆர்.பொறியியல் கல்லூரி, எஸ்.என்.ஆர். சன்ஸ் டிரஸ்ட், அமிர்தம் பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர் ஆகியன இணைந்து வழங்கின.

கல்லூரி ஸ்டால்களில் என்ன கிடைக்கும்

பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஏராளமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல படிப்புகள் பற்றிய விபரங்கள் அறிந்து கொள்ளலாம். கல்லூரிகளின் விண்ணப்ப படிவங்கள், புரோச்சர்கள் இங்கேயே கிடைக்கின்றன. கல்லூரிகளில் உள்ள வசதிகள், கட்டண விபரங்களையும் தெரிந்து கொள்ள மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அரிய வாய்ப்பு. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சி நடக்கின்றது. அனுமதி இலவசம்.

வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று...

இன்று நடக்கும் கருத்தரங்கில், "என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எதை படிக்கலாம், அதை எப்படி படிக்க வேண்டும்' என புட்டுபுட்டு வைக்கிறார் ஜெயபிரகாஷ் காந்தி.
"கை நிறைய சம்பாதிக்க செய்யும் "சி.ஏ.,/ஏ.சி.ஏஸ்.,/ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்புகள்' பற்றி விவரிக்கிறார் சரவண பிரசாத்.
உலகுக்கே உணவிடும் "வேளாண் அறிவியல்' குறித்து பேசுகிறார் சுதாகர்.
"கால்நடை அறிவியல் கல்வியின் எதிர்காலம்' பற்றி கற்றுத்தருகிறார் டாக்டர் முருகானந்தம். நான்காவது தூண் எனப்படும் "ஊடகத்துறை படிப்புகள்' பற்றி விவரிக்கிறார் எஸ்.எல்.சி.எஸ்.,சின் மணிகண்டன்.
சுகாதாரம், அறிவியல் இரண்டையும் இணைக்கும் "ஹெல்த் சயின்ஸ்' படிப்புகள் பற்றி விவரிக்கிறார் டாக்டர் வாசுதேவன். மாணவர்களே வாருங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள், "தினமலர்' அழைக்கிறது.
வெளிநாட்டு படிப்பு சாதகமா பாதகமா : தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம்

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "வெளிநாட்டில் மேற்படிப்புக்கான சாதக பாதகங்கள்' தொடர்பாக, சென்னையில் வெளிநாட்டு படிப்புக்கான மையம் நடத்தும் பால்செல்லக்குமார் பேசியதாவது: தேசிய அளவிலான அங்கீகாரத்திற்கு, வெளிநாட்டு கல்வியின் பங்கு முக்கியம். மூன்று ஆண்டுகளாக, ஆண்டுதோறும் 2 லட்சம் மாணவர்கள், உயர் கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர். சீனாவுக்கு அடுத்து, இந்தியர்கள் தான் அதிகமாக, வெளிநாடு சென்று படிக்கின்றனர். கடந்த 1997 ல், 90 சதவீத மாணவர்கள் "ஸ்காலர்ஷிப்பில்' சென்றனர்; இப்போது சொந்த பணத்தில் செல்கின்றனர். இங்கு ஐ.ஏ.எஸ்., தேர்வை, 5 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர், மெயின் தேர்வுக்கு செல்கின்றனர். ஐ.ஐ.டி.,யில், 4.50 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். ஐ.ஐ.எம்.,ல் 2 லட்சம் பேர் எழுதி, 1.5 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர்.
ஜப்பானில், 4,000 பல்கலைகள் உள்ளன. அமெரிக்காவில் 3,700 பல்கலைகளும், சீனாவில் 2,500 பல்கலையும் உள்ளன. இந்தியாவில் 560 பல்கலைகளே உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைகு ஏற்ப இல்லை. வெளிநாடுகளில் இளங்கலை பட்டம் படிக்க, ஆண்டுக்கு குறைந்தபட்சம், ரூ. 5 லட்சம் முதல் ரூ.15 லட்சமும்; முதுகலை பட்டம் படிக்க, ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகும். பிரான்ஸ், செக் குடியரசு, ஹங்கேரி போன்ற நாடுகளில், கல்விக் கட்டணங்கள் குறைவு. வெளி நாட்டுக் கல்விக்கு, ஆங்கில அறிவு முக்கியம், என்றார்.

"பயோ டெக்னாலஜி மற்றும் பயோ இன்ஜினியரிங்' படிப்புகள் குறித்து, சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை, பயோ டெக்னாலஜி துறை தலைவர் ரமா வைத்தியநாதன் பேசியது: வேறுபட்ட சிந்தனையாளர்கள்தான், எதிர்காலத்தில் சிறந்தவர்களாக உருவாகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் எட்டுவிதமான திறமைகள் உள்ளன. மரபணுக்கள் தொடர்பாக இப்படிப்பானது, வேதியியல், டெக்ஸ்டைல்ஸ், லெதர், மருத்துவம், பொறியியல், உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளுக்கு அடிப்படையாக உள்ளது. மனித மரபணுகளில் இருந்து இன்சுலில் தயாரிக்கப்பட்டதும், இத்துறை மூலம்தான். கடந்த 10 ஆண்டுகளில், இத்துறையின் வளர்ச்சி அபரிமிதம். பயோ டெக்னாலஜி ஆராய்ச்சியில், இந்தியா 12வது இடத்தில் உள்ளது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் மரபணுக்களை வரிசைபடுத்தி, அவரது செயல்பாடுகளை ஆய்வு செய்ய முடியும், என்றார்.

"மொழிப் பாடங்களை தேர்வு செய்து நல்ல எதிர்காலம் அமைப்பது எப்படி' என, பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பேசியதாவது:
படிப்பு என்பது வேலைவாய்ப்புக்காக மட்டும் இல்லாமல், சமுதாய மேம்பாட்டிற்காகவும் இருக்க வேண்டும். மாணவர்கள், உலக அளவிலான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மொழிப்பாடங்களை தேர்வு செய்து, பி.எட்., படித்தால், ஆசிரியர்களாகவும், முதுகலையுடன் எம்.பில்., பிஎச்.டி., படித்தால் பேராசிரியர்களாகவும் பணியாற்றலாம். பிஎச்.டி., படிக்கும்போது, மாதம் ரூ.20 ஆயிரம், "ஸ்காலர்ஷிப்' கிடைக்கிறது. இதுதவிர, ஊடகங்கள், சுற்றுலா, சினிமா போன்ற துறைகளில் வேலைகள் காத்திருக்கின்றன. கம்ப்யூட்டர் அறிவுடன், மொழித்திறனையும் வளர்த்துக்கொண்டால் அதிக வருவாய் ஈட்டலாம். எல்லோர் மனதிலும் ஒரு பிம்பம் உள்ளது; அதில் எது வலிமையானது என்று முடிவு செய்து அதை மட்டும் தேர்வு செய்யுங்கள். இதுதான் நமக்கு வாழ்க்கை என, தீர்மானித்து விட்டால் எதுவும் சுலபம்.


இத்தனை கல்லூரிகள் இருப்பது இப்போது தான் தெரியும் : வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் மகிழ்ச்சி


மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நேற்று துவங்கிய "வழிகாட்டி' நிகழ்ச்சிக்கு, காலை முதலே ஏராளமான மாணவர்கள் வந்து வண்ணம் இருந்தனர். ஒரே கூரையின் கீழ் ஏராளமான கல்வி நிறுவனங்களைக்காணவும், உயர்கல்வி பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவும், வழிகாட்டி ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

வழிகாட்டி பற்றி இதோ மாணவர், பெற்றோரின் கருத்து:

எச்.வெங்கட்ராஜ், மதுரை: நான் பயோமேத்ஸ் மாணவன். இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரே இடத்தில் இத்தனை கல்லூரிகளை பார்க்க முடியுமா என்பதே ஆச்சரியம். என்ன மதிப்பெண் எடுத்தால், என்ன கோர்ஸ் படிக்கலாம் என்பதையும் தெரிந்துகொண்டோம். பிளஸ் 2ல் ஆயிரம் மதிப்பெண் எடுப்பேன் என எதிர்பார்க்கிறேன். எனக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தான் ஆர்வம். அது பற்றியும் அறிந்துகொண்டேன்.

எம்.சண்முகப்பிரியா, மதுரை: பொதுத்தேர்வில் 900 மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறேன். பல்வேறு கல்லூரிகளில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன, கட்டணம் எவ்வளவு என்பதை ஒரே நிகழ்ச்சியில் அறிந்து கொண்டேன். எனக்கு நர்சிங் படிக்க விருப்பம்.

நாகஜோதி 25, உசிலம்பட்டி:
எனது தங்கையை அழைத்து வந்துள்ளேன். அறிவியல் குரூப் படித்த அவர், வேதியியலில் பட்டம் பெற்று, பி.எட்., படிக்க விரும்புகிறார். இதற்கான விபரங்களை இங்கு வந்து தெரிந்து கொண்டோம். கிராமத்தில் இருந்தாலும், தினமலர் நாளிதழ் மூலம் இந்நிகழ்ச்சி பற்றி அறிந்து இங்கு வந்தோம். இங்கு வந்த பிறகு தான், நாட்டில் இத்தனை கல்லூரிகள் இருப்பதே தெரிய வந்தது. தினமலர் வழங்கும் கல்வி, வேலைவாய்ப்பு மலர் பயனுள்ளதாக இருக்கிறது.

எம்.மீன்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்:
தினமலர் நாளிதழைப் பார்த்து, எங்கள் ஊரில் இருந்து 10 பேர் இந்நிகழ்ச்சியைக் காண வந்துள்ளோம். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். இங்கு வருவதற்கு முன், எங்கு படிக்க வேண்டும் என நிறைய குழப்பம் இருந்தது. இப்போது அது தெளிவாகி உள்ளது. ஊருக்கு சென்று என் மற்ற நண்பர்களையும் வரச் சொல்வேன். கவுன்சிலிங், கல்விக் கடன் பற்றியும் நிறைய விஷயங்கள் எனக்கு தெரிந்தது.

ஆர்.லட்சுமி 45, திண்டுக்கல்:
எனது மகளுக்காக நான் இங்கு வந்தேன். அவர் ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வுக்கு தயார் செய்து வருவதால், அவர் வர முடியவில்லை. என் மகள் மாநில ரேங்க் பெறுவார் என எதிர்பார்க்கிறேன். அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் அல்லது மருத்துவம் படிக்க விரும்புகிறார். உயர் கல்வி பற்றி இப்போது தான் நிறைய "ஐடியா' கிடைத்துள்ளது. இது போல் நிகழ்ச்சியை நிறைய ஊர்களில் நடத்த வேண்டும்.

எஸ்.ரேவதி, சோழவந்தான்: ஆயிரம் மதிப்பெண் எதிர்பார்க்கிறேன். எனது தந்தை "டிவி' மெக்கானிக்காக இருந்தும், எங்களை நன்கு படிக்க வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு அவர் தான் அனுப்பி வைத்தார். என்னுடன் அம்மா, சித்தி, அவரது மகள் வந்துள்ளனர். அனைவருமே, கல்லூரி ஸ்டால்களை சுற்றிப் பார்த்து, நிறைய விஷயங்களை அறிந்து கொண்டோம். ஊருக்கு சென்று என்னுடன் படித்தவர்களையும் வரச்சொல்லப் போகிறேன்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amukkusaamy - chennai,இந்தியா
26-மார்-201314:00:03 IST Report Abuse
amukkusaamy மிகவும் ஆக்க பூர்வமான அருமையான வழி காட்டுதல். வாழ்க தினமலர். இதை பாராட்ட நமது வாசகர்கள் இங்கே தங்கள் கருத்தைப் பதிவு செய்ய வில்லை. மாறாக அரசியல் நிகழ்ச்சிகளை மட்டும் கருத்து சொன்னால் எப்படி...ஒருவனுக்கு தினமும் ஒரு மீன் உணவாக கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக்கொடு என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது..மாணவ சமுதாயம் சார்பாக எனது நன்றிகள் பல.
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
26-மார்-201308:28:33 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இதை ஒரு பெரிய மாணவர் சக்தி தொடர் இயக்கமாக மாற்ற வேண்டிய கடமை பொறுப்புள்ள தினமலர் குழுமத்திற்கு உள்ளது.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை