திருத்தணி:கொளுத்தும் வெயிலால், அரசு மதுபான கடைகளில், "பீர்' விற்பனை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் விற்பனையாளர்கள், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்வதால்,
"குடிமகன்'கள் அவதிப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம், 320 அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.
திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாவில், 26 மதுபான கடைகள் உள்ளன. இக்கடைகளில், அனைத்து வித மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
கோடை காலம் என்பதால், தற்போது, 30 வகையான, "பீர்' வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. பீர் விலை, ரகத்திற்கு ஏற்றவாறு, 80, 90 மற்றும், 100 ரூபாய் வரை, அரசு விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன், ஒரு நாளுக்கு, ஒரு டாஸ்மாக் கடையில் சராசரியாக, பிராந்தி வகை சரக்குகள், 30 பெட்டிகள் (720 பாட்டில்கள்) விற்பனையாகும். "பீர்' வகைகள், 5 முதல் 10 பெட்டிகள் (120 பாட்டில்கள்) விற்பனையாகும்.
தற்போது, வெயிலின் தாக்கத்தால், பீர் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு, குறைந்தபட்சம், 25 பெட்டிகளில் இருந்து, 40 பெட்டிகள் வரை விற்பனை ஆகின்றன. வழக்கமாக இங்கு, 10 பெட்டிகள் மட்டுமே விற்பனையாகும்.
கொளுத்தும் வெயிலால் சிலர் விரும்பி, "பீர்' வகைகளை வாங்கி குடிக்கின்றனர். சில "குடிமகன்'கள், பிராந்திக்கு பதிலாக பீர் வாங்கி குடிப்பதால், பீர் விற்பனை கணிசமாக அதிகரித்து உள்ளது.
அதே நேரத்தில், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கடை விற்பனையாளர்கள், அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு பாட்டிலுக்கு, 10 ரூபாய் முதல், 15 ரூபாய் வரை, கூடுதலாக விற்பனை செய்கின்றனர்.
இதனால் சில "குடிமகன்'களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத கடை விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:
தற்போது கோடை காலம் என்பதால், பீர் விற்பனை அதிகரித்து உள்ளது.
நாங்கள் விற்பனைக்கு ஏற்றவாறு, பீர் தேவை பட்டியல் தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கிறோம்.
தற்போது, அதன்படியே எங்கள் கடைகளுக்கு தேவையான பீர் அனுப்பி வைக்கின்றனர். கோடை வெயில் கொளுத்த துவங்கி உள்ளதால், பிராந்தி வகைகளின் விற்பனை, நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது.
தற்போது, பிராந்தி வகை ஒரு நாளைக்கு, 5 முதல், 10 பெட்டிகள் மட்டுமே விற்பனை ஆகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.