சென்னை: ""காவிரியை போல் கச்சத்தீவு பிரச்னையிலும் வெற்றி பெறுவோம்,'' என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று நடந்தது. கேள்வி நேரத்திற்குப் பின், தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., உலகநாதன், பா.ம.க., எம்.எல்.ஏ., கணேஷ்குமார் ஆகியோர், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
ஜெ., பதில்: இந்த விவாதங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்: இந்தியாவின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்த போது, இப்பிரச்னை எழவில்லை. கச்சத்தீவு, 1974ம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது, தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி. இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், "இரு நாடுகளும் பரம்பரையாக, தங்கள் நாட்டிற்கு சொந்தமான கடல் எல்லையில், எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம்' என, கூறப்பட்டது. இதை இலங்கை அரசு மதிக்கவில்லை. மாறாக, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. "கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமரிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் பல முறை வலியுறுத்தினேன். இருப்பினும், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மேற்கு வங்கத்தில் உள்ள பெரும் பகுதியை, 1960க்கு முன் கிழக்கு பாகிஸ்தானுக்கு, மத்திய அரசு தாரை வார்க்க முயன்றது. அப்போது, இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், அப்போதைய மேற்கு வங்க அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில், 1960ம் ஆண்டில், "இந்திய நாட்டுக்கு சொந்தமான ஒரு பகுதியை, அன்னிய நாட்டுக்கு கொடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தை, பார்லிமென்டில் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த நடவடிக்கையை, 1974ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, பின்பற்றி இருந்தால், கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு இருக்காது.
முற்றுப்புள்ளி: மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு, ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; மீனவர்களை துன்புறுத்தும் நடவடிக்கையை நிறுத்தி கொள்ள, இலங்கை அரசுக்கு அறிவுரை கூற வேண்டும் என, பிரதமரிடம் பல முறை வலியுறுத்தி உள்ளேன். மத்திய அரசு, தமிழக மீனவர்கள் என்றால், இந்திய நாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்தோ என்னவோ, தொடர்ந்து மவுனமாக உள்ளது. மத்திய அரசின் கையாலாகாத்தனம் காரணமாக, தமிழக மீனவர்கள் மீதான, இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது. கடந்த ஒரு மாதத்தில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல், நான்கு முறை நடந்துள்ளது. இதற்கு காரணமான, இந்தியா-இலங்கை ஒப்பந்தம் செல்லாது என, தீர்ப்பளிக்க வேண்டும் என, 2008ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசின் வருவாய் துறையும், இந்த வழக்கில் தன்னை இணைத்தது.
வெற்றி: இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில், நிச்சயம் வெற்றி கிடைக்கும். இலங்கை தூதரக அதிகாரியை நேரில் வரவழைத்து, இந்தியாவின் வலுவான எதிர்ப்பை தெரிவித்து, இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட இந்தியா - இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தத்தை, இந்தியா திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட, சுப்ரீம் கோர்ட்டை அணுகி, வெற்றி பெற்றது போல், கச்சத்தீவு பிரச்னையிலும், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கில் விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன் வைத்து, சட்ட ரீதியாக இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.