உடுமலை:நடப்பு நிதியாண்டில், வாகனங்களுக்கான வரிகளை செலுத்தி நடவடிக்கையை தவிர்க்குமாறு வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் முருகானந்தம் அறிக்கை:உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நடப்பு நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு சாலை வரி மார்ச் 24 ம் தேதி முதல் வசூலிக்கப்பட்டு வருகிறது.
வரும் ஏப்., 24 ம் தேதி வரை, விடுமுறை தினங்கள் தவிர்த்து, காலை 10.00 மணி முதல் மதியம் 01.30 மணி வரை அலுவலகத்தில், வசூலிக்கப்படும்.மோட்டார், கார், ஜீப் வகைகளில், வெற்று வாகன எடை 700 கிலோ வரையுள்ள வாகனங்களில், இறக்குமதி வாகனங்களுக்கு ஆண்டு வரி ஆயிரத்து 800 ரூபாயும், தனி நபர் வாகனங்களுக்கு 600 ரூபாயும், பிற வாகனங்களுக்கு ஆயிரத்து 200 ரூபாயும் செலுத்தப்பட வேண்டும்.
701 முதல் 1,500 கிலோ வரை வெற்று வாகன எடையுள்ள வாகனங்களில், இறக்குமதி வகைக்கு 2 ஆயிரத்து 350 ரூபாய்; தனிநபர் 800 ரூபாய்; பிற வாகனங்களுக்கு ஆயிரத்து 600 ரூபாய் செலுத்த வேண்டும்.1,500 முதல் 2 ஆயிரம் கிலோ வரையிலான பிரிவில், இறக்குமதி வாகனங்களுக்கு, 2 ஆயிரத்து 700 ரூபாய்; தனிநபர் ஆயிரம் ரூபாய், பிற வாகனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும்.2 ஆயிரம் கிலோ முதல் 3 ஆயிரம் கிலோ வரை எடையுள்ள இறக்குமதி வாகனங்களுக்கு 2 ஆயிரத்து 900 ரூபாயும், தனி நபர் வாகனங்களுக்கு ஆயிரத்து 100 ரூபாயும், பிற வாகனங்களுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாயும் வரி செலுத்தப்பட வேண்டும்.
இருசக்கர வாகனங்களுக்கு வாகனத்திறன் அடிப்படையில், வரி செலுத்த வேண்டும். 50சிசி., க்கு மேல் 75 சிசி., க்குள் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு 135 ரூபாயும், 75 சிசி., க்கு மேல் 170 சிசி., வரை 200 ரூபாயும், 170 சிசி., க்கு மேல் 240 ரூபாயும் ஆண்டு வரி செலுத்த வேண்டும்.வரி செலுத்தப்படும் வாகனங்களுக்கு, நடப்பிலுள்ள காப்புச்சான்று, புகைச்சான்று, பதிவுச்சான்று ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். 15 ஆண்டுகள் முடிவுற்ற வாகனங்களுக்கு பசுமை வரியாக இரு சக்கர வாகனங்களுக்கு 500 ரூபாயும், இதர வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாயும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை செலுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.