மும்பை:மருமகளை கொலை செய்த மாமியாருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை, ஆறு ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மும்பை, காட்கோபர் பகுதியில் வசித்த மங்களா என்ற பெண்ணின் மகன் சுனிலுக்கும், நீலம் என்ற பெண்ணுக்கும், 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. மகன், மருமகளுடன் ஒரே வீட்டில், தன் கணவருடன் வசித்து வந்தார் மங்களா.
வாய்ச்சண்டை:திருமணமான சில மாதங்களில், மங்களாவுக்கும், மருமகளுக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டது. திடீரென கோபமடைந்த மங்களா, அருகில் இருந்த மண்ணெண்ணெயை, நீலம் மேல் ஊற்றி தீவைத்து விட்டாள்.உடனடியாக தவறை உணர்ந்து, எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயற்சித்தாள். எனினும், உடல் முழுவதும் தீப்பற்றிக் கொண்டதால், நான்கு நாள் சிகிச்சைக்குப் பிறகு, நீலம் இறந்து விட்டாள். போலீசிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், மாமியார் மங்களா தான் தீவைத்தார் என்பதை அப்பெண் கூறியிருந்தார்.
இந்த குற்றத்திற்காக, மங்களாவுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, கீழ்கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, அந்தப் பெண் சார்பில், மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு, நீதிபதிகள், பி.டி. கோடே மற்றும் வி.கே.தஹில்ரமணி ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரிக்கப்பட்டது; நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:மருமகளை கொலை செய்ய வேண்டும் என எண்ணாமல், கோபத் தில், தீவைத்து விட்ட மங்களா, தீயை அணைக்க முயற்சித்துள்ளார். இதன் மூலம் அவரின் எண்ணம் தெளிவாகிறது. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, ஆறு ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து உத்தரவிடுகிறோம்.
குறைப்பு:ஏற்கனவே, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்ட தால், மீதமிருக்கும், ஓராண்டு மட்டும் தண்டனை அனுபவித்தால் போதும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.