பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் நேற்று மத்தி மீன்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களாக புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் படகில் கடலுக்குச் சென்று பிடித்து வரும் மத்தி, வஞ்சரம், சூரை, கவளை, கெளுத்தி, பாறை உள்ளிட்ட மீன் வகைகள் அன்னங்கோவிலில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
நேற்று மீனவர்கள் பிடித்து வந்த மத்தி மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. வழக்கமாக ஒரு படகில் கொண்டுவரப்படும் மத்தி மீன்கள் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். நேற்று வழக்கத்திற்கு மாறாக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது.
கேரளாவில் மீன்வரத்து குறைவாக இருந்ததாலும், கோழித் தீவனத்திற்கு மத்தி மீன்கள் அதிகம் தேவைப்படுவதாலும் நேற்று மத்தி மீன்கள் விலை அதிகரித்ததாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.