சேலம் : தமிழகத்தில், 10ம் வகுப்பு கணித தேர்வு, பெரும்பான்மையான மாணவர்களுக்கு கடினமாக இருந்ததற்கு, புதிய காரணம் கூறப்படுகிறது. கணிதப் பாட, "ப்ளூ பிரின்ட்' அமைப்பில், தமிழக அரசு செய்த மாற்றம், அனைத்து கணித ஆசிரியர்களையும் சென்றடையவில்லை. இதனால், மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் குழப்பம் அடைந்தனர்.தமிழகத்தில் நேற்று முன்தினம், 10ம் வகுப்பு கணித தேர்வு நடந்தது. இதில், ப்ளூ பிரின்ட் படி, கேள்விகள் கேட்கப்படவில்லை; தேர்வு கடினமாக அமைந்தது; 15 மதிப்பெண் வரை மாணவர்கள் இழக்க நேரிடும் என, ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். மாணவர்கள் தரப்பிலும், இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.
கடந்த காலங்களில், பாட புத்தகங்களில் உள்ள வினாக்கள் மற்றும் எடுத்துக்காட்டு வினாக்கள் மட்டுமே, தேர்வுகளில் கேட்கப்பட்டன. மாணவர்கள், கணிதப் பாடத்தை கூட மனப்பாடம் செய்து எழுதி, அதிக மதிப்பெண் பெற்றனர். கடந்த, 2011-12ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. சமச்சீர் கல்வியில், பழைய முறை மாற்றப்பட்டு, கணித பாட தேர்வில், "கிரியேட்டிவ்' வினாக்கள் சேர்க்கப்பட்டன. அதாவது, பாடத்துடன் தொடர்பு இருக்கும்; ஆனால், புத்தகத்தில் இல்லாத வினாக்கள் கேட்கப்படும்.இதை, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வரவேற்றனர். இவற்றை அடிப்படையாக வைத்து, அப்போது, ப்ளூ பிரின்ட் வெளியிடப்பட்டது.சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப் படுவதற்கு முன், ஆண்டுதோறும், 10ம் வகுப்பு கணித தேர்வில், 7,000க்கும் அதிகமான மாணவர், "சென்டம்' வாங்குவர். சமச்சீர் கல்விக்கு பிறகு, இந்த நிலை மாறி, கடந்த கல்வியாண்டில், 743 பேர் மட்டுமே, சென்டம் வாங்கினர். இது, சிறந்த கல்வி தரத்துக்கு உதாரணமாக அமைந்தது.ஆனால், கல்வியின் தரம் குறித்து கவலைப்படாமல், சென்டம் வாங்குபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நடப்பு கல்வியாண்டில், வினாத் தாளில் உள்ள பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன.
கட்டாய வினாக்களாக இருந்த, கிரியேடிவ்
வினாக்கள், "சாய்ஸ்' விட வசதியாக, மாற்றம் செய்யப்பட்டன. இதனால், மனப்பாடம் செய்யும் மாணவர்களும், சென்டம் வாங்க முடியும் என்ற பழைய நிலை, மீண்டும் உருவானது.
இதற்கேற்ப, ப்ளூ பிரின்ட்டில் செய்யப்பட்ட மாற்றம், அனைத்து
ஆசிரியர்களையும் சென்றடையவில்லை. பெரும்பாலான கணித ஆசிரியர்கள், பழைய ப்ளூபிரின்ட் அடிப்படையில் தொடர்ந்து பாடம் நடத்தினர். இயக்குனரகத்தில்
இருந்து, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட, ப்ளூ பிரின்ட்
மாற்றம் குறித்த விவரங்கள், மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.
அதை, கணித ஆசிரியர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், கணிதப்
பாடத்தின் ப்ளூ பிரின்ட் குறித்து, தேர்வு நேரம் வரை, ஆசிரியர்கள்,
மாணவர்களிடையே குழப்பம் நிலவியது.
குழப்பம், பிரச்னையாக
உருவெடுக்கும் நிலை கண்டு, அதற்கு தெளிவுரை வழங்கும் வகையில், பிப்ரவரி மாத
இறுதியில், அரசுத் தேர்வுத் துறை இயக்குனர்வசுந்தரா தேவி, கணிதப்பாட கேள்வி அமைப்பு குறித்த விளக்கத்தை, பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பினார்.இதில், கேள்வித்தாள் அமைப்பு குறித்து, ஆசிரியர்களிடம் நிலவிய குழப்பத்துக்கான விளக்கம், "கேள்வி - பதில்' அடிப்படையில் கூறப்பட்டிருந்தது. எனினும், இந்த விளக்கமும், பல மாவட்டங்களில், கணித ஆசிரியர்களை சென்றடையவில்லை.ஆசிரியர்கள், பழைய ப்ளூ பிரின்ட் அடிப்படையில், பாடம் நடத்தினர். ஆனால், நேற்று முன்தினம் நடந்த கணித தேர்வில், பழைய வினாத் தாள் அமைப்பில், கேட்க மாட்டார்கள் என நினைத்து, நடத்தாமல் விடப்பட்ட பல பாடங்களில் இருந்து, பல வினாக்கள், புதிய மாற்றத்தின் படி கேட்கப்பட்டதால், ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.உதாரணமாக, "பிதாகரஸ் தேற்றத்தின் நிரூபணம் கேட்கப்படும்' என, தேர்வுத்துறை இயக்குனர் புதிய விளக்கம் அளித்த நிலையில், அந்த நிரூபணம் கணிதத் தேர்வில் கேட்கப்பட்டது. ஆனால், இது, பழைய ப்ளூ பிரின்ட்டில் இடம் பெறவில்லை.ப்ளூ பிரின்ட்டில்
செய்யப்பட்ட மாற்றத்தை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெளிவு படுத்தாததால், குளறுபடிகள் ஏற்பட்டதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
"சென்டம்' அவசிமா?பொதுவாக தேர்வுகளில், "சென்டம்' மதிப்பெண் வாங்குவது என்பது, "கல்வித் தரம் அதிகரித்து விட்டது' என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது. இதற்கேற்ப ஆசிரியர்கள் முதல், அரசியல் கட்சிகள் வரை,
சென்டம் அதிகரிக்க வேண்டும் என்பதை மட்டுமே, குறிக்கோளாக கொண்டுள்ளனர்.கணித
தேர்வில், கடந்த ஆண்டில் கேட்கப்பட்டது போல், கட்டாயமாக, கிரியேட்டிவ்
வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என்ற நிலை இருந்திருந்தால், திறமையான
மாணவர்கள் மட்டுமே, சென்டம் வாங்கி இருக்க முடியும்.அப்போது தான் கல்வித் தரம் மேம்படும். சென்டம் மதிப்பெண்ணுக்கும் மதிப்பும் கூடும் என்பது, பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
ஏன் தெரியவில்லை?மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு, ப்ளூ பிரின்ட் மாற்றம் குறித்து, டிசம்பரில் ஒரு சுற்றறிக்கை யும், பிப்ரவரியில் ஒரு சுற்றறிக்கையும், அரசுத் தேர்வு இயக்குனரகத்தில் இருந்து அனுப்பப்பட்டது. இவற்றை, பல மாவட்டங்களில், பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பிவிட்டு, "கடமை'யை முடித் துக் கொண்டனர். பல மாவட்டங்களில், தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், இதை ஒரு பகுதியாக தெரிவித்தனர். தலைமை ஆசிரியர்களில், கணிதப்பாடம் தொடர்பு இல்லாதவர்களுக்கு, இது குறித்து புரிய வாய்ப்பில்லை. இவர்கள் முறையாக, கணித ஆசிரியர்களிடம் இத்தகவலை தெரிவிக்கவில்லை.சேலம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில், ப்ளூ பிரின்ட் மாற் றம் குறித்த விவரம், அனைத்து தரப்பினருக்கும் சென்று சேர்ந்ததால், அதற்கேற்ப, ஆசிரியர்கள் பாடம் நடத்தியுள்ளனர். இதனால் இப்பகுதி மாணவர்களுக்கு தேர்வு எளிதாக இருந்ததுடன், சென்டம் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.