24 போலீசாரை கொன்ற முக்கிய குற்றவாளி : மாவோயிஸ்ட் கமாண்டர் கோவையில் திடீர் கைது!| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

24 போலீசாரை கொன்ற முக்கிய குற்றவாளி : மாவோயிஸ்ட் கமாண்டர் கோவையில் திடீர் கைது!

Updated : ஏப் 08, 2013 | Added : ஏப் 07, 2013 | கருத்துகள் (2)
Advertisement
24 போலீசாரை கொன்ற முக்கிய குற்றவாளி : மாவோயிஸ்ட் கமாண்டர் கோவையில் திடீர் கைது!

கோவை:கோவை நகரில் பதுங்கி, தொழிற்சாலையில் கூலிவேலை செய்த மேற்கு வங்க மாவோயிஸ்ட் இயக்க கமாண்டர், போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த, 2010ம் ஆண்டில், மேற்கு வங்கத்தில் நடந்த, துணை நிலை ராணுவ முகாம் மீதான தாக்குதலில், 24 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில், இவர் முக்கியமானவர் என, தேடப்பட்டவர் ஆவார்.
தேடப்பட்டவர்மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிட்னாபூர் மாவட்டம், ஜார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம்சரண், 26. மாவோயிஸ்ட் இயக்கத்தின், "ஆயுதப்படையில்' இரண்டாம் நிலை கமாண்டராக பதவி வகித்தவர். கடந்த, 2010ம் ஆண்டில், துணை நிலை ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி, பலத்த உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை, மேற்கு வங்க போலீசார் தேடி வந்தனர்.மூன்றாண்டுகளாக, தலைமறைவாக இருந்த ஷியாம் சரண், கோவை நகரில் பதுங்கியிருப்பதை, மேற்கு வங்க உளவுத்துறையினர், தகவல் தொடர்பு தொழில்நுட்ப யுத்திகள் மூலம் கண்டுபிடித்து, கோவை போலீசுக்கு தெரிவித்தனர்.மாநகர போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், பீளமேட்டில் தங்கி, தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில், கூலிவேலை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்நபரை, பீளமேடு போலீசார் நேற்று
முன்தினம் கைது செய்தனர்.இத்தகவல், மேற்கு வங்க மாநிலம், மிதினாபூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டி.எஸ்.பி., விவேக்குமார் வர்மா தலையிலான போலீசார் நேற்று கோவை வந்தனர்; அவர்களிடம் ஷியாம் சரண் ஒப்படைக்கப்பட்டார்.இதுகுறித்து, கோவை மாநகர சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ்குமார்
கூறியதாவது:பிடிபட்ட ஷியாம்சரண், மாவோயிஸ்ட் கமாண்டர். சி.பி.ஐ.எம்., கட்சியின் உள்ளூர் தலைவர் கொலையில் தொடர்புடையவர். போலீசாரை கொன்றார்
கடந்த, 2010, பிப்., 15ல், சில்டா பகுதியில் முகாமிட்டிருந்த, துணை நிலை ராணுவப் படையினர் மீது, மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தி, 24 போலீசாரை கொன்றனர்; இத்தாக்குதலில், ஷியாம் சரண் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவரை, மேற்கு வங்க போலீசார் தேடிவந்த நிலையில், கடந்த பிப்., 28ல், கோவை வந்துள்ளார். இங்கு தலைமறைவாக இருந்த காலத்தில், குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை.இவ்வாறு, பிரவேஷ்குமார் தெரிவித்தார்.
மேலும் பலர் பதுங்கல்?
ஷியாம் சரணுடன், மேலும் பல மாவோயிஸ்ட்கள், மேற்கு வங்கத்தில் இருந்து, போலீஸ் நெருக்கடிக்கு பயந்து, கோவைக்கு தப்பி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுகுறித்து, ஷியாம் சரணிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ""மாவோயிஸ்ட்கள் யாரும் என்னுடன் வரவில்லை; என் சொந்த கிராமத்தினர் சிலருடன்தான் கோவை வந்தேன்,'' என, தெரிவித்து உள்ளார். இவரது வாக்குமூலத்தின் மீது சந்தேகமடைந்து உள்ள போலீசார், உடன் வந்த நபர்களின் விவரங்களை கண்டறியும்
நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பயங்கரவாதியை கோவையில் சுற்றிவளைத்தது எப்படி?:தனிப்படை போலீசார் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
மேற்குவங்கத்தில், துணைநிலை ராணுவமுகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தி, 24 போலீசாரை சுட்டுக்கொன்ற வழக்கில் தொடர்புடைய, மாவோயிஸ்ட் இரண்டாம் நிலை கமாண்டர் ஷியாம்சரணை, கோவையில் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தது எப்படி? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 2010ல், மேற்குவங்க மாநிலம், சில்டா பகுதியில், மாவோயிஸ்ட்களை வேட்டையாட, துணை நிலை ராணுவப்படையினர் முகாமிட்டிருந்தனர். இங்கு 30க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி, வெடிகுண்டுகள் சகிதமாக திடீர் தாக்குதல் நடத்தி, 24 போலீசாரை கொன்றனர். இவ்வழக்கில், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். இத்தாக்குதலில், முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் ஷியாம்சரண், 26, நேற்றுமுன்தினம், கோவை நகரில் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். இவர் பயங்கரவாதி என்பதால், இடுப்பில் கயிறும், கையில் விலங்கும் பூட்டி, மேற்கு வங்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
கண்டுபிடித்தது எப்படி?
மேற்குவங்க மாநிலம், மேற்கு மிதினாபூர் மாவட்டம், ஜார் கிராமத்தைச் சேர்ந்த ஷியாம்சரண், 26, பள்ளிப்படிப்பைக்கூட தாண்டாதவர். இவரது கிராமத்தைச் சேர்ந்த சக நண்பர்கள், மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்ததை கண்டு, இவரும் சேர்ந்து, ஆயுதப்பயிற்சி பெற்றார். தாக்குதல் நடவடிக்கைகளிலும், சக குழுவினருடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளார். சில்டா பகுதி துணைநிலை ராணுவ முகாம் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய பெரும் தாக்குதலுக்குப் பிறகே, ஷியாம்சரண் பற்றிய தகவல்கள், மேற்குவங்க உளவுத்துறைக்கு கிடைத்தன. இவரை பிடிக்க, சொந்த ஊரான, ஜார் கிராமத்துக்குச் சென்று ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, முன்புபோல அவர் அடிக்கடி கிராமத்துக்கு வருவதில்லை என்றும், வெளிமாநிலத்துக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, அவரது அண்ணன் குறித்து விசாரித்தனர். அவர், கோவை தனியார் கம்பெனியில் பணியாற்றுவது தெரியவந்தது. அவரது மொபைல்போன் எண்களை சேகரித்த போலீசார், தொடர்பிலிருந்த பலரது, மொபைல்போன் எண்களையும் ஆராய்ந்தனர். அப்போதுதான், ஷியாம்சரண் கோவையில் இருப்பதும், அடிக்கடி போனில் பேசியதும் கண்டறியப்பட்டது. மேற்கொண்டு நடந்த ரகசிய விசாரணையில் ஷியாம்சரண், பீளமேடு, தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள "நித்யா இன்டஸ்ட்ரீஸ்' என்ற கம்பெனியில் தங்கி, பணியாற்றுவது உறுதியானது.
தனிப்படை அமைப்பு
ஷியாம்சரணை கைது செய்ய, மேற்குவங்க டி.எஸ்.பி., விவேக்குமார்வர்மா என்பவரது தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படைக்கு இவரை தேர்வு செய்ததிலும், ஒரு காரணம் இருந்தது. இவர், போலீஸ் பணிக்கு வருமுன், வங்கியில் பணியாற்றியுள்ளார். அப்போது திருப்பூர் மாவட்டம், அவிநாசியிலுள்ள வங்கிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, சில ஆண்டுகள் பணியாற்றியதால், ஓரளவு தமிழ் பேச கற்றுக்கொண்டார். இதனால், இவரையே தமிழகத்துக்கு அனுப்பி, மாவோயிஸ்ட்டை கைது செய்ய, அங்குள்ள உயரதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படியே, தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் கோவை வந்து, மாநகர போலீஸ் உயரதிகாரிகளிடம் வழக்கு விபரங்கள் குறித்து விளக்கினர். இதையடுத்து, கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவுப்படி, துணைக்கமிஷனர் பிரவேஷ்குமார், உதவிக்கமிஷனர்கள் தலைமையில் தனி போலீஸ் குழு அமைக்கப்பட்டது.
கம்பெனியில் சுற்றிவளைப்பு
நேற்று முன்தினம் பீளமேடு, தண்ணீர் பந்தல் பகுதியிலுள்ள "நித்யா இண்டஸ்ட்ரீஸ்' கம்பெனியை சுற்றிவளைத்த போலீஸ் படையினர், அங்கு பதுங்கியிருந்த ஷியாம்சரணை கைது செய்தனர். அவருடன் தங்கியிருந்த மேற்குவங்கம், ஜார்கன்ட், பீகார் மாநில இளைஞர்களையும் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர். ஷியாம்சரண், பெங்காலி, இந்தி மொழியில் பேசியதால், தகவல்பெற மாநகர போலீசார் தடுமாறினர். மேற்குவங்க டி.எஸ்.பி., விவேக்குமார்வர்மா, அந்நபரிடம் விசாரணை நடத்திச் சொல்லும் தகவல்கள் மட்டுமே மாநகர போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து, இந்தி பேசத்தெரிந்த, சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதில், மேலும் பல தகவல்கள் கிடைத்தன. அதன்பின் ஷியாம்சரண், மேற்குவங்க போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
முக்கிய தகவல்கள் கிடைக்கும்: போலீஸ் நம்பிக்கை
மேற்குவங்க போலீஸ் தனிப்படையினர் கூறியதாவது:
ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஷியாம்சரண், 6ம் வகுப்பில் தவறியவர். கடந்த 2007ல், மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து, படிப்படியாக நிலை உயர்ந்து, "ஆர்ம்ஸ் குவார்ட்ரன் லீடர்' பொறுப்பு வகித்தான். சில்டா துணைநிலை ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், ஜெயந்தோ என்பவர் முக்கிய குற்றவாளி. இவர்தான், மேற்கு வங்கத்தில், மாநில அளவில் மாவோயிஸ்ட்களை ஒருங்கிணைத்து, தாக்குதல் யுத்திகளை செயல்படுத்துபவர்; இவர், இன்னும் பிடிபடவில்லை.
இந்த வழக்கில் இருவர் "என்கவுன்டரில்' கொல்லப்பட்டுவிட்டனர். மற்றொருவர், ஆயுதத்துடன் சரணடைந்தார். தற்போது, ஷியாம்சரண் பிடிபட்டுள்ளார். இந்நபர், கடந்த ஆண்டிலேயே மேற்குவங்கத்திலிருந்து வெளியேறி, கோவை நகருக்கு வந்து ஆறுமாதம் வரை வேலை செய்துள்ளார். பின்னர், மேற்குவங்கம் வந்துவிட்டு, மீண்டும் கடந்த பிப்ரவரியில் கோவைக்கு திரும்பி வந்துள்ளார். அங்கு, தான் பணிபுரியும் கம்பெனி வளாக அறையிலேயே, சக தொழிலாளர்களுடன் தங்கியிருந்தார். இவரை கைது செய்துள்ளதன் மூலம், மாவோயிஸ்ட்கள் குறித்து, மேலும் பல முக்கிய தகவல்களை பெறமுடியும் என, நம்புகிறோம்.
இவ்வாறு, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
08-ஏப்-201309:25:06 IST Report Abuse
villupuram jeevithan மனித உரிமை அமைப்புக்கள் ஆதரவு கொடுக்காமல் இருந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201307:07:48 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இது எப்படி மும்பையில் பீகாரிகள் தாக்க பட்டு துரத்தபடார்களோ அப்படி ஒரு நிலையை தமிழகத்திலும் ஏற்படுத்தும். இனி வட இந்தியர்களை வேலைக்கு சேர்த்து கொள்ள அனைவரும் தயங்குவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை