புதுடில்லி:காங்., தலைவர் சோனியா, துணை தலைவர், ராகுல் ஆகியோரின் லோக்சபா தொகுதிகளின், வி.ஐ.பி., அந்தஸ்தை, உ.பி., மாநில அரசு பறித்துள்ளது. இவர்களின் தொகுதிகளுக்கு, 24 மணி நேரமும், தடையின்றி மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வந்ததை ரத்து செய்து, நேற்று முன்தினம் முதல், அதிரடியாக, தினமும், இரண்டு மணி நேரம், மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
காங்., தலைவர், சோனியாவின் ரேபரேலி, துணை தலைவர், ராகுலின் அமேதி ஆகிய லோக்சபா தொகுதிகள், உ.பி., மாநிலத்தில் உள்ளன. உ.பி.,யில், தற்போது, அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது.மத்தியில், காங்., தலைமையிலான அரசுக்கு, வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது, சமாஜ்வாதி. சமீப காலமாக, உ.பி.,யில், கடும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதன்காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும், தினமும், நான்கு மணி நேரம் வரை, மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவின், சொந்த ஊரான, எடாவா, அவரின் லோக்சபா தொகுதியான, மெயின்புரி, அகிலேஷ் யாதவின் மனைவி, டிம்பிள் யாதவின் லோக்சபா தொகுதியான, கன்னோஜ், காங்., தலைவர், சோனியாவின் லோக்சபா தொகுதியான, ரேபரேலி, காங்., துணை தலைவர், ராகுலின் லோக்சபா தொகுதியான, அமேதி ஆகியவற்றுக்கு, வி.ஐ.பி., அந்தஸ்து அளிக்கப்பட்டது.இந்த தொகுதிகளில் மட்டும், மின் வெட்டு கிடையாது. 24 மணி நேரமும், மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வந்தது. சமீபகாலமாக, காங்., கட்சிக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே, கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.இதை அடுத்து, அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு அளித்து வந்த, வி.ஐ.பி., அந்தஸ்தை, சமாஜ்வாதி அரசு, பறித்துள்ளது. நேற்று முன்தினம் முதல், இந்த இரண்டு தொகுதிகளிலும், தினமும், இரண்டு மணி நேரம் வரை, மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.