லக்னோ : ""உத்தர பிரதேசத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் அரசு, எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் போக்கை கடைப்பிடித்து வருகிறது. எங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமாஜ்வாதி குண்டர்களுக்கு சரியான பாடம் கற்பிப்போம்,'' என, அம்மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி எச்சரிக்கை விடுத்தார்.
அகற்றம்:இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய, அம்பேத்கரின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, லக்னோவில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் கட்டியிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து கேள்விப்பட்டதும், கட்சி தலைவரான மாயாவதி கூறியதாவது: அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி அஞ்சலி செலுத்த, அவரது நினைவு இடத்துக்கு, லட்சக்கணக்கானவர்கள் வருவர் என, மாநில அரசுக்கு தெரியும்.
மேலும், அன்றைய தினத்தில், நாடு முழுவதும் விளம்பர பலகைகள், கொடிகள் கட்டப்படுவது வழக்கமான ஒன்று. இதற்கு, எவ்வித அனுமதியும் தேவையில்லை. ஆனால், உ.பி.,யில் ஆட்சியிலுள்ள சமாஜ்வாதி அரசு, முரண்பட்ட அணுகுமுறையை பின்பற்றும் என்பதால், முன்னதாகவே அனுமதி பெற்று, எங்கள் கட்சியினர் விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். அம்பேத்கர் நினைவு இடத்தில் இருந்து, மூன்று கி.மீ., தூரத்திற்கு, அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், நேற்று முன்தினம் இரவு அகற்றப்பட்டுள்ளன. சமாஜ்வாதி அரசின் கட்டளைப்படி, அரசு அதிகாரிகள் செயல்பட்டு உள்ளனர். அரசு அதிகாரிகள் எப்படி செயல்படுகின்றனர் என்பதை கண்காணித்து வருகிறோம். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.
அதேபோல், சமாஜ்வாதி குண்டர்களுக்கும் சரியான பாடம் கற்பிப்போம். எங்கள் ஆட்சி காலத்தில், சிறு விவசாயிகளுக்கு, குத்தகைக்கு நிலம் வழங்கப்பட்டது. அவற்றை, சமாஜ்வாதி கட்சியினர் மற்றும் குண்டர்கள், அபகரித்து வருகின்றனர். எங்களுக்கும் காலம் வரும், அப்போது அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.கலவரம் இல்லை .எதிர்க்கட்சிகள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை, சமாஜ்வாதி அரசு, கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதிலும், பகுஜன் சமாஜை குறி வைத்து செயல்படுகிறது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எவ்வித மத கலவரமோ, பதற்றமோ ஏற்படவில்லை.
அயோத்தி பிரச்னை குறித்து தீர்ப்பு வந்தபோது கூட, நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால், மத்திய அரசு ஒத்துழைக்காத நிலையிலும், மாநில போலீஸ் படையை வைத்து கொண்டு நிலைமையை சமாளித்தோம். சமாஜ்வாதி அரசு பொறுப்பேற்று ஓராண்டு கூட ஆகவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட கலவரங்கள் நடந்துள்ளன. பெரும்பாலான நகரங்களில், பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துள்ளது. வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஊழலும் அது தொடர்பான விசாரணை தான் நடந்து கொண்டுள்ளது. இவ்வாறு, மாயாவதி கூறினார்.