Hamid Ansari proposes automatic suspension of disorderly members in Rajya Sabha | அமளியில் ஈடுபடும் எம்.பி.,க்களை, "சஸ்பெண்ட்' செய்யக்கூடாது: எதிர்க்கட்சிகள்| Dinamalar

அமளியில் ஈடுபடும் எம்.பி.,க்களை, "சஸ்பெண்ட்' செய்யக்கூடாது: எதிர்க்கட்சிகள்

Updated : ஏப் 22, 2013 | Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (18)
Advertisement
அமளியில் ஈடுபடும் எம்.பி.,க்களை, "சஸ்பெண்ட்' செய்யக்கூடாது: எதிர்க்கட்சிகள்

புதுடில்லி : பார்லிமென்டின், இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில், ராஜ்யசபா நிகழ்ச்சிகளை சுமூகமாக நடத்திச் செல்வது குறித்து விவாதிக்க, நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், எந்த விதமான ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை.

பார்லிமென்டின் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான, கடந்த மார்ச், 23ம் தேதி, ராஜ்யசபாவில், இலங்கை தமிழர் பிரச்னையை எழுப்பி, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது, மைக்குகள் உடைக்கப்பட்டதோடு, பேப்பர்களும் கிழித்து எறியப்பட்டன. எம்.பி.,க்களின் இந்தச் செயலால், சபையின் தலைவர், ஹமீது அன்சாரி மிகுந்த வருத்தம் அடைந்தார்.அதனால், இன்று துவங்கும், பார்லிமென்டின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில், ராஜ்யசபா நடவடிக்கைகளை, சுமூகமாக நடத்திச் செல்வது குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, நேற்று ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய, ஹமீது அன்சாரி கூறியதாவது:கடந்த கூட்டத் தொடரின் கடைசி நாளன்று, சபையில் நடந்த சம்பவங்கள், மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளன. சபையில், ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும், எம்.பி.,க்களை, உடனடியாக, "சஸ்பெண்ட்' செய்ய விதிமுறைகள் உள்ளன. இருந்தாலும், இந்த விதிமுறைகள், இதுவரை பின்பற்றப்படவில்லை. இனி வரும் நாட்களிலும், இந்த விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுவது தொடர்பாகவும், அத்துடன், சபை நடவடிக்கைகளை தொலைக்காட்சிகளில், தாமதமாக ஒளிபரப்புவது தொடர்பாகவும், கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும். எம்.பி.,க்கள் குறித்து, மக்கள் மத்தியில் ஒரு தவறான எண்ணம் உருவாவதை தடுக்க, இதை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, ஹமீது அன்சாரி கூறினார்.

இதையடுத்து பேசிய, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி, கூறியதாவது:
சபையின் மையப்பகுதிக்கு வந்து, அமளியில் ஈடுபடும் எம்.பி.,க்களின் பெயர்களை சொன்னாலே, அவர்களை, "சஸ்பெண்ட்' செய்யும் நடைமுறையை அமல்படுத்தினால், சபையில் பெரும்பான்மையாக இருக்கும் உறுப்பினர்கள், சிறுபான்மையாகி விடும் சூழ்நிலை உருவாகும். அந்த நேரத்தை, சர்ச்சைக்குரிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.அதேநேரத்தில், சபையில் உறுப்பினர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதில், எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை.இவ்வாறு, அருண்ஜெட்லி கூறினார்.

மம்தாவின் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த, டீரெக் ஓ பிரியன் கூறுகையில், ""சபை நடவடிக்கைகளை, தாமதமாக தொலைக்காட்சிகளில், ஒளிபரப்புவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது; அதனால், பிரச்னை தீர்ந்து விடாது. சபையில், நிலைமை மோசமாக சென்றால், சபை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதையும், படம் பிடிப்பதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி பேசுகையில், ""ராஜ்யசபா நிகழ்ச்சிகளை, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதை நிறுத்துவது என்பதே கூடாது. சபையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது,'' என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:சபை நடவடிக்கைகளில், அடிக்கடி இடையூறு ஏற்படுவதற்கு, முக்கியமான பிரச்னைகளில், அரசு எந்த விதமான பதிலும் அளிக்காமல் இருப்பதே காரணம். நிலக்கரி ஊழல் விவகாரத்தில், சி.பி.ஐ., அறிக்கையை திருத்தம் செய்ய, மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் முற்பட்ட விவகாரம், இன்று துவங்கும் கூட்டத் தொடரில் எழுப்பப்படலாம். இந்த விவகாரம் தொடர்பாக, அரசு அறிக்கை தாக்கல் செய்து விட்டால் பிரச்னை இல்லை. அது நடக்கவில்லை எனில், உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத்தான் செய்வர். சபையில் எவ்வளவு நேரம் அமளி நீடிக்கிறது என்பது, அரசு பொறுப்புடன் செயல்படுவதில் தான் இருக்கிறது.இவ்வாறு, சீதாராம் யெச்சூரி கூறினார்.

அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் பேசுகையில், ""எதிர்க்கட்சிகளின் கோரிக்கை விஷயத்தில், அரசு அக்கறையற்ற வகையில் செயல்பட்டால், சபையில் அமளி நிகழத்தான் செய்யும். இதற்காக, எதிர்க்கட்சிகளை குறை சொல்லக்கூடாது,'' என்றார்.

சிவசேனா எம்.பி., சஞ்சய் ரவுத் கூறுகையில், ""சபை நிகழ்ச்சிகளை உடனே ஒளிபரப்பாமல், தாமதமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது சரியல்ல. இது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதாகவும், மீடியாக்களையும் கட்டுப்படுத்துவதாகும்,'' என்றார்.

ராஜ்யசபா தலைவர் அன்சாரியின் கருத்துக்கு, இப்படி பல்வேறு கட்சித் தலைவர்களும், ஆட்சேபம் தெரிவித்ததால், நேற்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில், எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Saminathan - mumbai,இந்தியா
22-ஏப்-201314:15:15 IST Report Abuse
R.Saminathan இந்த சேதியில் எம்.பி.திரு.மைத்ரேயன் அவர்களின் கருத்து சொன்னது அ.தி.மு.க. அரசுக்கே பெரும் அவமானத்தை காண்பிக்கிறது ,,அ.தி.மு.க. அரசின் சட்டசபையில் நடக்கும் கூட்டத்தை சற்று நினைத்து பார்த்தால் காமெடியாக இருக்கிறது,..
Rate this:
Share this comment
Cancel
நாதன்.K.R.வாரியார் - சென்னை,இந்தியா
22-ஏப்-201313:26:57 IST Report Abuse
நாதன்.K.R.வாரியார் ஏ என்னப்பா சபைய நடத்துறீங்க? உங்களுக்கு சபைய நடத்த தெரியலன்னா எங்க தமிழ்நாட்டுக்கு வாங்க. இங்கே மேக்கப் ராணி ஜெயாவும், அவரது அடிவருடி தனபாலும் சபைய எப்படி நடத்துவது பற்றி சொல்லிகொடுப்பார்கள். அதை கற்றுக்கொண்டு போய் நடத்துங்கள். உங்கள் ஊழலை எதிர்த்து கோஷம் போட ஆள் இருக்கமாட்டார்கள். அப்படியே கோஷம் போட்டாலும் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து விடலாம்.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
22-ஏப்-201309:45:55 IST Report Abuse
pattikkaattaan ராஜ்யசபா தலைவர், ஹமீது அன்சாரியை சிறிது காலம் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வந்து ட்ரைனிங் எடுக்கசொல்லுங்கள் ... அம்மா சட்டமன்றம் நடத்துவதை பார்த்து தெரிந்துகொள்ளட்டும் ..
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
22-ஏப்-201309:22:35 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இதுக்கெல்லாம் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட வேண்டிய அவசியமே இல்லை. செல்வி ஜெயாவிடம் ஒரே ஒரு போன் கால் போட்டு கேட்டாலே போதும்..எப்படி சபைக்காவலர்களை விட்டு எதிர்கட்சிகளை பந்தாடுவது என்று..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201309:20:10 IST Report Abuse
Srinivasan Kannaiya அநாகரீகமாக நடந்து கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகைகள் இருந்த போதும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றீர்கள். மக்களின் வரிபணத்தில் MP ஆகிவிட்டு லஞ்ச லாவன்யங்களில் மூழ்கி,ஆடம்பர வாழ்க்கையில் திளைத்து மக்களின் தேவைகளை மன்றத்தில் எடுத்து வைப்பதை விட்டுவிட்டு சுயலாபத்தை பார்க்கும் இவர்களை எதாவுது செய்யுங்களேன்
Rate this:
Share this comment
Cancel
Francis Raymond - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஏப்-201309:05:16 IST Report Abuse
Francis Raymond முதலில் இந்த எம் பி, எம் எல் ஏ -களுக்கு தகுதி நிர்ணயம் பண்ணுங்கள், மொழி தெரியாதவன், பேசதெரியாதவன், எழுத படிக்க தெரியாதவன் ரௌடிகள் எல்லாம் மந்திரியாகவும் தலைவனாகவும் இருந்தால் இப்படிப்பட்ட அநாகரீக செயல்கள் நடக்கத்தான் செய்யும், அன்று காமராஜர் போன்றோர் இருந்தார் என்று சப்பை காரணம் காட்டி ஒதுக்காதீர்கள் காரணம் அவர்களின் கால் தூசிக்கு கூட நாகரீகம் தெரியாமல் தனது அறிவை வளர்க்காமல் உடலையும், பணத்தையும் வளர்க்கிறார்கள். இந்தியாவில் மட்டும் தான் இப்படிப்பட்ட ஈன நிகழ்ச்சி நடக்கிறது. எனவே காலத்துக்கு தகுந்த மாதிரி தகுதியானவர்களை தேர்வு செய்து ஒரு நல்ல ஒளிமயமான படித்த பண்புள்ள சமுதாயத்தை கட்டிகாக்க உடனே வரைமுறை கொண்டு வாருங்கள் இல்லை என்றால் நம் நாடு மீண்டும் மீண்டும் சமுதாய வளர்ச்சியில் பின்தங்கியே இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Indian - Chennai,இந்தியா
22-ஏப்-201308:54:46 IST Report Abuse
Indian நாடாளுமன்றத்தை முடக்குபவர்களை தண்டிக்க வேண்டும், மற்றும் ராஜ்யசபா நிகழ்ச்சிகளை, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதை தேசிய அவமானமாக மாற்ற படுகிறது. edit செய்து ஒளிபரப்பலாம், கேவலமாக மற்றும் நெருடலாக உள்ளது பல சம்பவங்கள்
Rate this:
Share this comment
Cancel
Indian - Chennai,இந்தியா
22-ஏப்-201308:51:20 IST Report Abuse
Indian ""எதிர்க்கட்சிகளின் கோரிக்கை விஷயத்தில், அரசு அக்கறையற்ற வகையில் செயல்பட்டால், சபையில் அமளி நிகழத்தான் செய்யும். இதற்காக, எதிர்க்கட்சிகளை குறை சொல்லக்கூடாது" இதை சொல்ல ஆதிமுகவிற்கு என்ன தகுதி உள்ளது ? தமிழ் நாடுக்கு என்ன சர்வதிகார அந்தஸ்து கொடுக்க பட்டுள்ளதா? இங்கே (சட்ட சபையில்) பேச கூட சந்தர்ப்பம் கொடுப்பதில்லை என்று தினமும் செய்திகளில் பார்க்க முடிகிறது ஆனால் பாராளுமன்றத்தில் பேச சந்தர்ப்பம் கொடுத்தாலும் அமளியில் ஈடுபடுவது எவ்வாறு சரியாக இருக்க முடியும் ?ஒரு பத்திரிகை விளம்பரத்தில் நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை டிவி விளம்பரமாக போடும் பொழுது அதை மெச்சுகிறோம் , ஆனால் அமளியை குறை கூறினால் அது ஒரு ஜனநாயக செயல் படு என்று சொல்லுகிறீர்கள் அது எவ்வாறு நியாயமான கருத்தாக இருக்க முடியும்?
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
22-ஏப்-201308:35:17 IST Report Abuse
kumaresan.m " தற்பொழுதுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளின் குல தொழிலே இது தானே ....உடனே விடவேண்டும் என்று சொல்வது எப்படி சாத்தியம்? ....பழக்க தோஷம் பாஸ்.... அவ்வளவு சீக்கிரம் விட முடியுமா ?
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
22-ஏப்-201308:18:30 IST Report Abuse
K.Balasubramanian வேலையே செய்யாத / தவறாக செய்யும் மந்திரிகளை தண்டிக்க புதிய சட்டங்கள் வருமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை