புதுடில்லி ; மருந்துகளின் வீரியம் மற்றும் செயல்படும் திறன் குறித்து, இந்தியாவில் நடத்தப்படும் மருந்து பரிசோதனையின் எண்ணிக்கை, கணிசமான அளவில் குறைந்துள்ளது. மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் கெடுபிடிகளை அடுத்து, முந்தைய ஆண்டுகளை விட மிகக் குறைவான அளவிலேயே, பரிசோதனைகள் நடந்துள்ளன.
வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டின் சில நிறுவனங்கள் கண்டுபிடிக்கும், புதிய மாத்திரை, ஊசி மருந்து, தடுப்பு மருந்து போன்றவற்றின், வீரியம் மற்றும் செயல்திறனை ஆராய்வதற்கான, மருந்து பரிசோதனை ஆய்வு, இந்தியாவில் நடத்தப்படுகின்றன.இந்த சோதனை முயற்சியின் போது, உடலுக்கு மருந்து ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், அதிக மரணங்கள் நிகழ்ந்தன.அத்தகைய மரணங்களின் போது, பெயரளவிற்கு இழப்பீடு வழங்கப்பட்டன. இதை தாமதமாக அறிந்த மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும், மருந்து பரிசோதனைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தன. அதையடுத்து, புதிய கட்டுப்பாடுகள், இந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்தன.
பரிசோதனையின் போது, ஆய்வுக்கு உட்பட்டவர் இறக்க நேரிட்டால், அவருக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை முடிவு செய்வதற்காக, சுதந்திரமான அமைப்பு அமைக்கப்பட்டது. மேலும், ஒரு சில குறிப்பிட்ட ஆய்வுகளை, இந்தியாவில் நடத்தக் கூடாது எனவும் கெடுபிடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால், மருந்து பரிசோதனைகள், இந்த ஆண்டில் மிகவும் குறைந்து விட்டன. அது மட்டுமின்றி, இத்தகைய ஆய்வுகளுக்கு நிதியுதவி வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டன. இதனால், புதிய மருந்துகள் கண்டுபிடிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அப்பாவி மக்களின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஜனவரி வரை, ஆறு பரிசோதனைகள் மட்டுமே நடந்துள்ளன. அவையும், முந்தைய அனுமதியின் படி நடத்தப்பட்டவை. இந்த ஆண்டில், இப்போது வரை, 12 அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள, அனுமதி கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 70 ஆக உள்ளது.கடந்த, 2008ம் ஆண்டில், 65 அனுமதியும், 2009ல், 391 அனுமதியும், 2011ல், 500 அனுமதியும், 2012ல், 262 அனுமதிகளும், மருந்து பரிசோதனைக்கு வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.