பெங்களூரு:""முதல்வர்
பதவியில் நீடிக்க வைப்பதாக கூறி, அத்வானியின் குடும்ப உறுப்பினர்கள்
உட்பட, பெரும்பாலான, பா.ஜ., தலைவர்கள் எடியூரப்பாவிடம் கோடிக்கணக்கான பணம்
பெற்றுள்ளனர்,'' என, கர்நாடக ஜனதா கட்சியான - கே.ஜே.பி.,யின்
பிரச்சாரக்குழு தலைவர், தனஞ்செயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.கர்நாடக
மாநிலம், ஹாவேரியில் நடந்த, பா.ஜ., தேர்தல் பிரச்சாரத்தின் போது, பா.ஜ.,
மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது ஊழல்
குற்றச்சாட்டு சுமத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,
பெங்களூரில், கே.ஜே.பி., பிரச்சார குழு தலைவர் தனஞ்செயகுமார் நிருபர்களிடம்
கூறியதாவது:சட்ட விரோத சுரங்க தொழில் தொடர்பாக, லோக் ஆயுக்தாவின் அறிக்கை
வெளியான போது, எடியூரப்பாவை முதல்வராக நீடிக்க வைக்க, பா.ஜ., மூத்த தலைவர்
அத்வானியின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட, பெரும்பாலான பா.ஜ., தேசிய
தலைவர்கள், கோடிக்கணக்கான ரூபாயை பலவந்தமாக பெற்று கொண்டனர்.
இதற்கான
ஆவணங்களும் உள்ளன. தேவை என்றால், இன்னும் ஒரு சில நாட்களில், ஆவணங்களை
வெளியிட தயாராக உள்ளேன்.சட்ட விரோத சுரங்க தொழில் அறிக்கையில், எடியூரப்பா
பெயர் இருந்ததால், அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக மிரட்டி பணம் பெற்றனர்.
நெருக்கடியான சூழ்நிலையில், எடியூரப்பாவும் பணம் கொடுக்க வேண்டியதாகி
விட்டது.தேசிய தலைவர்கள் பணம் பெற்று கொள்ளவில்லை என்று கூறி தப்பிவிட
முடியாது. ஊழல் தொடர்பாக, மிக நீளமாக பேசும் அத்வானியின் குடும்ப
உறுப்பினர்கள், ஊழலில் தொடர்பு கொண்டுள்ளனர். இதுகுறித்து யாருமே ஏன் வாய்
திறப்பதில்லை. அத்வானி குடும்ப உறுப்பினர்கள், பல தலைவர்களிடமிருந்து பணம்
பெற்றுள்ளனர். எனவே, ஊழல் தொடர்பாக பேசும் தகுதி அத்வானிக்கு கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.