மும்பை : "அனுமதியின்றி தற்காலிக தொழிலாளர்களை நியமித்த, ரயில்வே மின் பொறியாளருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு, சம்பள உயர்வை நிறுத்தி வைத்த நடவடிக்கை சரியே!' என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேற்கு ரயில்வேயில், பரோடா - கோத்ரா பிரிவில், மண்டல மின் பொறியாளராக பணியாற்றிய ஆர்.சி.தாகூர், தற்போது மும்பையில் பணியாற்றி வருகிறார். இவர், பரோடா - கோத்ரா பிரிவில் பணியாற்றிய போது, கோத்ரா - ஆனந்த் இடையே மின் மயமாக்கும் பணி, 1981 முதல், 1983 ஏப்ரல் வரை நடந்தது. இத்திட்ட பணிக்காக, தற்காலிக தொழிலாளர்கள், 65 பேரை தாகூர் நியமித்தார். பொதுவாக ரயில்வேயில், தற்காலிக தொழிலாளர்களை நியமிப்பதற்கு தடை உள்ளது. இது தொடர்பாக, ரயில்வே வாரியம், 1981ல் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. இந்நிலையில், தாகூர், தற்காலிக தொழிலாளர்களை நியமித்ததற்கு, இலாகா பூர்வ விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில், தாகூருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு, சம்பள உயர்வை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த உத்தரவு சரியே என, மத்திய நிர்வாக தீர்ப்பாயமும், 1999, நவம்பர், 2ல் தீர்ப்பளித்தது.
மத்திய நிர்வாக தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்யக்கோரி, டில்லி ஐகோர்ட்டில் தாகூர் மனுதாக்கல் செய்தார்; அதில் கூறியிருந்ததாவது:
சில அதிகாரிகள், தற்காலிக தொழிலாளர்களை பல்வேறு பணிகளுக்கு நியமித்து உள்ளனர்; அதை பின்பற்றியே நானும் நியமித்தேன். மேலும், ரயில்வே வாரியம் அனுப்பிய சுற்றறிக்கை பற்றி எனக்கு தெரியாது. ரயில்வேயின் நலன் கருதி, தற்காலிக தொழிலாளர்களை நியமித்தை, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ஏற்க வேண்டும். என் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மனுவை விசாரித்த,மும்பை ஐகோர்ட் நீதிபதிகள், எப்.எம்.ரீஸ் மற்றும் வி.எம்.கான்டே ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' தங்கள் உத்தரவில் கூறியதாவது: ரயில்வே வாரியத்தின் தடையை மீறி, தற்காலிக தொழிலாளர்களை நியமித்ததை, மனுதாரர் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், இந்த விஷயத்தில், இலாகா பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை சரியாக உள்ளதாக உணர்கிறோம். மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அளித்த உத்தரவு சரியானதே. எனவே, மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.