காவிரி விவகாரம் நீர்வளத்துறை செயலர் தலைமையில் கண்காணிப்பு குழு | Dinamalar

காவிரி விவகாரம் நீர்வளத்துறை செயலர் தலைமையில் கண்காணிப்பு குழு

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

புதுடில்லி:காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த, மத்திய நீர்வள அமைச்சக செயலர் தலைமையில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் அடங்கிய, தற்காலிக கண்காணிப்பு குழுவை அமைக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில், கர்நாடகா மற்றும் தமிழக அரசுகளுக்கு இடையே, பிரச்னை இருந்து வருகிறது. 2007ல், ஒவ்வொரு மாநிலத்துக்கும், காவிரியிலிருந்து, எவ்வளவு நீர் திறந்து விடப்பட வேண்டும் என்பது பற்றி, காவிரி நடுவர் மன்றம், இறுதித் தீர்ப்பு அளித்தது.
தமிழக அரசு, வழக்கு தொடர்ந்ததை அடுத்து, "காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை, உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
தமிழக அரசு மனு:இதையடுத்து, நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு, சமீபத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்பின், தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது:காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளித்த போது, அந்தத் தீர்ப்பை அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டியை அமைக்க வேண்டும் என, பரிந்துரைத்திருந்தது.
தமிழகத்தில், வரும், ஜூன், 1 முதல், விவசாய பணிகள் துவங்கவுள்ளன. எனவே, நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவற்றை அமைக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
தமிழக அரசின் மனு, கடந்த வாரம், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், "காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவை, எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து, மத்திய அரசு, 10ம் தேதிக்குள் (நேற்று) தெரிவிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள், ஆர்.எம்.லோதா, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சித்தார்த் லூத்ரா, கூறியதாவது:காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டது. அதில், கூறப்பட்டு உள்ள விஷயங்களை நடைமுறைப்படுத்த, தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவற்றை அமைப்பது குறித்து, அரசு ஆய்வு செய்து வருகிறது. அதுவரை, தற்காலிக ஏற்பாடாக ஒரு குழுவை அமைத்து, நீர் திறப்பு விவகாரங்களை கையாளலாம்.இவ்வாறு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
"கோர்ட்டை அணுகலாம்'இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை, நீர் திறப்பு உள்ளிட்ட விவகாரங்களை கையாளுவதற்காக, தற்காலிக கண்காணிப்பு குழு அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய நீர்வள அமைச்சக செயலர், இந்த குழுவின் தலைவராக இருப்பார். இவர் தவிர, தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைமைச் செயலர்களும், இந்த குழுவில் இடம் பெற்றிருப்பர்.
இந்த குழுவினர், காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பை, நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை தற்காலிகமாக மேற்கொள்வர். இது தொடர்பாக, ஏதாவது ஆட்சேபனை இருந்தால், சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம்.காவிரி நீர் விவகாரம் குறித்து, பல தரப்பிலும், கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு குழுவின் நடவடிக்கைகள், வழக்கு தொடர்ந்துள்ளவர்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை