சுவையை உணர பிரிவும் சேர்வும்| Dinamalar

சுவையை உணர பிரிவும் சேர்வும்

Added : மே 28, 2013
Advertisement

மெல்பேர்ன்: எப்பொழுதும் போல் ஒரு நாள் இரவு மின்னஞ்சலை பார்த்துகொண்டிருந்தபோது, "நாம் சந்தித்து 25 வருடம் ஆகிறது. மீண்டும் சந்திக்கலாம்" என்று ஒரு மின்னஞ்சல். நான் சென்னையில் உள்ள ஐசிஎப் வெள்ளிவிழா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று 25 வருடம் முடிகிறது. அதன் எதிரொலியே எனக்கு வந்த மின்னஞ்சல். எனக்கு முதலில் தோன்றியது "வயது ஆகிவிட்டது" என்பது தான். ஆனால் அதைப் பற்றி நான் எப்போதும் கவலை பட்டது கிடையாது. கவலைப்பட்டுதான் என்ன ஆகப்போகிறது?


25 வருடம் பின்னோக்கி என் பள்ளி பருவத்து நாட்களில் அமிழ்ந்தேன். நண்பர்களும், புத்தகமுமே வாழ்க்கை என்று இருந்த நாட்கள் அவை. பசுமை நிறைந்த நினைவுகளை, அனுபவித்த கோபதாபங்களை என்று நினைத்தாலும் இனிக்கும், ஆனந்தப்படவைக்கும், ஏன் சற்று வெட்கப் படவும் வைக்கும். அந்த நினைவுகளுக்கு என்றும் வயதாவதில்லை. காலத்தின் வடுக்கள் அதன் மேல் விழுவதில்லை. காலம் முழுவதும் தளிர் இலையாகவே வாழ்ந்திருக்கும் நினைவுகள் எனக்குள்ளேயே பசுமையாகவே இருந்து ஆறுதலைத் தருகிறது. இது எனக்குமட்டும் தானா? “இல்லை இல்லை.. இந்த உணர்வு எங்களுக்கும் இருக்கிறது வா மீண்டும் சந்திப்போம்”, என்றது அந்த மின்னஞ்சல்.


அனைவரையும் மீண்டும் சந்திப்பது என்று முடிவு செய்து மெல்பொர்னிலிருந்து சென்னை பயணித்தேன். 30 - 40 பேர் வருவார்கள் என்று கணித்திருந்தார்கள். முதல் நாள் பலவாறு மனம் யோசிக்கத் தொடங்கியது. அனைவரும் வருவார்களா? அல்லது காலத்தின் ஓட்டத்தில் வரமுடியாமல் போகுமோ? இப்போது எப்படி இருப்பார்கள், அடையாளம் தெரியுமா என்ற என் கேள்விகள் அனைத்திற்கும் பதில் இதோ: அனைவரும் வந்திருந்தார்கள், சிறிது முதிர்ச்சியுடன் அப்படியே இருந்தார்கள். ஏறத்தாழ அனைவரையும் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. சந்தித்த சிறிது நேரத்திலேயே பதின்ம வயது நினைவுகளும், துள்ளலும், இளமையும் மனதில் திரும்பிவிட்டது. எல்லா நினைவுகளையும் அசை போட்டு பகிர்ந்துகொண்டு, சிரித்து உரையாடி பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்.


பள்ளிப் பருவத்து நினைவுகளும், 25 வருடத்திற்கு பிறகு சந்தித்த நாளின் சம்பவங்களும், விமான பயணத்தில் எனக்கு துணையாக வர, மெல்போர்ன் வந்து இறங்கினேன். இரண்டு வாரப் பிரிவிற்குப் பின் என் கணவரையும், குழந்தைகளையும் பார்த்து சந்தோஷித்தேன். அவர்களுடைய இரண்டு வாரக் கதைகளையும் கேட்டு ரசித்தேன். ஒவ்வொரு பிரிவும், சேர்வும் நம் வாழ்க்கையை, அதன் சுவையை மேலும் உணர செய்கிறது. அடுத்த சேர்விற்காக காத்துகொண்டிருக்கிறேன்.


- மெல்பேர்னிலிருந்து சாந்தி சிவக்குமார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை