வறட்சி நிவாரண பட்டியலில் விடுபட்டவர்கள் தொகை பெற... வாய்ப்பில்லை தாலுகாக்களில் வருவாய் தீர்வாயம் முடிக்கப்பட்டதால் சிக்கல்| Dinamalar

வறட்சி நிவாரண பட்டியலில் விடுபட்டவர்கள் தொகை பெற... வாய்ப்பில்லை தாலுகாக்களில் வருவாய் தீர்வாயம் முடிக்கப்பட்டதால் சிக்கல்

Added : ஜூன் 10, 2013

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் நிவாரண பட்டியலில் இடம்பெறாத விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வருவாய் தீர்வாயம் கணக்கு முடிக்கப்பட்டதால் நிவாரணம் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில், வருவாய் கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட பயிர்கள் மட்டுமேகணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சில பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் குறித்து வருவாய் கணக்குகளில் முறையாக பதிவுசெய்யவில்லை.வழக்கமாக கடந்த ஆண்டு உள்ளதையே இந்த ஆண்டும் பதிவு செய்வது மற்றும் சில விவசாயிகள் பயிரிட்டபோதும், வருவாய் கணக்குகளில் பதிவு செய்யாதது ஆகியவற்றை வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஆகியோர் செய்ததால், தற்போது விவசாயிகள் பலர் வறட்சி நிவாரணம் பெற முடியாதநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வருவாய் கணக்குகளில் உள்ளவர்கள் மட்டுமே தற்போது வறட்சி நிவாரணம் பெற்று வருகின்றனர். உண்மையிலேயே பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் தங்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்ககோரி தற்போது கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் வேளாண்மைத்துறையினரிடம் மனுகொடுத்து வருகின்றனர்.இந்த மனுக்கள் வி.ஏ. ஓ.,க்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. இருந்தபோதும், வருவாய் கணக்கில் இருந்தால் தான் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்ற நிலை உள்ளதால், புதிதாக கணக்கில் ஏற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் கடந்த மாதம் தான் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜாமபந்தி) நடந்தது.இதில் வருவாய் கணக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. தற்போது இந்த கணக்குகளில் திருத்தம் செய்து விடுபட்ட விவசாயிகள் பயிர்கள் செய்ததாக புதிதாக பதிவு செய்ய முடியாது. வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""மத்திய அரசு வறட்சி நிவாரணம் தமிழகத்திற்கு வழ ங்கும் பட்சத்தில், மாநில அரசு மாவட்ட வாரியாக குறைந்த தொகையை ஒதுக்கும். அப்போது மாவட்ட நிர்வாகம் அமைக்கும் குழுவின் நேரடி ஆய்வில் பயிர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தால், விடுபட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்க வாய்ப்புள்ளது. இல்லாத பட்சத்தில் வறட்சி நிவாரண தொகையை மாநில அரசு மூலம் எதிர்பார்ப்பது இயலாத ஒன்று,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X