கேதார்நாத் சென்ற பெற்றோர் திரும்பாததால் வேதனையில் தற்கொலை செய்த ம.பி., பெண்| Dinamalar

கேதார்நாத் சென்ற பெற்றோர் திரும்பாததால் வேதனையில் தற்கொலை செய்த ம.பி., பெண்

Added : ஜூன் 29, 2013
Advertisement

குவாலியர்: கேதார்நாத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற, தன் பெற்றோரை கண்டுபிடிக்க முடியாததால், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண், தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய பிரதேச மாநிலம், குவாலியரை சேர்ந்தவர், மம்தா திரிபாதி, 35. இவரின் தந்தை நாதுராம் பிரசார், தாயார் கமலா தேவி, உறவினர் சதீஷ் ஆகியோர், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, புண்ணியதலமான கேதார்நாத்துக்கு, இம்மாதம், 5ம் தேதி, ஆன்மிக சுற்றுலா சென்றனர். கடந்த, 15ம் தேதி, மம்தாவின் பெற்றோர், அவருடன், கடைசியாக போனில் பேசினர். அப்போது, ஆன்மிக சுற்றுலா, மனதுக்கு நிம்மதியை தருவதாகவும், ஒரு சில நாட்களில், ஊர் திரும்பவுள்ளதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.


வரலாறு காணாத...:

இந்நிலையில், கடந்த, 16ம் தேதி, உத்தரகண்ட்டில், வரலாறு காணாத பேய் மழை பெய்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், கேதார்நாத் பகுதி, கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு சென்றிருந்த பக்தர்கள் பலர், வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த மம்தா, கலக்கம் அடைந்தார். தன் பெற்றோரை கண்டுபிடிப்பதற்காக, தன் கணவரை அனுப்பி வைத்தார். அவரால், கேதார்நாத்துக்கு செல்ல முடியவில்லை. வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, 15 நாட்களாகியும், தன் பெற்றோரை பற்றிய தகவல் கிடைக்காததால், மம்தா, பீதியடைந்தார். நேற்று முன்தினம், தன் குழந்தைகளுக்கு, உணவு சமைத்து, பரிமாறி விட்டு, தன் அறைக்குள் சென்று, கதவை தாழிட்டார். வெகு நேரமாகியும், அவர் வெளியில் வராததால், அருகில் இருந்தவர்கள், கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, மம்தா, படுக்கை அறையில், பிணமாக கிடந்தார். தன் பெற்றோரை பறிகொடுத்த சோகத்தில், அவர், தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம், மத்திய பிரதேசத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குழந்தைகளுக்கு உதவ தயார்:

உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கில், ஏராளமானோர் இறந்துள்ளனர். பலகுழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோரை பற்றிய தகவல் கிடைக்காததால், அவர்கள், ராணுவத்தினர் அமைத்துள்ள, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த, உ.பி., மாநிலம், பிருந்தாவனத்தில் உள்ள, பரம் சக்தி பீடத்தின் நிறுவனரும், சமூக சேவகருமான, சாத்வி ரிதாம்பரா, உத்தரகண்ட் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்: வெள்ளப் பெருக்கில், பல குழந்தைகள், தங்களின் பெற்றோரை இழந்து தவிக்கும் தகவல் அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். அந்த குழந்தைகளை தத்தெடுத்து, எங்கள் பீடத்தில் வளர்க்க தயாராக உள்ளோம். இதற்கு, எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அந்த கடித்தில், ரிதாம்பரா எழுதியுள்ளார்.


மதங்களை கடந்த மனித நேயம்:

உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில், ராணுவத்தினருடன், பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர். உத்தரகண்டில், ஸ்ரீநகர் என்ற மலைப் பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்டு, அவர்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்கும் பணியில், கிறிஸ்தவ தன்னார்வ அமைப்புகள் முழு வீச்சில் களமிறங்கியுள்ளன. முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களும், தற்காலிக நிவாரண முகாம்களை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை