கோவையில் நில மோசடி: வீட்டு வசதி வாரியத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு: 6 அதிகாரிகள் "சஸ்பெண்ட்': நிலத்தை மீட்காமல் மெத்தனம்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள்  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவையில் வீட்டு வசதி வாரிய நிலத்தை மோசடியாக விற்பனை செய்து, வாரியத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக, இதுவரை ஆறு அதிகாரிகள் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்; ஆனால், சம்மந்தப்பட்ட நிலத்தை மீட்காமல் வாரியம் மெத்தனம் காட்டி வருகிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், கோவை கணபதி பகுதியில் பல நூறு ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, வெவ்வேறு திட்டங்களில் வீடு மற்றும் மனையிடங்களாக விற்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 99 சென்ட் இடத்தை, வாரியத்தின் முறையான அனுமதியின்றி, கோவை கோட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் முறைகேடாக விற்பனை செய்துள்ளது, கடந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்கால அபிவிருத்திக்கான 50 சென்ட் இடம், 2011 மே 27லும், 49 சென்ட் இடம், 2011 நவ.,30லும் பத்திரப்பதிவு செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.அன்றைய சந்தை மதிப்பின்படி, இதனால், வாரியத்துக்கு நான்கு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. தொடர்ந்து, கோவை செயற்பொறியாளராக பணியாற்றிய ராமமூர்த்தி உட்பட வாரிய அதிகாரிகள் நான்கு பேர் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இவர்கள் மீது காவல்துறையிடம் புகார் தரப்பட்டு, வழக்கும் பதிவு (2/2013) செய்யப்பட்டு, குற்றப்பிரிவு சார்பில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த மோசடியில் தொடர்புடைய சில அலுவலர்கள் தப்பி விட்டதாகவும், முறைகேடாக விற்கப்பட்ட இடத்தை மீட்பதற்கும் வாரியம் நடவடிக்கை எடுக்கவே இல்லை என்ற புகாரும் கிளம்பியுள்ளது.

வாரியத்திலுள்ள ஒரு இளநிலைப் பொறியாளரும், உதவிப்பொறியாளரும், இந்த மோசடிக்கு புரோக்கராக செயல்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பெருமாள் என்பவருடன் சேர்ந்து, இதற்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் வாரிய வட்டாரங்கள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கு ஆதாரமாக, இவர்கள் காண்பிக்கும் ஆவணங்கள், வாரிய மேலிடத்தின் மவுனம் குறித்த பல்வேறு சந்தேகங்களையும் கிளப்புகின்றன.கணபதி திட்டப்பகுதியில், எதிர்கால அபிவிருத்திக்கான மனைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 50 சென்ட் இடம், எச்.ஐ.ஜி.,மனை 1 என மாற்றப்பட்டு, சின்னச்சாமி என்பவருக்கு 33 லட்ச ரூபாய்க்கு

விற்கப்பட்டுள்ளது; இந்த இடத்தை இவ்வளவு குறைவான தொகைக்கு கிரயம் செய்து கொடுத்ததற்கு ஈடாக, கமிஷனாக கோடி ரூபாய் வரை, வாரிய அதிகாரிகளுக்கும், புரோக்கருக்கும் கை மாறியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இடம், தற்போது திருப்பூரைச் சேர்ந்த "சிட்டி டெவலப்பர்ஸ்' என்ற நிறுவனத்துக்கு பொது அதிகார ஆவணம் மூலமாக (பவர் ஆப் அட்டர்னி) கை மாற்றப்பட்டு, அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டும் முயற்சி நடந்து வருகிறது.இதே பகுதியில், பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட 49 சென்ட் இடம், எச்.ஐ.ஜி.,2 என்ற மனையாக மாற்றப்பட்டு, துரைக்கண்ணன் என்பவரின் மனைவி சாரதா என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துரைக்கண்ணன், கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இந்த இடம், 33 லட்ச ரூபாய்க்கு சாராதாவுக்கு கிரயம் செய்து தரப்பட்டுள்ளது; இதற்கான பத்திரப்பதிவு நடந்த அதே நாளில், இந்த 49 சென்ட் இடத்தில் 15 சென்ட் இடம், பெருமாளின் பெயருக்கு 27 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு, அதாவது வழிகாட்டி மதிப்புக்கு விற்கப்பட்டு, பத்திரப்பதிவு நடந்துள்ளது.

இதிலிருந்தே, இந்த நிலம் விற்றதில் எவ்வளவு மோசடி நடந்துள்ளது என்பது தெரியவருகிறது. 49 சென்ட் இடத்தைமிகக்குறைந்த விலையில், வீட்டு வசதி வாரியத்திடம் வாங்கிக் கொடுத்ததற்காக, புரோக்கர் பெருமாள், இளநிலைப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோருக்கு கமிஷனை பணமாக தருவதற்குப் பதிலாக, இந்த 15 சென்ட் இடம், பெருமாள் பெயரில் கிரயம் செய்து தரப்பட்டுள்ளதா என்கிற ரீதியில் விசாரணை நடந்து வருகிறது.இந்த நிலத்தை மீண்டும் மீட்டு, மறுஏலம் விட்டால் வாரியத்துக்கு 7 கோடி ரூபாய் வருவாய் கிடைக்குமென்கின்றனர் வாரிய அலுவலர்கள். சென்னை ஜெ.ஜெ., நகரில், இதேபோல மோசடியாக விற்கப்பட்ட இடம், மீண்டும் வாரியத்தால் மீட்கப்பட்டதை இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலத்தையும் மீட்டு, மறுஏலம் விட வேண்டுமென்பதே, வாரியத்திலுள்ள நேர்மையான அலுவலர்கள் மற்றும் ஒதுக்கீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனாலும், நிலத்தை மீட்பதற்கு சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்ளாமல் வாரிய மேலிடம் இழுத்தடித்து வருவது, பலத்த சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
கணபதி திட்டப்பகுதியிலுள்ள வ.உ.சி., நகர் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், ""நாங்கள் மனை வாங்கி, 22 ஆண்டுகளாக எங்களுக்கு நிலத்துக்கான மதிப்பு

Advertisement

இறுதி செய்யப்படவில்லை; வழக்கு இருப்பதாகக் காரணம் கூறுகின்றனர். அதே வழக்குக்குட்பட்ட பகுதியில்தான், ஒரு ஏக்கர் நிலத்தை சதுரஅடி 151 ரூபாய் 61 பைசா என விலை நிர்ணயித்து, உடனடியாக கிரயப்பத்திரமும் கொடுத்துள்ளனர். எங்களுக்கும் அதே விலையில், மனையிடத்தை கிரயம் செய்து தர வேண்டுமென்பதுதான் எங்களது கோரிக்கை; அதிகாரிகளை "சஸ்பெண்ட்' செய்வதால், எங்களுக்கு பயன் ஒன்றுமில்லை' என்றனர்.இதற்கிடையில், நிலத்தை மோசடியாக விற்பனை செய்வதற்கு உதவியாக, எப்.எம்.பி., எனப்படும் இட வரைபடத்தை போலியாக தயாரித்ததும், அந்த இடத்துக்கு தற்காலிக மின் இணைப்பு கொடுப்பதற்காக செயற்பொறியாளர் ராமமூர்த்தியின் கையெழுத்தை போலியாகப் போட்டிருப்பதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. கடைசி நிலவரமாக, நிலமோசடி தொடர்பாக உதவி பொறியாளர் ராஜேந்திரன், இளநிலை பொறியாளர் சம்பத் ஆகியோர், 27ம் தேதி "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இதே வேகத்தில், இடத்தையும் மீட்டால், வாரியத்தின் கவுரவம் காப்பாற்றப்படும்; இழப்பும் ஈடு செய்யப்படும்.

இடத்தை மீட்போம்: செயற்பொறியாளர்:

கோவை வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் சண்முகத்திடம் கேட்டபோது, ""அந்த இடத்தை மீண்டும் வாரியம் வசம் எடுப்பதற்கான எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறோம். முதலில், பத்திரப்பதிவை ரத்து செய்வதற்கு பதிவுத்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளோம்; அந்த இடம் தொடர்பான விபரங்களைத் தெரிவித்து, அங்கு எந்த விதமான கட்டடம் கட்டுவதற்கும் அனுமதி தர வேண்டாம் என்று மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமங்களுக்கும் எழுதியிருக்கிறோம்; தற்போது அந்த இடத்தில் கட்டடம் கட்ட மின் இணைப்பு தருவதாக தகவலறிந்து, மின் வாரியத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.இந்த முறைகேட்டில் தொடர்புடைய எந்த அதிகாரிக்கும் பதவி உயர்வு வழங்குவதற்கு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை; அவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். போலியாக ஆவணங்களைத் தயாரித்ததாக வாரிய பொறியாளர்கள் சம்பத், ராஜேந்திரன் ஆகியோர் மீது வந்துள்ள புகார் பற்றியும் விசாரணை நடத்தப்படுகிறது; குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.