சென்னை: கலைக்கப்பட்ட மாணவர் காங்கிரசுக்கு, இம்மாதம், 18ம் தேதி முதல், 23ம் தேதி வரை நடக்கும் தேர்தலை புறக்கணிப்பதாக, கார்த்திக் சிதம்பரம் கோஷ்டி அறிவித்துள்ளது. இதனால், காங்கிரஸ் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
தமிழக மாணவர் காங்கிரஸ் தேர்தல், ஏப்ரல், 19ம் தேதி முதல், 23ம் தேதி வரை நடந்தது. இதில், தலைவராக தேர்வு செய்யப்பட்ட மத்திய அமைச்சர் வாசன் கோஷ்டியைச் சேர்ந்த கலையரசன், "மாணவரே இல்லை. மாணவர் என்பதற்கு, அவர் கொடுத்த சான்றுகள் போலி. எனவே, அவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நீக்க வேண்டும்' என, கார்த்திக் சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த ராமநாதன் (துணைத் தலைவர் வேட்பாளர்) உள்ளிட்ட, ஒன்பது பேர், தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்தனர். இப்புகாரைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே, மே, 7ம் தேதி, மாணவர் காங்கிரஸ் தேர்தல் முடிவுகள் திடீரென அறிவிக்கப்பட்டது.
மேலும், கலையரசன் மீது புகார் கொடுத்த, கார்த்திக் சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த ஒன்பது பேரும், மாணவர் காங்கிரசிலிருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதில், ஆத்திரமடைந்த கார்த்திக் சிதம்பரம் கோஷ்டியினர், இப்பிரச்னையை, ராகுல் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இரு கோஷ்டிகளுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு நிலவுவதால், மாணவர் காங்கிரசை கலைத்து ராகுல் உத்தரவிட்டார்.
மறு தேர்தல்:
இப்போது, மாணவர் காங்கிரசுக்கு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம், 18ம் தேதி முதல், 23ம் தேதி வரை தேர்தல் நடக்கிறது. இதற்கு, சென்னையில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகமான, சத்தியமூர்த்தி பவனில், கட்சியின் தேர்தல் அலுவலர்கள் தனுலாகான், மனுஜெயின் ஆகியோர் வேட்பு மனுக்களை, நேற்று முதல் பெற்று வருகின்றனர். இத்தேர்தலில் போட்டியிட, கட்சியிலிருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, கார்த்திக் சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த, ஒன்பது பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கார்த்திக் சிதம்பரம் கோஷ்டியினர், மாணவர் காங்கிரஸ் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து, துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, ராமநாதன் உள்ளிட்ட, ஒன்பது பேர், தேர்தல் புறக்கணிப்புக்கான காரணங்களை பட்டியலிட்டு, வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவர் காங்கிரஸ் தேர்தலில், நியாயமாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற எங்களை, மூன்று மாதங்களுக்குப் பின் பொறுப்பேற்றுக் கொள்ளலாம் என கூறிவிட்டு, திடீரென்று, "சஸ்பெண்ட்' செய்துள்ளனர். அடிப்படை கமிட்டி உறுப்பினர் முதல், கல்லூரி கமிட்டி வரை வெற்றி பெற்ற எங்களை அரசியலிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றனர். முறையற்று நடக்கும் இத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம். மற்றவர்களும் இதுப்பற்றி சிந்திக்க வேண்டுகிறோம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கார்த்திக் சிதம்பரம் கோஷ்டியினரின் தேர்தல் புறக்கணிப்பால், தமிழக காங்கிரசில் பெரும் மோதல் வெடித்துள்ளது. இதனால், தற்போது அறிவித்துள்ள தேர்தலை கைவிட வேண்டும். "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, கார்த்திக் சிதம்பரம் கோஷ்டியினரை, கட்சியில் மீண்டும் சேர்த்து, தேர்தல் நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.