காவிரி மேற்பார்வை குழுவின் ஆலோசனை கூட்டம், நாளை டில்லியில் நடைபெறவுள்ளது. அப்போது, "காவிரியை கழிவு நீர் வாய்க்காலாக மாற்றக் கூடாது' என, தமிழகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மாறியது நிலைமை:
காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் அளித்த, இறுதித் தீர்ப்பை அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், அதை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதால், இடைக்கால ஏற்பாடாக, காவிரி மேற்பார்வை குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவின் கூட்டம், ஜூன் மாதம் நடைபெற்ற போது, அடுத்த கூட்டம், ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்டபடி, இம்மாதம் முதல் வாரத்தில், ஆலோசனை கூட்டத்தை நடத்த முடியவில்லை. மேற்பார்வை குழுவின் தலைவராக இருந்த, மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலர் மாற்றப்பட்டதே இதற்கு காரணம். புதிய செயலர் பொறுப்பேற்று, இவ்விஷயத்தை புரிந்து கொள்ள, அவகாசம் தேவைப்பட்டதால், நாளை, மேற்பார்வை குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த முறை நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், பெரிய அளவில் நிலைமைகள் மாறிவிட்டன. அந்த கூட்டம் நடைபெற்ற போது, தென்மேற்கு பருவமழை துவங்கவில்லை. அதன்பின், மழை துவங்கி, கர்நாடகாவில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பியுள்ளன. அதனால், காவிரியில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
குறைந்தது நீர் வரத்து:
கர்நாடகாவில், கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய நான்கு அணைகளுமே, நிரம்பி வழிகின்றன. இந்த அணைகளின் மொத்த கொள்ளளவு, 114 டி.எம்.சி., இதில், தற்போதைய நிலவரப்படி, 85 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. ஜூன் மாதம், தமிழகத்திற்கு தரவேண்டிய, 10 டி.எம்.சி., தண்ணீரை, தமிழகத்திற்கு கர்நாடகா தந்து விட்டது. இந்த மாதத்தில், 10ம் தேதி வரை, 15 டி.எம்.சி., தண்ணீர் தரப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த இரண்டு நாட்களாக, மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இந்த தகவலை, டில்லியில் உள்ள, தமிழக அரசின் காவிரி செயல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
கால்வாயாகியதா காவிரி?
நாளை நடைபெற உள்ள, காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், சில முக்கிய விஷயங்களை எடுத்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பருவமழை பெய்து, அணைகள் நிரம்பி வழியும் போது, உபரி நீரை தமிழகத்திற்கு, கர்நாடகா திறந்து விடும் நிலையே, சமீப ஆண்டுகளாக காணப்படுகிறது. இந்த ஆண்டும், அதுதான் நடந்திருக்கிறது. மழையின் போது, ஒழுங்காக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மழை நின்றதும், தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதைப் பார்க்கும் போது, தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கான ஒரு கால்வாயாக, காவிரியை கர்நாடக அரசு பயன்படுத்துவது தெளிவாகிறது. இந்த நிலைமையை ஏற்க முடியாது என, ஆலோசனை கூட்டத்தில், தமிழக அரசு, ஆணித்தரமாக வலியுறுத்தும். தமிழகத்தில், குறுவை சாகுபடிக்கு, தண்ணீர் போதுமானதாக இல்லை. தவிர, சம்பா சாகுபடியும் துவங்கி விட்டது. இவற்றுக்கு எல்லாம், தண்ணீர் தேவைப்படுகிறது. கணக்கீட்டின்படி, இந்த மாதத்திற்கு இன்னும், 20 டி.எம்.சி., தண்ணீர், தமிழகத்துக்கு கிடைத்தாக வேண்டும். அடுத்த மாதத்தில், 50 டி.எம்.சி., அளிக்கப்பட வேண்டும். மொத்தம், 70 டி.எம்.சி., தண்ணீரை, தமிழகத்துக்கு கர்நாடகா தர உத்தரவிட வேண்டும் என, மேற்பார்வை குழுவிடம், தமிழக அரசு வலியுறுத்தும். அதுமட்டுமின்றி, பழைய பாக்கியாக, 52 டி.எம்.சி., தண்ணீர், தமிழகத்துக்கு தரப்பட வேண்டியுள்ளது. அதையும், தமிழக அரசு சுட்டிக் காட்டும். மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நிர்வாக ஒழுங்குமுறை ஆணையம் என்ற இரண்டையும், விரைவில் அமைக்க வேண்டும் எனவும், தமிழக அரசு வலியுறுத்தும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.