ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு: அமைச்சர்கள் இருவரும் பதவியேற்றனர்| Dinamalar

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு: அமைச்சர்கள் இருவரும் பதவியேற்றனர்

Added : ஜூலை 13, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு: அமைச்சர்கள் இருவரும் பதவியேற்றனர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை (ஜே.எம்.எம்.,) சேர்ந்தவரும், பழங்குடியினத்தை சேர்ந்தவருமான, ஹேமந்த் சோரன், ஜார்க்கண்டின் புதிய முதல்வராக, நேற்று பதவியேற்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, அர்ஜுன் முண்டா தலைமையிலான, பா.ஜ., - ஜே.எம்.எம்., கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்த இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து, அர்ஜுன் முண்டா அரசு, பதவி விலகியது.


43 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு:

கடந்த ஜனவரியில், சட்டசபை முடக்கி வைக்கப்பட்டு, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஜார்க்கண்டில், மீண்டும் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில், ஜே.எம்.எம்., கட்சி ஈடுபட்டது. அந்த கட்சியின் மூத்த தலைவரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான, சிபுசோரன், இது தொடர்பாக, காங்., தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டது. ஜே.எம். எம்., கட்சி, ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பதாக, காங்கிரஸ் தெரிவித்தது. லாலுவின், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும், ஜே.எம்.எம்., கட்சிக்கு ஆதரவு அளிக்க முன் வந்தது. இதையடுத்து, தனக்கு, 43 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி, ஜார்க்கண்ட் கவர்னர், சையது அகமதுவை சந்தித்து, ஜே.எம்.எம்., கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர், சிபுசோரனின் மகனுமான, ஹேமந்த் சோரன், 37, வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சியை விலக்கி கொள்ளும்படி, மத்திய அரசுக்கு, கவர்னர் பரிந்துரைத்தார். இதையேற்று, நேற்று முன்தினம் இரவு, ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டது. ஆட்சி அமைக்க வரும்படி, ஹேமந்த் சோரனுக்கு, கவர்னர் சையது அகமது அழைப்பு விடுத்தார். இதையடுத்து, ராஞ்சியில், நேற்று, கவர்னர் மாளிகை வளாகத்தில், பதவியேற்பு விழா நடந்தது. ஹேமந்த் சோரன், ஜார்க்கண்டின் புதிய முதல்வராக பதவியேற்றார். அவருக்கு, கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஹேமந்த் சோரனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ராஜேந்திர பிரசாத் சிங், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த, அன்னபூர்ணா தேவி ஆகியோர், அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய, ஹேமந்த் சோரன், ""மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. அவற்றை முடுக்கி விட்டு, மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதே, எங்கள் நோக்கம். சட்டசபை சிறப்பு கூட்டத் தொடரை கூட்டும் படியும், கவர்னருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தந்தையும், மகனும்:

மகாராஷ்டிராவில், சங்கர் ராவ் சவானும், அவரது மகன் அசோக் சவானும், முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். அரியானாவில், தேவிலாலும், அவரது மகன் ஓம்பிரகாஷ் சவுதாலாவும், முதல்வர்களாக இருந்துள்ளனர். ஒடிசாவில், பிஜு பட்நாயக்கை தொடர்ந்து, அவரது மகன் நவீன் பட்நாயக், தற்போது முதல்வராக பதவி வகிக்கிறார். காஷ்மீரில் முன்பு, பரூக் அப்துல்லா முதல்வராக இருந்தார். தற்போது அவர் மகன் ஒமர் அப்துல்லா, முதல்வராக உள்ளார். உ.பி.,யில், முலாயம் சிங், ஏற்கனவே முதல்வராக பதவி வகித்தார். தற்போது, அவரது மகன் அகிலேஷ் யாதவ், முதல்வராக உள்ளார். இந்த பட்டியலில், சிபுசோரனும், அவரது மகன், ஹேமந்த் சோரனும், இணைந்துள்ளனர்.


யார் இந்த ஹேமந்த் சோரன்?

ஜார்க்கண்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள, ஹேமந்த் சோரன், ஜே.எம்.எம்., கட்சி தலைவரும், முன்னாள் முதல்வரும், கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டவருமான, சிபுசோரனின் மகன். பாபுலால் மராண்டி, அர்ஜுன் முண்டா, சிபுசோரன், மது கோடா ஆகியோரை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்ற, பழங்குடியினத்தை சேர்ந்த, ஐந்தாவது முதல்வர் என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது. சிபுசோரனின் மூத்த மகன், துர்கா சோரன் தான், அவரது அரசியல் வாரிசாக செயல்பட்டு வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், துர்கா சோரன், திடீரென இறந்ததை அடுத்து, சிபுசோரன் வாரிசாக, அவரது இளைய மகன், ஹேமந்த் சோரன், முன்நிறுத்தப்பட்டார். தீவிர அரசியலுக்கு வந்த, இரண்டே ஆண்டுகளில், ஜார்க்கண்டின் முதல்வர் பதவி, இவருக்கு கிடைத்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை