சென்னை : இரைப்பை, குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ரங்கபாஷ்யம், 79, இன்று அதிகாலை மாரடைப்பால் இறந்தார். சென்னை, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரங்கபாஷ்யம், ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் இங்கிலாந்தில் உள்ள ராயல் காலேஜ் ஆப் எடின்பரோ மருத்துவ பல்கலைக் கழகத்தில், பகுதி நேர பேராசிரியராக பணியாற்றி வந்தார். இரைப்பை மற்றும் குடல் நோய் மருத்துவ சிகிச்சையில், இந்திய அளவில் முக்கிய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். சென்னை தி.நகரில், ரமணா என்ற பெயரில் கிளினிக் துவங்கி, இரைப்பை மற்றும் குடல் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்தார். இரைப்பை மற்றும் குடல் நோய் மருத்துவ சிகிச்சையில் சிறந்து விளங்கியதற்காக, இவருக்கு, 2012ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. இரண்டு முறை, பி.சி.ராய் விருதும் பெற்றுள்ளார். சென்னை ஆழ்வார் பேட்டை சீதம்மாள் காலனியில் உள்ள வீட்டில், ரங்கபாஷ்யம், நேற்று இரவு படுக்க சென்றார். இன்று காலை, 6:10 மணிக்கு, மனைவி அவரை எழுப்ப சென்றபோது, தூக்கத்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இறந்து போனது தெரிய வந்தது.ரங்கபாஷ்யம் உடலுக்கு மருத்து நிபுணர்கள், உறவினர்கள், அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள், மலர் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு, சித்ரா என்ற மனைவியும், ஓம்பிரகாஷ் என்ற மகனும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் இருவரும் டாக்டர்களாக உள்ளனர்.ரங்கபாஷ்யத்தின் இறுதி சடங்கு, மயிலாப்பூரில் நடந்தது.