ஊட்டி: கொடநாடு எஸ்டேட்டில் தங்கியுள்ள, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, திடீர் பயணமாக முதுமலை சென்றார். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து, நேற்று மதியம், 1:00 மணியளவில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு காரில் கிளம்பினார். வழிநெடுகிலும், அ.தி.மு.க.,வினர் வரவேற்றனர். சில இடங்களில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வழங்கிய பூங்கொத்து, சால்வையை காரில் இருந்தபடியே பெற்றுக்கொண்டார். ஊட்டி, தொட்டபெட்டா பகுதிக்கு, மதியம், 2:00 மணிக்கு வந்த முதல்வர், 10 நிமிடங்கள், அங்கு ஓய்வெடுத்தார். பின், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில், கட்சியினரின் வரவேற்பை ஏற்ற அவர், மனுக்களை பெற்றுக்கொண்டார். மூடப்படும் நிலையில் உள்ள, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை ஊழியர்கள், குடும்பத்தினருடன், சாலையில் கூடி நின்றிருந்தனர். "நலிவடைந்துள்ள பிலிம் தொழிற்சாலையை புனரமைக்க வேண்டும்' என, அவர்கள், கொடுத்த மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர், பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். பின், மசினகுடி வழியாக, மாலை, 4:25 மணிக்கு, முதுமலைக்கு, முதல்வர் ஜெயலலிதா வந்தார். குட்டியானை, காவேரி உட்பட, 18 யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டு, முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. யானைகள் காமாட்சி, மூர்த்தி, முதுமலை ஆகியவற்றுக்கு, வழக்கமாக வழங்கப்படும் உணவுடன் மா, பலா, வாழை பழங்களை, முதல்வர் வழங்கினார். இறுதியாக, அவரால் முன்பு பெயரிடப்பட்ட குட்டியானை, காவேரிக்கு, வெல்லம் கொடுத்தார். அப்போது, அது, திடீரென துள்ளி ஓட முற்பட, முதல்வர் சற்றே அதிர்ந்தார். அதன்பின், நிருபர்களிடம், முதல்வர் ஜெ., கூறுகையில், ""இந்தியாவில், முதுமலை புலிகள் காப்பகம், சிறந்த காப்பகமாக மாறி வருகிறது. இதன் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார். பின், முதுமலை அப்பர் கார்குடி வனப்பகுதிக்கு, ஆய்வுக்காகச் சென்றார். முதல்வர் வருகையையொட்டி, முதுமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பயணம் முடிந்ததும், முதல்வர், நேற்றிரவு கொடநாடு திரும்பினார்.